ஊடகங்கள்: புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள் !

0
Full Page

ஊடகங்கள்: ‘புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள்’

 

இதழியல் பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு ஊடகம் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. இதழியலின் பணிகளை ஊடகங்களின் பணியாகவும் பார்க்கலாம். அவை : 1. அறிவித்தல் 2. அறிவுறுத்தல் 3. மகிழ்வித்தல் என்பவையாகும். தற்போது ஊடகங்கள் அறிவித்தல் பணியைக்கூடச் சரிவரச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. அறிவுறுத்தல் பணியை அரிதினும் அரிதாகவே ஊடகங்கள் செய்துவருகின்றன.

ஆட்சியாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் என்பது உரைப்பதே கிடையாது. எனினும் ஊடகங்கள் சமூக அக்கறையுடன் அறிவித்தல் பணியையும் அறிவுறுத்தல் பணியைச் செய்யவேண்டும். இல்லையென்றால் இந்தச் சமூகத்தில் நிகழும் அறத்திற்குப் புறம்பாக நடைபெறும் அனைத்து அநீதிகளைத் தட்டி கேட்ட யாருமில்லை என்றால் அநீதிகள் தலைவிரித்தாடும் என்பதைத் தற்போது ஊடகங்கள் மறந்து செயல்படுகின்றன. ஊடகங்களின் பணி என்பது பரபரப்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டுத் தங்களின் ஆதரவு நிலையை உயர்த்திக் கொண்டிருப்பதன் இரகசியத்தை உணரமுடிகின்றது. இதற்குக் காரணம் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் இல்லை. ஊடக முதலாளிகள்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கடந்த வாரத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டம் நடைபெற்றது. போராடியவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து, 7ஆவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை நீக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் போராடுவோரிடமிருந்து பெறப்பட்ட 58ஆயிரம் கோடி எங்கே இருக்கின்றது? எனத் தங்களின் கோரிக்கையாக முன்வைத்தார்கள். மேலும் நாங்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். ஆனால் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பேசியவர்களில் ஆசிரியர் சங்கம் தவிர்த்து, அரசு ஆதரவாளர்கள், சட்டப்பஞ்சாயத்து, பிஜேபி, பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஊதிய உயர்வு என்றே பேசினார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் ஊடக விவாதங்களின் நெறியாளர்கள் அனைவரும் எரியும் தீயில் ‘பெட்ரோலை’ வார்ப்பதுபோல அவர்கள் பங்குக்கு, போராட்டக்காரர்களைப் பார்த்து, உங்களுக்கு இந்தச் சம்பளம் போதவில்லையா, தனியார் நிறுவனங்களைப் பாருங்கள் என்று அரசுக்கு ஆதரவாக ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? இதில் அரசை எதிர்க்கும் தொலைக்காட்சியில் கூட அரசுக்கு ஆதரவு மனநிலையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன என்பது வியப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல ஊடகங்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் படிக்காமலும், படித்திருந்தால் உள்நோக்கத்தோடு விவாதங்களை நடத்தின. அப்படியானால் ஊடகங்களில் நடுநிலைமை என்பதே இல்லை என்பது உறுதிபட தெரிந்தது.

Half page

ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட போராட்டம் குறித்த அவதூறுகள் சமூக ஊடகங்களில் வலம்வர ஊடகங்களின் செயல்பாடுகளே முக்கியப் பங்கு வகித்தது கொடுமையே. எந்த ஆசிரியர்களிடம் படித்தார்களோ அவர்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொள்ளாமல் ஆசிரியர்களுக்கான எதிர் மனநிலையில் மாணவர்கள் கேலி செய்து களமாடியது கொடுமையின் உச்சம் என்றே துணிந்து கூறலாம். ஊடகத்தால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும் என்பதை தற்போது உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆசிரியர் போராட்டக் காலத்தில் சென்னையில் செய்தியாளரைச் சந்திக்கும்போது, செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைக்கிறனர். டிடிவி தினகரன், ‘என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அப்புறம் உங்களின் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். இப்போது நான் வீட்டிலிருந்து வருகிறேன்(ஒரு தனியார் தொலைக்காட்சியைப்பார்த்து). உங்கள் தொலைக்காட்சியில் 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது. 95% ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டார்கள் என்றால் அரசு ஏன் பள்ளிகளைத் திறக்கவில்லை. ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப ஏன் அவகாசம் வழங்கிக் கொண்டிருக்கின்றது? 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள் என்று நீங்கள் செய்தி வெளியிடுகின்றீர்கள். எப்படி அந்தச் செய்தி சேகரித்தீர்கள். அதற்கான தரவுகள் உங்களிடம் உள்ளதா?’ என்றவுடன் அந்தத் தொலைக்காட்சிச் செய்தியாளர், ‘அரசு சொன்னது நாங்கள் வெளியிட்டோம்’ என்றார். உடனே டிடிவி, ‘சரி. 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று அரசு தகவல் என்று போடாமல், நீங்களே சேகரித்ததுபோல் செய்திகளை வெளியிடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. நான் சொல்கிறேன் 50% ஆசிரியர் போராட்டக் களத்தில்தான் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் சேகரித்த செய்தியைப் போல வெளியிடுவீர்களா? அப்ப என்கிட்டே ஆதாரம் கேட்பீர்கள். அரசு சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு செய்தியை வெளியிடுவீர்கள். செய்தி உண்மை என்பதை ஊடகங்கள் ஆராயக்கூடாதா? ஒவ்வொரு ஊடகத்திற்கும் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் சென்றார்கள் என்பதை நீங்கள் கணக்கெடுக்க முடியாதா? அந்த உண்மைச் செய்தியை வெளியிடுங்கள். எந்தச் செய்தியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து, உண்மைத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அரசுக்கு ஆதரவாக ஜல்ரா போடுவதற்காக ஊடகங்கள்’ என்று தொடர்ந்து டிடிவி எழுப்பி வினாக்களுக்குப் பதில் கூறமுடியாது ஊடகங்கள் தலைகுனிந்து கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

1998ஆம் ஆண்டு, சென்னையில் சரிகஷா என்னும் எத்திராஜ் கல்லூரி மாணவி, கல்லூரிச் செல்ல ஆட்டோவிலிருந்து இறங்குகிறார். ஒரு இளைஞன் எதிர்பாராத நேரத்தில் அந்தப் பெண்ணின் முகத்தில் பாக்கெட் தண்ணீரைப் பிய்ச்சி அடிக்கிறான். நிலைகுலைந்து அந்தப் பெண் கல்லூரி வாசலில் கீழே விழுகிறாள். பின் பக்க மண்டையில் பலத்த காயம். உடனே அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய இளைஞனைக் காவல்துறை கைது செய்கிறது. நினைவிழந்த அந்த மாணவி அடுத்தநாள் இறந்துபோகிறார். அவரின் செய்தியை சுமார் 15 நிமிடங்கள் எல்லா தொலைக்காட்சிகளும் நேரலையாக செய்திகளை ஒளிபரப்பின. செய்திகளை விரிவாக எடுத்துரைத்தன. எல்லா ஊடகங்களும் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. மாணவி இறந்த அடுத்தநாள் சட்டமன்றத்தின் அடுத்தநாள் சிறப்புக் கூட்டம் உடனே கூட்டப்பட்டது. பெண்களைப் பாலியியல் சீண்டல் செய்பவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை என்றும் அடுத்தமுறையும் கைது செய்யப்பட்டால் இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவும் மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கவும் ஊடகங்கள் ஆற்றியப் பணியைப் பாராட்டாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊடகங்கள் மகத்தான சேவை செய்தன என்பது இறந்தகாலமே என்று தற்போது எண்ணிட வேண்டியிருக்கிறது.

 

கடந்த வாரத்தில் தூத்துக்குடி தாமிர ஆலை வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு மனுதாரராக உள்ள வைகோ உச்சநீதி மன்றத்தின் வழக்கில் கலந்துகொள்ளத் தில்லி செல்கிறார். வைகோவின் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவு செய்தியைக் கேட்டு அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு உச்சநீதி மன்றம் செல்கிறார். வழக்கின் விசாரணை பிற்பகலில்தான் வருகிறது என்பதை அறிந்து வைகோ மீண்டும் ஜார்ஜ் பெர்ன்ணாடாஸ் இல்லம் சென்று இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேகமாக விரைகிறார். ஊடகச் செய்தியாளர்கள் வைகோவிடம் பேட்டி கேட்கிறார்கள். நிலைமையை எடுத்துக்கூறுகிறார். உடனே ஒரு செய்தியாளர், ‘மதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்தான் என்று சொல்கிறார்கள். உங்கள் பதில்’ என்ற கேட்டவுடன் வைகோ பதில் சொல்லாமல் இறுதி மரியாதை செலுத்தச் சென்றுவிடுகிறார். வைகோ செய்தியாளர்களைப் புறக்கணித்தார் என்ற செய்தி வேகமாகப் பரவுகின்றது. தில்லி முழுக்க ஊடகவியலாளர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. பிற்பகல் நீதிமன்ற விசாரணை முடிந்து வைகோ வெளியே வருகிறார். அப்போதுதான் தெரிகிறது வைகோவை ஊடகங்கள் புறக்கணித்துள்ளன என்பது. உடனே தில்லியில் உள்ள தன் ஊடகத்துறை நண்பருக்கு வெங்கட்ராமனுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அவர் தொடர்பில் வரவில்லை. இரவு முழுவதும் தொடர்பில் வரவில்லை.

அடுத்தநாளும் உச்சநீதி மன்ற விசாரணை முடிந்து வைகோ வெளியே வருகிறார். வைகோ புறக்கணிப்பை ஊடகங்கள் கைவிட்டு, பேட்டி எடுக்கத் தொடங்கின. 25 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற புகழைப் பெற்றவர் செய்தியாளர்களிடம் உடைந்த குரலில் பேசத் தொடங்கினார். ‘உங்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நேற்று நான் உங்களைப் புறக்கணிக்கவில்லை. என் உயிர் நண்பருக்கு இறுதியாக அஞ்சலி செலுத்திவிடவேண்டும் என்றுதான் நான் விரைந்து கொண்டிருந்தேன். இடைமறித்துக் கேள்வி கேட்டார் ஒருவர். அது அரசியல் பரபரப்பு சார்ந்தாக இருந்தது. மேலும் தாமிர ஆலைத் தொடர்பான வழக்குக்கான நான் வந்திருக்கிறேன். அது குறித்து எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. பரபரப்பான கேள்வி நான் பதில் சொல்லி, இந்த வழக்கின் செய்தி வெளிவராமல் போகும். நான் தாமிர ஆலை வழக்குப் பற்றி பேசினால் தொலைக்காட்சிகள் 2-3 நிமிடங்கள்தான் ஒளிபரப்பும். தமிழ்நாட்டு அச்சு ஊடகங்களில் இரு இதழ்கள்தான் என் செய்தியை வெளியிடும் மற்ற இதழ்கள் வெளியிடாது. ஊடகங்களில் எனக்குக் கிடைக்கும் சிறிய அளவு இடத்தைப் பரபரப்பான செய்திகளுக்குப் பதில் சொல்லி வீணாக்க விரும்பவில்லை. தூத்துக்குடியில் தாமிர ஆலையை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆலையைத் திறக்க நிர்வாகம் பல வகையில் முயற்சி செய்து வருகின்றது. அதை நான் தடுத்து நிறுத்தி வருகிறேன். இன்று எனக்குப் பேச நீதிபதி வாய்ப்பளிக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் ஆலை நிர்வாக வழக்குரைஞர் எல்லா நேரங்களையும் எடுத்துக் கொண்டுவிட்டார். வழக்கு பிப்.8ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது எனக்கு வாதாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. நான் வாதாடித் தாமிர ஆலைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவில்லை என்றால் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது. நான் வாதாடினால் தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்குச் சாதகமாகக் கிடைக்கலாம். இந்த 3 நாள்களும் மக்களின் நலனுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த வேளையில் திமுக கூட்டணியில் நீடிப்பேனா? என்றால் நான் எப்படிப் பதில் சொல்லமுடியும்? நான் என் நிலையை விளக்கி விட்டேன். இப்போது கேளுங்கள் எல்லாவித அரசியல் சார்ந்த பரபரப்பான கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். ஒவ்வொரு செய்தியாளர்களையும் பார்த்துக் கேளுங்கள்… கேளுங்கள் என்று வைகோ கூறினார். எல்லாச் செய்தியாளர்களும் ‘நலங்கெடப் புழுதியில் எறிந்த நல்லதோர் வீணையாக’ தலைக் கவிழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.

தற்போதைய சூழலில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கானதாக இல்லை. அது பெரும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் கடமையைச் சரிவரச் செய்துகொண்டிருக்கின்றது. இந்தச் சர்வாதிகாரச் சூழலில் மக்களின் நலனுக்காக அறிவித்தல், அறிவுறுத்தல் பணியை ஊடகங்கள் சரிவரச் செய்தால் செத்து கொண்டிருக்கும் மக்கள் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது. மக்கள் உயிர்வாழ ஊடகங்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். முதலாளிகள் ஊடகங்களின் போக்கு, கோடியில் வருமானம் பார்ப்பது என்றால் பத்திரிக்கையாளராகவே வாழ்ந்த ஞாநியைப் போன்று ஊடகங்களிலிருந்து விலகி, மக்களுக்கான ஊடகங்களை உயிர்ப்பித்து எழுப்புங்கள். அப்படி எழுப்பும் உங்களின் ஊடகங்களுக்கு மக்கள் துணையாக இருப்பார்கள். ஊடகங்கள் களத்தில் நாளும் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் பக்கமா? போராட்டங்களை ஒடுக்கும் அரசு மற்றும் பெரும் முதலாளிகளின் பக்கமா? என்பதை விட ஊடகத் துறை நண்பர்களே நீங்கள் மக்கள் பக்கமா? உங்களின் முதலாளியின் பக்கமா? பதில் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. இனியும் மௌனம் காக்கவேண்டாம். உங்களின் மௌனத்தைக் கலைத்துக் குரலற்றவர்களின் குரலாய் நீங்கள் களத்தில் நிற்கவேண்டும். அதுதான் உங்களுக்குப் பெருமை. பெருமை காப்பாற்றுவீர்கள் என் நம்பிக்கை எல்லார் மனதிலும் துளிர்க்கும் வாய்ப்பை ஊடகவியலாளர்கள் மக்களுக்கு வழங்கவேண்டும்.

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.