அன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்

0
Business trichy

அன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்

விழுங்கிவிட முடியாதபடி கசக்கிறது உண்மை. தொலைபேசி நிறுவனங்கள், வரம்பற்ற தரவிறக்கத்தை அறிமுகப்படுத்திய பின்னர், மாணவர்களின் பிரிக்கப்பட முடியாத அங்கமாகவே மாறிவிட்டன செல்போன்கள். சில மாணவர்களின் கைகளில் விளையாட்டுப் பொருளாக, பல மாணவர்களுக்குச் சினிமாவாக, இன்னும் சிலருக்குச் சில்லறை விஷயங்களுக்காக. எத்தனை மாணவர்கள் படிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள்? ஏமாற்றம்தான். தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும்கூட மொபைல் ஒரு தொந்தரவு என்கிறபோது, வகுப்பறைக்கு மட்டும் அது வரப்பிரசாதமா என்ன?

மாணவர்களின் கவனச் சிதறல்களை மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் கல்லூரி ஆசிரியர்கள். அவர்களின் தவறுகளைச் சில சமயங்களில் கண்டித்தும், சில சமயங்களில் கண்டிக்காமலும் மிகமிக எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Kavi furniture

பிரமாதமாய்ப் படித்து ஊர் மெச்சும்படி நடந்துகொள்வார்கள் என்ற பெற்றோரின் கனவுகள் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கின்றன. இணையத்தில் எதையேனும் தேடி அலுத்து, மீதமிருக்கிற நேரத்தில்தான் பாட நூல்களில் நுனிப்புல் மேய்கிறார்கள். தேர்வில் எதையோ எழுதிவைக்க, ஆசிரியர்களும் அவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் போட, கடைசியில் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி. ஆனால், அதனால் யாருக்கு என்ன பயன்?

‘செல்போனைக் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் வெச்சிட்டுப் படிச்சாதான் என்ன?’ – கேட்கும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும் பதில் ‘படித்துக்கொண்டிருக்கிறேன்’ என்பதாகத்தான் இருக்கிறது. நள்ளிரவில் செல்போனுக்கு விடை கொடுப்பதுகூடத் தூங்குவதற்காகவோ, பெற்றோர்களின் திட்டுக்குப் பயந்தோ அல்ல… செல்போன் பேட்டரியின் நன்மை கருதியே! ஆசிரியர்களும் பெற்றோர்களும் கையறு நிலையில் நிற்க, மாணவர்களோ கையில் மொபைலும், சார்ஜரும், பவர் பேங்க்குமாய் கனவுலகில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். செல் போன் நிறுவனங்கள் தொடங்கிவைத்திருக்கும் நுகர்வுப் பசியில் முதல் பலி மாணவர்களே.

MDMK

‘ஆபீஸ் முன்னாடி வைபை ஸ்பீடா இருக்கும், டவுன்லோடு ஸ்பீடா இருக்கும்’ என்கிற வார்த்தைகளை மாணவர்களிடமிருந்து அடிக்கடி கேட்க முடிகிறது.

வகுப்பறையும் வகுப்பும் அவர்களுக்கு ஒரு குறுக்கீடு. செல்போன் பயன்படுத்தும் நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மொபைல் லைஃப், பேட்டரி லைஃப், மெமரி பவர், ரேம் ஸ்பீடு இவைதான் மாணவர்கள் அதிகம் புழங்கும் வார்த்தைகள். அவர்களின் கையிலிருப்பது சந்தையின் மிக உன்னதமான செல்போனாக இருக்கலாம். ஆனால், அதைவிடவும் உன்னதமானது வாழ்க்கை. பிரமையிலிருந்து மீண்டெழுங்கள் மாணவர்களே, காலடியில் நழுவிக்கொண்டிருக்கிறது காலம்.

– ஆர்.வனிதா,

ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்

நன்றி தி இந்து

Pranav city

Leave A Reply

Your email address will not be published.