அறிவுக்கு வித்தாகும் அறிஞரின் வாழ்வு

0
Business trichy

“பழக்கத்தால் வரும் பண்பை விட, பண்பால்
வரும் பழக்கம் உயர்வானது”
-பென்ஜமின் பிராங்கிலின்
இந்தப் பூவுலகில் தோன்றிய அறிஞர்கள், மாமேதைகள் இவர்களின் வரலாற்று நூல்களை வாங்கித் தந்து சிறு வயது முதலே வாசிக்க வையுங்கள். எதிர்காலத் தூண்களான இன்றைய மாணவர்களை நல்வழிப்படுத்தும் நேரமிது.

 

ஜி.டி.நாயுடுவைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா. சிறந்த தொழிலதிபரான அவர் ஒரு நாள் அலுவலக வேலை தொடங்கப்பெறாத காலை நேரத்தில் தமது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. மேஜை மீதிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அறை குப்பை கூளமுமாக காணப்பட்டது.

 

ஜி.டி.நாயுடு தாமே அறையை ஒழுங்குப்படுத்தினார். குப்பைகளை அகற்றினார். சாமான்களை அந்தந்த இடங்களில் ஒழுங்காக வைத்தார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு வைத்தார். உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி! இதுதான் அந்தக் கடிதத்தின் விளக்கம்.
அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி ஜி.டி.நாயுடுவின் கடிதத்தை கண்டு பதறிவிட்டார். ஓடோடிச் சென்று அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
”உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் வேலையை விட்டு விட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்க வரவேண்டி இருக்காதல்லவா? நாம் செய்யும் தொழில் தான் தெய்வம். இந்த வேலையை நானா செய்வது என்று நினைத்து கவுரவம் பார்க்காமல் நம்முடைய அறையை நாமே சுத்தமாக வைக்க வேண்டும்”. என்று அன்பாக எடுத்துக் கூறி அனுப்பினார். ஜி.டி.நாயுடு.

 

Kavi furniture

பாருங்கள் மாணவச் செல்வங்களே! மிகப்பெரிய தொழிலதிபர், அறையை எவ்வாறு சுத்தம் செய்தார் என்று, எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எளிமை மிக மிக அவசியம். அவ்வாறு சிறந்த பண்போடு இருந்ததால் தான் இன்றளவும் அவரைப் பற்றி நாம் பேசுகிறோம்.
மகாத்மா காந்தியடிகளின் மீது கடுமையான கோபம் கொண்ட ஓர் ஆங்கில உயர் அதிகாரி மகாத்மாவை இழிவு படுத்த வேண்டும் என்று எண்ணி பல பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதினார். அதனை இணைக்க ஒரு குண்டூசியை பயன்படுத்தினார். பிறகு கடிதம் மகாத்மாவின் கைக்குப் போயிற்று. அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த மகாத்மா குண்டூசியை மட்டும் எடுத்துக் கொண்டு கடிதத்தை குப்பைக் கூடையில் போட்டு விட்டார்.

 

MDMK

அதை கவனித்த அந்த அதிகாரி, “ஏன் இப்படிச் செய்தீர்கள்” என்றார்.
அதற்கு மகாத்மா, “நீங்கள் கொடுத்த கடிதத்தில் பயனுள்ளது அந்த குண்டூசி மட்டும் தான். அதை எடுத்துக் கொண்டு விட்டேன்” என்றார்.
மாணவர்களே!… இந்த எளிமையும், அடக்கமும், கொண்டிருந்ததால் தான் இன்று வரை அவரை மகாத்மா என்று நாம் அழைக்கிறோம்.
இந்தப் பண்பும், அறிவாற்றலும் அதிகமாகவே பெற்றிருந்த அறிஞர் அண்ணாவின் பேச்சுத் திறமையை இங்கு பார்ப்போம்:

அறிஞர் அண்ணா அவர்கள், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது ஒரு நாள் சட்ட சபையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து, அண்ணாவை நோக்கி, அரசுப் பேருந்துகளில் “யாகாவராயினும் நா காக்க!”…. என்ற குறள் எழுதப்பட்டுள்ளதே, அது யாருக்காக என்பதை விளக்க வேண்டும் என்று அண்ணாவை வம்புக்கு இழுத்தார்.
அறிஞர் அண்ணா, புன்னகைப் புரிந்தவாறே அந்த எதிர்க்கட்சி உறுப்பினரை நோக்கி “நாவைக் காக்காமல் யார் பேசுகிறார்களோ, அவர்களுக்காக!” என்று பதிலளித்தார். அங்கிருந்த அனைவரும் அண்ணாவின் நா வன்மையை கண்டு வியந்தனர்.

 

இதில் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும், அவர் கேட்ட கேள்விக்கு ’பேருந்து ஊழியர்களுக்காக’ என்று கூறியிருந்தால் அவர்களின் மனம் புண்படும். அது போலவே, ‘பயணிகளுக்காக’… என்று கூறியிருந்தால் பயணிகளின் மனம் புண்படும்.

எனவே, இதனைத் தெளிவாக உணர்ந்த காரணத்தால் தான், அடுத்த நொடியிலேயே அறிஞர் அண்ணாவால், அந்தப் பொருத்தமான பதிலை, யார் மனதும் புண்படாதவாறு அளிக்க முடிந்தது. ’சொல்வன்மை’ எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பண்பை இதுப்போன்ற தலைவர்களின் வரலாற்றைக் கொண்டே நாம் அறிய முடியும்.

வெற்றிப் பயணம் தொடரும்…

Pranav city

Leave A Reply

Your email address will not be published.