கல்லணையை நோக்கி படையெடுக்கும் மணல் கொள்ளையர்கள்

0
1

 

தமிழகத்தைப்பொறுத்தவரையில் மணல் கொள்ளை என்பது எந்த அரசாலும் தடுக்கமுடியாத அளவிற்கு ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறது. அதுவும்,  உலகளவில் விவசாய உற்பத்திக்கும் அரிசி ஏற்றுமதிக்கும் முன்னுதாரணமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெற்ற மணல் திருட்டின் மூலம் தென்இந்தியாவில் பல்வேறு கட்டிடங்கள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது, அந்த அளவிற்கு மணல் கொள்ளையானது நடைபெற்றது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வராதது மணல் கொள்ளையர்களுக்கு வசதியாகபோனது. இந்நிலையில், மணல் கொள்ளையைத்தடுத்து நிறுத்தும் பொருட்டு மணல் குவாரிகளை அரசே திறந்து ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல்களை வரையறைக்கு உட்படுத்தியது. இதனால், சற்றே ஆட்டம் கண்டது மணல் கொள்ளையர்களின் தொழில். மேலும், கடந்த ஜூலை மாதம் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மணல் திருட்டில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், மனம்தளராத மணல் கொள்ளையர்கள் காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள், கால்வாய்களில் இருந்து மணலை எடுக்க ஆரம்பித்தனர்.

2

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உய்யங்கொண்டான், கோரையாறு உள்ளிட்ட பாசனத்திற்கு பிரதானமாக இருக்கும் பல கிளைவாய்க்கால்களில் இருந்து மணல் தொடர்ந்து எடுக்கப்பட்டு தான் இருக்கின்றன. இதைத்தடுக்கச்செல்லும் அதிகாரிகளுக்கும் அடி, உதை, கொலைமிரட்டல் உள்ளிட்டவைகளும் நிகழ்ந்த வண்ணமாகவே உள்ளது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதாலும், கொள்ளிடம் பாலம் மற்றும் முக்கொம்பு மேலணை உள்ளிட்டவை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளையின் காரணமாக இடிந்து விழுந்ததாலும் முக்கொம்புவில் இருந்து குடமுருட்டி வரையில் எங்கும் மணல் அள்ளமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதுமட்டுமின்றி, வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்திருப்பதால் என்ன செய்வது என்று தெரியாத மணல் கொள்ளையர்கள் கல்லணையை நோக்கி படையெடுக்கத்தொடங்கியுள்ளனர்.

பந்தோபஸ்துடன் நடைபெறும் மணல் கொள்ளை

4

சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லணை செல்லும் வழியில் மாட்டுவண்டிகளில் நடைபெறும் மணல் கொள்ளை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. மாட்டுவண்டி நடுவே செல்ல முன்னும், பின்னும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் பாதையில் யாரேனும் இருக்கின்றார்களா, அப்படி இருந்தாலும் அவர்களால் மணல் கொள்ளைக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று டார்ச்லைட் அடித்து பார்த்தபடியே அந்த மாட்டுவண்டிக்கு பந்தோபஸ்து கொடுத்துச்செல்கின்றனர். இது போன்ற மணல் திருடர்கள் மணலுக்காக எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடுவார்கள் என்பது மறுக்கமுடியாததே.

கல்லணையை நோக்கி செல்ல காரணம் என்ன?

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லணை செல்லும் வழியில் பாதி தொலைவு வரையிலேயே திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்டு உள்ளது. மீதி தொலைவு தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. தஞ்சை மாவட்டத்தின் ஆரம்பமாகும் இடம் என்பதாலும், காவல் நிலையம் அங்கிருந்து நீண்ட தூரம் என்பதாலும் காவல் துறையினரின் கெடுபிடிகள் குறைவாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, இரவு நேரத்தில் கல்லணை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் யாருமே இருப்பதில்லை. இதுவே இது போன்ற மணல் கொள்ளையர்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஆற்றில் தண்ணீர் வந்த பிறகும் கூட, கல்லணை அலுவலகத்திலுமே அதிகாரிகள் இல்லாமல் இருப்பது, இது போன்ற செயல்கள் மணல் கொள்ளைகளை ஊக்குவிக்கவே செய்யும்.

விளைவு என்ன என்று தெரிந்தும் தொடர்ந்து மணல் அள்ளியதன் விளைவாக முக்கொம்பு மேலணையை இன்று இழந்துள்ளோம். தற்போது, கல்லணையை நோக்கி படையெடுக்கும் மணல் கொள்ளையர்களால் கல்லணைக்கு அபாயம் ஏற்பட்டால் அதன் விளைவு நிச்சயம் கட்டுக்கடங்காத அளவிற்கே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னமும் நாம் மாறவில்லை என்றால் நம்முடைய நீர்நிலைகளை பாதுகாக்க காவிரி டெல்டா முழுவதையும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே விட வேண்டும்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி யுவராஜிடம் பேசுகையில், கிழ முல்லக்குடி, பனையக்குறிச்சி, வேகூர் கிராமங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப் பயன்படுத்தி வந்த மாட்டு வண்டிகள் 26 மற்றும் இரு சக்கர வாகனங்கள் 30 பிடிக்கப்பட்டுள்ளது. அதில், 11 வாகனங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிப்பர் லாரி 1 என இதுவரை 57 வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 மேற்பட்ட மணல் மூடைகள் வருவாய் துறை அலுவலர்களால் கத்தியால் கிழிக்கப்பட்டும் உள்ளது. மேற்படி கிராமங்களில் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றார்.

 

வரவேற்கவேண்டிய குண்டாஸ் சட்டம்

திருச்சியில் இருந்து தினந்தோறும் 100 லாரிகளுக்கு மேல் திருடப்படும் ஆற்று மணல், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் துணையுடன் விராலிமலை சுங்கச்சாவடி வரையில் பாதுகாப்பாக கொண்டுபோய் விடப்படுவதாக கூறப்படும் நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க செயல். இருப்பினும், அரசு அதிகாரிகளைத்தவிர ஆட்சியாளர்கள் மீது பல சமயங்களில் பொதுமக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.