படுத்துக்கொண்டே ஜெயித்த எம்.ஜி.ஆர்.

0

24 டிசம்பர் 1984 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் எம்.ஜி.ஆர் இல்லாமலே தேர்தலா என்று தொண்டர்கள் குழம்பிய நேரத்தில் அ.தி.மு.க. தலைமையிடத்திலிருந்து உடனடியாக விளக்கம் வந்தது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் போட்டியிடுகிறார் என்றும், மூத்த அமைச்சர் ராஜாராமின் விருப்பப்படியே ஆண்டிபட்டி தொகுதி தேர்வு செய்யப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். போட்டியிடுவார் சரி. அவரில்லாமல் தேர்தலை சந்திப்பது அவ்வளவு எளிதான விசயமில்லை. போதாக்குறைக்கு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்றும், அவருடைய உடல் ஐஸ்பெட்டியில் பத்திரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தி.மு.க.வினரால் விசமத்தனமான பிரச்சாரம் உலவிக்கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் இல்லாத குறையை ஜெயலலிதாவை வைத்து சமாளிக்கலாம் என்றனர் சில மூத்த தலைவர்களும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான உயர் அதிகாரிகளும் அதைத்தான் யோசனையாக சொன்னார்கள்.

 

ஆனால், ஆர்.எம்.வீரப்பன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர் வசம்தான் அப்போது எல்லா பொறுப்புகளும் இருந்தன. அதாவது, தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு பிரச்சாரம் எல்லாம் ஆர்.எம்.வீ.யின் பொறுப்பு. அதிமுக-காங். கூட்டணிக்கு இடையே தொகுதி பங்கீட்டில் ஆர்.எம்.வீயின் கையே ஓங்கி இருந்தது. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை காங்.கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு. அதிமுகவிற்கு ஒரு பங்கு. சட்டமன்றத்தை பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு அதிமுகவுக்கு. காங்.கட்சிக்கு ஒரு பங்கு. இப்படித்தான் இந்த இரு கட்சிகளின் கூட்டணி உருவாகி இருந்தது. ஆதலால் தான் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வேண்டாம் என்று ஆர்.எம்.வீ.ஆல் சொல்ல முடிந்தது.

 

ஆனால் ஜெயலலிதா வேறுமாதிரி சிந்தித்தார். திடுதிப்பென ஒருநாள் ஆர்.எம்.வீரப்பனின் வீட்டிற்கு நேரில் சென்றார் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். நெகிழ்ந்துபோனார் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா களத்தில் இறங்கி மின்னல் வேகமாக பிரச்சாரம் செய்தார்.

வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடியது. எம்.ஜி.ஆரின் சாதனைகளையும், உடல்நிலை குணமடைந்து வருவதையும் சொல்லிப் பரவசப்பட்டார். அவருடைய பிரச்சாரத்திற்கு பலன் கிடைத்திருப்பதாக பத்திரிக்கைகள் எழுதின. எம்.ஜி.ஆரின் இடத்தை எப்படி ஈடுசெய்வது என யோசித்துக்கொண்டிருந்த போது தான், ஆர்.எம்.வீரப்பனுக்கும் காவல்த்துறை அதிகாரி மோகன்தாசுக்கும் அந்த யோசனை வந்தது.

எம்.ஜி.ஆர் இல்லாத குறையை போக்க வேண்டும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், வாக்காளர்களையும் வசப்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் சாத்தியப்படுத்த ஒரே வழி வீடியோ. அதாவது ப்ருக்ளின் மருத்துவமனையில் வெற்றிகரமான அறுவைசிகிக்சை செய்யப்பட்டு மெல்ல மெல்ல குணம் அடைந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் தற்போதைய நிலையை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்துவிடலாம் என்று அதை தமிழக வாக்காள மக்களிடம் போட்டுக் காண்பித்தால் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று. கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத்தான் 1967ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது. அப்போது போஸ்டர். இப்போது வீடியோ. இதுதான் வித்தியாசம்.

food

ஆனால் ப்ருக்ளீன் நிர்வாகம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கேமராவில் இருந்து வெளியாகும் கதிர்கள் எம்.ஜி.ஆரின் உடல்நிலையை பாதிக்கக்கூடும் என்று காரணம் சொல்லிவிட்டார்கள். ஆனால் வீடியோ எடுத்தே தீருவது என்று அஇஅதிமுக தீவிரமாக இருந்தது. டெல்லியை தொடர்புகொண்டு உதவி கேட்டார்கள். மத்திய வெளியுறவுத்துறை மூலம் அமெரிக்காவிற்கான இந்திய துணைத்தூதரை தொடர்புகொண்டு வீடியோவின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. அதன்பிறகு ப்ருக்ளீன் மருத்துவமனை நிர்வாகம் சம்மதித்து முதலில் புகைப்படங்கள் மட்டும் எடுக்கப்பட்டது. செய்தியாளர்களின் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். கைவசம் வைத்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை செய்தியாளர்களிடம் காட்டினார். அவற்றை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். அந்தப்படங்களில் எம்.ஜி.ஆர். சாப்பிட்டார், இரட்டை விரலை காட்டினார். மனைவி ஜானகியுடன் அமர்ந்திருந்தார். மறுநாளே அந்தப்படங்கள் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தன.

 

எம்.ஜி.ஆர் மீண்டு வந்துவிட்டார் என்று மக்கள் ஆனந்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அடுத்த சிலநாட்களில் எம்.ஜி.ஆர் நடக்கத்தொடங்கினார் என்ற செய்தி கிடைத்தது. உடனடியாக எம்.ஜி.ஆரின் ப்ருக்ளீன் மருத்துவமனைக்காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. மருத்துவர் பழனி பெரியசாமி உதவியுடன் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சிகள் சென்னை வந்தபோது அவற்றை பார்க்க முடியவில்லை. காரணம் தொழில்நுட்ப பிரச்னை. அதை சரி செய்ய வேண்டும் என்றால் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு எந்திரம் தேவை. படத்தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் நண்பர் ஒருவரிடம் அந்த எந்திரம் இருப்பதாக கேள்விப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் சரவணனின் மகன் குகனை அனுப்பி அந்த வீடியோ டேப்பில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்து வரச்சொன்னார். இப்போது வீடியோ டேப் தயார். வெறும் காட்சிகள் மட்டும் இருந்தால், மக்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. நோக்கம் சிதறிவிடும். உருக்கமான வார்த்தைகளைக் கொண்டு குரலை வீடியோ காட்சிகளின் பின்னணியில் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார் ஆர்.எம்.வீரப்பன்.

குரல் என்றதும் வீரப்பனுக்கு உடனடியாக நினைவுக்கு வந்த பெயர் வலம்புரிஜான். வலம்புரிஜான் வரவழைக்கப்பட்டார். என்னென்ன பேசவேண்டும் என்று அவசர கதியில் முடிவு செய்யப்பட்டு வார்த்தை சித்தர் என்ற அடையாளத்தைக் கொண்ட வலம்புரிஜானின் குரல் பின்னணியில் சேர்க்கப்பட்டது. முக்கியமாக அந்த ஒரு வாக்கியத்தை சொல்ல வேண்டும். முன்னாடி உலர்ந்து போய்விட்டது என்று சொல்லப்பட்ட கரத்தால் நம்முடைய தலைவர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் இயக்குனர் எஸ்.வி.முத்துராமனின் உதவியுடன் இந்திராகாந்தியின் இறுதி ஊர்வலக்காட்சியையும் பக்குவமாக இணைத்து 35எம்எம் படச்சுருளாக மாற்றினார். “வெற்றித்திருமகன் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோ மக்கள் சமுத்திரத்தில் கரைந்தது.

 

எம்.ஜி.ஆர் இருக்கிறார், உயிருடன் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார், விரைவில் வருவார் என்று பட்டவர்த்தனமாக சொன்னது அந்த வீடியோ. இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் சளைக்காமல் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். தன்னுடைய கூட்டணியை வெகுவாக பலப்படுத்தியிருந்தார்.

ஜனதா கட்சி, மா.கம்யூ., உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாடு பார்வர்டு பிளாக், தமிழ்நாடு காமராஜ் காங்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என பலமான அணிவகுப்பாக அமைத்திருந்தார். ஆனால் “வெற்றித்திருமகன் வீடியோவுக்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை.” 133 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது அதிமுக அதன் கூட்டணி கட்சியான இ.காங்.-க்கு 62 தொகுதிகள் எஞ்சி இருந்தவற்றில் 20ஐ மட்டுமே திமுக வெல்ல முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் வீடியோ வினையாற்றி வெற்றியை ஈட்டியது. ஆண்டிபட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றிருந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யக்கூட வரவில்லை.

அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி முன்னிலையில் எம்.ஜி.ஆர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் கையெழுத்திட்ட வேட்புமனு அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் அவர் கால்படவில்லை. ஆனாலும் வெற்றி மிகப்பெரிய வெற்றி. படுத்துக்கொண்டே ஜெயித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

-ஆர்.பூபேஷ்

gif 4

Leave A Reply

Your email address will not be published.