அதிமுகவுடன் பாமக நெருங்குவது ஏன்? குரு குடும்பம் கிளப்பும் சந்தேகங்கள்!

0
1

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குருவின் பிறந்தநாள் பிப்ரவரி 1ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

ஆனால், அண்மையில் குருவின் மகள் விருதாம்பிகையும் குருவின் சகோதரி மகன் மனோஜும் திருமணம் செய்துகொண்டதை அடுத்து நடந்த சம்பவங்களால் அவர்கள் பாமகவைக் கடுமையாகத் தாக்கி பேட்டி கொடுத்தனர். இந்த விவகாரத்தில் குருவின் மகன் கனலரசுவும் பாமகவுக்கு எதிராகவே இருக்கிறார். இந்தப் பின்னணியில் காடுவெட்டி கிராமத்தில் குருவின் குடும்பம் தனியாக பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டது.

 

2

இதனால், இரு தரப்பையும் கடந்த 24ஆம் தேதி அழைத்து அமைதிக் கூட்டம் நடத்தினார் உடையார்பாளையம் கோட்டாட்சியர். இதில் குருவின் பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மட்டும் அவரது நினைவிடத்தில் பிப்ரவரி 1 காலை 9 மணி முதல் 10 மணி வரை மலர் தூவி மரியாதை செலுத்த அனுமதி அளித்துள்ளார். வேறு யாரும் மாவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காடுவெட்டி கிராமத்தில் குருவின் பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தல், பதாகை அமைத்தல், அன்னதானம் வழங்குதல், மேடை அமைத்து ஒலிபெருக்கி மூலம் பேசுதல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி, “குரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம் ஆகும். ஆனால், நினைவிடத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர, மற்றவர்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறுவது முறையாக இருக்காது. அதுமட்டுமின்றி, குரு நினைவிடத்தில் பாமகவினர் அஞ்சலி செலுத்த செல்லும்பட்சத்தில், அதைக் காரணமாக வைத்து வன்முறையைத் தூண்ட சில சக்திகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதால், அதற்கு எந்த வகையிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் இடம் கொடுக்கக் கூடாது.

 

4

அதேநேரத்தில் ஜெ.குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து ஊர்களிலும் அவரது உருவப்படத்தை வைத்து குருவுக்கு அமைதியாகவும் யாருக்கும் இடைஞ்சல் வராத அளவுக்கு மலர் அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த பிறந்தநாள் பின்னணியில் இன்னொரு விஷயமும் விவாதிக்கப்படுகிறது.
“அதிமுக கூட்டணியை நோக்கி பாமக போய்க் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கூட்டணி பற்றிய வியூகங்களுக்கு அவ்வப்போது டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தாலும் அதிமுகவுடனான பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் இருக்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து பாமக போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் தோற்றது. அதிமுகவில் இருக்கும் வன்னியர் இன அமைச்சர்கள் தத்தமது பகுதிகளில் பாமக மீண்டும் தலையெடுப்பதை விரும்பவில்லை. இதையெல்லாம் அந்தந்த மாவட்ட பாமக நிர்வாகிகளே அறிந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை.

ஆனாலும், பாமக ஏன் இந்தக் கூட்டணியில் ஆர்வமாக இருக்கிறது என்று விசாரித்தால் எல்லாம் தேர்தல் செலவுப் பிரச்சினைதான். திமுக, பாமக இரண்டுமே அதிகாரத்தில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிமுகதான் கடந்த எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது. இதனால் அதிமுகவிடம் இயல்பாகவே செலவு செய்யும் திறன் அதிகமாக உள்ளது.

திமுகவோடு கூட்டணி அமைத்தால் தேர்தல் செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி ஏற்பட்டிருக்கிறது. திமுகவும் பொருளாதார ரீதியாக உதவாது. அதேநேரம் தன்னோடு கூட்டணி வைத்தால் தேர்தல் செலவுகளுக்குத் தாராளமாக உதவுவதாக அதிமுக சொல்லியதன் பேரில்தான், பாமக அதிமுகவோடு கூட்டணிக்குத் தயாராகியுள்ளது.

தேர்தல் செலவு பற்றி இப்படித் திட்டமிட்டும் பாமக குருவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு செய்தது? இப்போது அதிமுகவிடம் என்ன உதவிகளைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்கத் தயாராகிறது என்பதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும்” என்ற குரல் குருவின் குடும்பத்தினரிடம் இருந்தே எழுந்திருக்கிறது. குருவின் பிறந்த நாளில் இந்தக் கேள்வி வெளிப்படையாக எழுப்பப்படலாம்” என்கிறார்கள் வட மாவட்ட பாமக பிரமுகர்களே!

3

Leave A Reply

Your email address will not be published.