அறிவோம் தொல்லியல்-3 பயணங்கள் முடிவதில்லை…

0
Business trichy

சென்றவாரம் புகாரின் தொன்சிறப்பினை இலக்கியங்கள், கல்வெட்டுகள் ரீதியாகவும், அதன் நான்கு எல்லைகளை ஆதாரப்பூர்வமாகவும் கண்டோம். இந்த வாரம் தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வுகள் குறித்து காண்போம்…

நிலஅகழாய்வு:
1995ல் ஆரம்பித்து 1998 வரையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாய், பிரியாவிடங்கர் எனும் சைவத்தலத்தின் பின்புறம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாயக்கர் கால சுவரொன்று கிடைத்தது. இதன்தொடர்ச்சியாய் மணிகிராமத்தில் கிழார்வெளி எனுமிடத்தில் படகுத்துறையொன்று கிடைத்தது. இதிலுள்ள ஒவ்வொரு செங்கலின் நீளம் 2 அடி, அகலம் 1,1/2 அடி, கனம் 8 அங்குலம் ஆகும். மேலும் சுடுமண் புத்தர்சிலை, ரோமானிய அலங்கரித்த பானை ஓடுகள் கிடைத்தது. இப்படகுத்துறையின் காலத்தை கி.மு.4 என கணிக்கின்றனர். பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் படகுத்துறை இதுவேயென ஆய்வறிஞர்களின் கருத்து. மூன்றாம் கட்ட அகழாய்வின் பிறகு இப்படகுத்துறை முழுவதும் மீட்கப்பட்டது.

 

மணிகிராமத்திலுள்ள பனைமரத்தடி தோப்பில் சங்ககால கருப்பு சிவப்பு பானையோடுகள், ரோமானிய ரௌலத்தத் பானையோடுகள் முதல் அடுக்கிலேயே கிடைத்தது. மணிகள் செய்யும் மூலப்பொருள் அதிக அளவில் கிடைத்தது. மணிக்கிராமத்தார் எனும் வணிகக்குழுவினர் இங்கிருந்துதான் மணிகளை மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பர். இதன் காலம் கி.பி.2ம் நூற்றாண்டு எனவும் இந்த ஆய்வின் மூலம் அறியமுடிந்தது.

UKR
BG Naidu

1997-98ல் மேலையூர், வானகிரிதோசக்குளம், கீழையூர், சித்தன்காத்தான் கோயில், அய்யனார் திடலில், அடைக்கலாபுரம் முதலிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாகிரிதோசக்குளம் முக்கியத்துவம் பெற்றது. இங்கு பிராகிருதச்சொல் எழுதப்பட்ட பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை கிடைத்தது.

கடலாய்வு:
1981ல் தமிழக தொல்லியல் துறையினர், கோவாவிலுள்ள தேசிய கடலாய்வு நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் 3 மீட்டர் அளவு உயரமுள்ள சில பொருட்கள் கண்டறியப்பட்டது. புகார் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் 70 அடி ஆழத்தில் பண்டையகாவிரியின் வடகரையில் 3 கட்டிடமும், தென்புறத்தில் 2 கட்டிடமும் கண்டுபிடித்தனர். மேலும் கடற்கரையையொட்டி 200 மீ தொலைவில் 7 அடி ஆழத்தில் சில கட்டிடப்பகுதிகள் கண்டுபிடித்தனர். இப்பகுதியிலும் கருப்புசிவப்பு பானையோடுகள் அதிகம் கிடைக்கிறது. வடபகுதியில் கடைக்காட்டின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் கடலின் ஆழப்பகுதியில் ஒரு கல் கொண்டு வரப்பட்டது. இதன் காலம் கி.மு 3 ஆகும்.
புகாரின் அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள் இன்று புகார் அகழாய்வு வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சங்ககால உறைகிணறு நெய்தவாசலில் கிடைத்துள்ளது. சுடுமண் தாய்தெய்வ சுதை, நின்றநிலை சுதை புத்தர் சிலை, கல்லாய் மாறிய கிளிஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருட்களை அவ்வப்போது அந்தந்த பகுதிமக்களால் தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

மணிமேகலை குறிப்பிடும் ‘சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்’ என்ற சொல்லிற்கேற்ப பளிங்கு, பச்சை, கார்லீனியன், கிறிஸ்டல் என்ற வகையான துளையிடப்பட்ட மணிகள் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. வண்ணம் பூசிய சீனப்பீங்கான், அலங்கரிக்கப்பட்டசீன ஜாடி (கி.பி 12-13), இன்னும் சில சீன அலங்காரபொருட்களும் கிடைத்தன. கி.மு நான்கில் ஆரம்பித்து கி.பி 18 வரையிலான பொருட்கள் அகழாய்வு மூலம் வெளிகொணரப்பட்டது.

 

கிட்டத்தட்ட சுமார் 2000 வருடம் மேல் தலைசிறந்த ஒரு வாழ்விடமாகவும், இன்றைய பெருநகரங்களின் வளர்ச்சி, வணிகத்தை 2000 வருடம் முன்பே சிறப்புற விளங்கியதாய், பல வெளிநாட்டறிஞர்களால் புகழப்பட்ட இத்தொன்நகர் இன்று தன் சிறப்புகள் எல்லாவற்றையும் இழந்து அமைதியாய் உறங்குகிறது.
இலக்கியங்களில் ‘கொடுமணம்’ என்று அறியப்பட்ட, சமீபத்தில் தமிழ் எழுத்துகளின் தொன்மையை இன்னும் சில ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்திய ‘கொடுமணல்’ குறித்த சிறப்புகளை வரும் வாரம் முதல் காண்போம்.

 

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.