‘பேரன்பு’ பார்த்தேன்!

0
1

‘பேரன்பு’ பார்த்தேன்

சுற்றுலாவுக்குச்செல்ல அவரவர்களின் வசதிக்கேற்ப பேருந்தில் செல்லலாம்… ரயிலில் செல்லலாம்… காரில் செல்லலாம்…விமானத்தில் செல்லலாம். அதற்கேற்றார்போன்ற நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையமுடியும். ஆனால், இயக்குனர் ராம் கால்நடையாக நம்மை நடத்திச் சென்று பேரன்பை ரசிக்க வைக்கிறார்.

‘மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட வயது வந்த மகளுக்காக ஆண் பாலியல் தொழிலாளியை தேடிச்செல்லும் அப்பா’ என்கிற ஒற்றை வரிதான் கதையின் ஒட்டுமொத்த ‘பெருவலி’ யையும் பிரதிபலிக்க வைக்கிறது. இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு பாலியல் உணர்வும் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தியதற்காகவே பேரன்புகள் ராம் <3

2

அம்மா-அப்பாவின் அன்பும் உற்றார் உறவினர்களின் ஆதரவும் வழக்கமாக பள்ளிக்கு சென்று சக மாணவர்களிடம் நட்பாக பழகி பேசி சிரித்து வாழும் டீன் ஏஜ் பிள்ளைகளே பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வது சவால். ஆனால், மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லமுடியாமல்… தாயின் அரவணைப்பின்றி…உறவினர்களின் ஆதரவுமின்றி தனிமையில் தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு டீன் ஏஜ் சிறுமியின் உளவியலை மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கையாண்டிருக்கிறார் பேரன்புகொண்ட இயக்குனர் ராம்.

அதில், மிக முக்கியமானது… மூளை முடக்குவாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களின் சகோதர சகோதரிகளுக்கும் வரன்(ள்) கிடைக்காமல் போய்விடும் பேரவலத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை, ஏதாவது ஒரு மையத்தில் வைத்து பராமரித்தாலும் அவர்களது பாலியல் பிரச்சனைக்கு என்ன செய்வது என்ற மிகப்பெரிய கேள்வியை இச்சமூகத்திற்கு எழுப்பி அதற்கான விடையையும் சொல்லியிருக்கிறது பேரன்பு. விடை வேறொன்றுமில்லை. பெற்றோரின் அன்பு பாசம் அரவணப்புதான். இது, சிறப்புக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம் அனைத்து டீன் ஏஜ் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இப்படியொரு குழந்தை பிறந்தபிறகு கணவன் வந்து பார்க்காமல் போனதால்… தன்னை புரிந்துகொண்டவருடன் சென்றுவிட்டார் மனைவி என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காரணம், புரிந்துகொண்டவருடன் பிரிந்துசெல்வது அவரது உரிமையாக இருந்தாலும் பிரச்சனை அவரது பாலியல் தொடர்பானது அல்ல. இப்படிப்பட்ட குழந்தையை மையப்படுத்தியது. உன்னைப்புரிந்து கொண்டவன் உன் குழந்தையையும் புரிந்துகொண்டவனாக இருந்து… குழந்தையுடன் சென்றால் நியாயப்படுத்தலாம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெண்குழந்தையை விட்டுச்சென்ற தாய் நம் எண்ணத்தில் குன்றத்தூர் அபிராமியாய்தான் தெரிகிறார்.

சில மணிநேர சினிமாவில் ‘மம்முட்டி’ அப்பாவாக அனுபவிக்கும் பெருந்துன்பத்தை பார்க்கவே பெருவேதனையாக இருக்கிறது என்றால்… வாழ்நாள் முழுக்க அக்குழந்தயுடன் அனுபவிக்கும் வேதனை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை உணர்த்துகிறது. கதை முழுக்க மிக எதார்த்தமான அப்பாவாக பிரதிபலிக்கிறார் மம்முட்டி. இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இப்படிப்பட்ட படத்தில் நடித்திருக்கிறாரே என்று நினைக்கும்போது பேரன்பு கூடுகிறது <3

கொஞ்சநேரம்கூட நாக்கை வெளியில் நீட்டி நம் கைகளை அப்படி வைத்திருக்கமுடியாது. அப்படியிருக்க, ஷூட்டிங்கில் பல டேக்குகளுக்கு நடுவே எப்படி அப்படிப்பட்ட குழந்தையாக நடித்தார் என்று ஆச்சர்யப்படுத்துகிறார், சாதனா. அப்படி நடிப்பதே வலிமிகுந்தது என்றால் அப்படியிருக்கும் குழந்தைகளின் நிலை?

வலியுடன் நடந்துசெல்லும்போது வலிக்கு மருந்தான வலிநிவாரணிதான் படத்தில் வரும் நடிகை அஞ்சலி.

திருநங்கையை திருமணம் செய்துகொள்வதுதான் படத்தின் தரமான சம்பவம். திருநங்கைகளும் பெண்கள்தான் என்பதை உணர்த்திய ராமும்… சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் போற்றுதலுக்குரியவர்கள் <3

பெருந்துன்பத்துடன் தொடங்கி…பெருவலியை உணர்த்தி… பேரின்பத்தில் முடிகிறது பேரன்பு.
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான படம் அல்ல. இப்படிப்பட்டவர்களை ஒதுக்கும்; புறக்கணிக்கும் மூளை முடங்கிய சமூகத்தினருக்கான படம் பேரன்பு <3

– வினி சர்பனா

3

Leave A Reply

Your email address will not be published.