உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-13

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0
D1

மன்னா நெருப்பின் தனிதன்மைகளை வெளிப்புற உறுப்பு-நாக்கு, உணர்ச்சி- மிகுதியான சந்தோசம், சுவை-கசப்பு, உப உறுப்புகள்: அக்குள், வஞ்சனம்(தொடை பகுதியின் இடுக்குகள்), நிறம்-சிகப்பு, திசை-தெற்கு, ஆதாரம்-அனாகதம் என வகைப்படுத்தலாம்” யோகியாரின் நெருப்பை பற்றிய போதனைகள் அனைவரின் மனதிலும் ஆழமாய் பதிந்தன. அப்போது மன்னனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. அதனை மெல்ல யோகியாரிடம், “அய்யனே, நெருப்பு பூதத்திற்கு மட்டும் ஏன் எல்லா இடங்களிலும் தனிச்சிறப்பு வழங்கப்படுகின்றது. பல்வேறு மத சடங்குகளில் நெருப்பு பிரதானமாக உள்ளது. மேலும் பலர் நெருப்பினை வணங்கிடவும் செய்கின்றனர். இதன் காரணம் என்ன? என வினவினான்.

இதற்கு யோகியார், “மன்னா நெருப்பு எனும் பூதம் நம்முள் மூன்று வகையான தீயாக விளங்குகின்றது. ஆசைத்தீ, கோபத்தீ, காமத்தீ என மூன்றாக விளங்கும் இந்த நெருப்பினை கட்டுக்குள் வைத்திருக்கும் எவரும் சிறப்பாக வாழ்வாங்கு வாழ்ந்து முத்தி நிலையை அடைவர். உலகில் மாந்தர்கள் பெரும்பாலும் அல்லலுறுவதற்கு காரணம் இந்த மூன்று தீயையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமையே. இந்த மூன்று தீயும் தன்னுள் உள்ள இறைபக்திக்கு பாத்தியப்பட்டே இருக்க வேண்டும். எப்போதாவது இந்த தீயில் ஏதேனும் ஒன்று தன்னுள் உள்ள இறைபக்தியை தாண்டி எழுகின்றதோ அப்போது மனம் அமைதியிழந்து மனிதன் தன்னை இழக்க நேரிடுகின்றது.

 

இதனாலேயே பல மதசடங்குகளில் நெருப்பு இறைவனுக்கு கீழ் எனக்காட்டும் வண்ணம் அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. உலகில் அனைத்துக்கும் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது நெருப்பே ஆகும். நெருப்பு கட்டுக்குள் இருக்கும் வரை மனிதனுக்கு அது உதவி புரிகின்றது. ஆனாலும் வணக்கத்திற்கு உரியவனாக இருப்பவன் இறைவன் ஒருவனே. அவனை விடுத்து நெருப்பினை வணக்கத்திற்குரிய ஒன்றாக ஏற்பது அறிவார்ந்த செய்கை அன்று. பஞ்ச பூதங்களால் ஆன எந்த ஒன்றும் இறைவனின் படைப்பே ஆகும். அப்படி இருக்க படைத்தவனை வணங்குவதே அறிவார்ந்த செயல்” என பதிலளித்தார்.
யோகியாரின் இப்பதில்கள் மன்னனிடம் அடுக்கடுக்காய் மேலும் சில கேள்விகளை தோற்றுவிக்கவே செய்தன. ஆவல் மிகுதியால் அவன் உதடுகள் அக்கேள்விகளை வார்த்தைகளாக உதிர்த்தன.

 

D2

” அய்யனே, அனைத்தையும் படைத்த இறைவன் எங்கு உள்ளான்? பஞ்ச பூதங்களை இறைவன் படைத்தது எவ்வாறு? இறைவனை நாம் எவ்வாறு உணர்வது? இறைவன் மறைவாகவே உள்ளதன் காரணம் என்ன?” கேள்விகள் தெரித்த வேகத்தைக் கண்டு புன்முறுவல் பூத்த யோகியார் தனது வழக்கமான அமைதியுடன் “மன்னா, அனைத்தையும் படைத்த இறைவன், தான் படைத்தவை யாவற்றுக்கும் மேலாய் அமைகிறான். இங்கு நம் அனுபவத்தில் உள்ள யாவும் பஞ்ச பூதங்களால் ஆனாவையே. இப்பஞ்ச பூதங்களின் எப்போதும் நிலையாய் விளங்கும் ஆகாயத்திற்கும் மேலாகவே இறைவன் விளங்குகின்றான்.
நம் அனுபவத்தில் உள்ளவைகள் யாவும் பஞ்ச பூதங்களின் கலவை எனில் அதில் ஆகாயத்தை நாம் காண இயலுமா? நாம் காண இயலவில்லை என்பதால் அது இல்லை என்றாகி விடுமா? நமது புலன்களுக்கு எட்டாத வகையில் அது விளங்குகின்றது. அப்படி இருக்க ஆகாயத்தையும் படைத்தவன் அதி சூட்சுமமாகவே நமக்கு விளங்குவதில் ஆச்சரியமேதும் இல்லை.

பஞ்ச பூதங்களில் முதன்மையானதும் மற்ற பூதங்களின் ஆதாரமாகவும் உறைவிடமாகவும் விளங்குவது ஆகாயமே. சுத்த வெளியாய் விளங்கும் அசைவற்ற இவ்வாகாயத்தில் இறைவன் தோற்றுவித்த மாபெரும் ஆற்றல்தான் மற்ற ஐந்து பூதங்களின் ஆதாரமாகும்(இதனை நவீன விஞ்ஞானம் Dark Energy என வகைப்படுத்துகிறது). இவ்வாற்றலே ஆற்றல் துகள்களாக உருமாறி பின்னர் அணுக்களாக ஒருங்கிணைந்தன. அவ்வாறு தோன்றிய முதல் அணு, காற்று பூதத்தின் அடிப்படை அணுவாகும். (Hydrgen H1). இக்காற்றில் தோன்றிய அழுத்தத்தால் உராய்வு உண்டாகிடவே, அக்காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது. நெருப்பின் வெப்பத்தால் மூல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு மற்ற காற்றணுக்கள் தோன்றின. அவற்றில் மேலும் தோன்றிய வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் தோன்றிய அணுக்கள் மேலும் கனமாக விளங்கின.

 

இக்கனமான அணுக்களே மன்பூதமாக மாறின. குளிர்ந்து விட்ட காற்றில் உள்ள அணுச்சேர்க்கையால் நீர்பூதம் உண்டாகியது. நான் முன்னர் கூறிய அகார, உகார, இகார தத்துவத்தை நினைவில் கொள்ளுங்கள். மறைவாக உள்ள இறையே அசைவற்ற ஆகாயம்; எனும் அகரத்தையும், அதனுள் உகாரம் எனும் அசைவுள்ள ஆற்றலையும் உண்டாக்கினான். இதன் விளைவாகவே படைப்புகள் யாவும் இதன் அடிப்படையிலேயே அமையப் பெற்றுள்ளன. நாமும் படைப்புகளின் ஒரு அங்கமாய் விளங்குவதால் மறைவாக உள்ள இறைவனை நாம் காண முடிவதில்லை. உலகில் எவரின் பார்வையும் அவன் மீது விழுவதில்லை. ஆனால் அனைத்திற்கும் மேலாக உள்ள இறைவனின் பார்வை அனைத்தின் மீதும் நிலைகொள்கிறது. நமக்குள் விளங்கும் அறிவுக்கும் அப்பாற்றப்பட்ட பேரறிவாய் விளங்கும் இறைவனை புற அறிவால் உணர இயலுமா? தங்களுடைய அகக்கண்களை பக்தி எனும் சாவியால் திறந்து இறைவனை உணர்ந்திடுங்கள்” என விளக்கினார்.

 

N2

இதனை கேட்ட மன்னனின் மனம் தெளிவு பெற்று இறைவனின் பால் திரும்பி அமைதி அடைந்தது. இவ்விதமாக இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேரினை செலுத்திக் கொண்டிருந்த சாரதி தேரினை சற்று நிறுத்தினார். சாரதி தேரினை நிறுத்தியதன் காரணத்தை அவரிடம் மன்னன் வினவினான். அதற்கு சாரதி,”மன்னா, என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன். எனக்கு நீண்ட காலமாக இடுப்பு வலி இருந்து வருவது தாங்கள் அறிந்ததே. இப்போதும் அதே இடுப்பு வலி தோன்றிவிட்டது. என்னால் நேராக அமர்ந்து தேரினை செலுத்த இயலவில்லை. மற்றொரு சாரதி பின்னால் வரும் தேரில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். அவரை அழைத்து வர அனுமதி வேண்டுகிறேன். அவர் வந்து விட்டால் பயணத்தினை தொடரலாம்” எனக் கூறினான். மன்னனும் அனுமதி அளிக்க முற்பட்டான். ஆனால் யோகியார் மன்னனை தடுத்தார். சாரதியை தேரில் படுக்க வைத்து தனது பையிலிருந்து ஒரு குவளையை எடுத்து அதிலிருந்த எண்ணெயை சாரதியில் இடுப்பில் தடவினார். அதன்பின், அதே பையிலிருந்து ஒரு உருளை வடிவ குழல் ஒன்றினை எடுத்து அதன் ஒரு முனையில் தீ பற்ற வைத்தார். சிறிது தீ பிடித்தவுடன் அதனை அணைத்து விட்டார். இப்போது அக்குழல் நுனியில் தீகங்கு உருவாகி புகைந்து கொண்டிருந்தது.

 

இப்போது அக்குழலைசாரதியின் இடுப்பு பகுதிக்கு மிக அருகில் பிடித்தபடி, தீக்கங்கின் கனல் இடுப்பில் வலி உள்ள பகுதியில் படும்படி சில நிமிடங்கள் சுற்றினார். இப்போது சாரதி தனது இடுப்பு பகுதிக்குள் வெப்பம் அலைஅலையாக ஊடுருவி பரவுவதை உணர்ந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவனது வலி மாயமாய் மறைந்தது. பல்வேறு மருத்துவர்களால் தீர்க்க இயலாமல் இருந்த இடுப்பு வலியை சில நிமிடங்களில் தீர்த்து அருளிய யோகியாருக்கு தன் நன்றிகளை தெரிவித்தான். தான் இதற்கு முன் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதையும் அவர்கள் தனக்கு சிகிச்சை அளித்த விதம் குறித்தும் கூறினான். குறிப்பாக இராஜவைத்தியர்களில் ஒருவரான சிசுபாலர் தன்னை கையாண்ட விதம் குறித்து யோகியாரிடம் “அய்யனே, நான் ஒருமுறை இராஜ வைத்தியர் சிசுபாலனை சிகிச்சைக்காக அணுகியிருந்தேன். அவர் மருத்துவம் பார்க்கும் பொழுதே அதீத செருக்குடன் காணப்பட்டார். அவரது பேச்சில் அச்செருக்கின் சாயல் தொனித்தது. அவரை எளிமையாக அணுகி எந்தவித சந்தேகமும் கேட்க இயலவில்லை. அவரை சுற்றிலும் உதவியாளர்கள் கூட்டமும், சிகிச்சை கருவிகளும் தான் நிறைந்திருந்தன. மருத்துவம் பார்க்க மிக அதிகமான வெகுமதி வசூலிக்கப்பட்டது.

 

என்னை போன்ற எளிய மக்களால் அச்சிகிச்சையை தொடர இயலாது. ஆனால் தாங்களோ காட்சிக்கு எளிமையாக தோன்றுவதோடு மட்டுமின்றி விரைவாக சிகிச்சை அளித்தும் விட்டீர்கள். பெரிதாக எந்த ஒரு கருவியும் பயன்படுத்தவில்லை. தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்?” எனக் கூறினான். யோகியார் இதனைக்கேட்டு சிரித்தபடி சாரதியின் தோள்களை ஆதரவாய் பற்றி கவலை வேண்டாம் சாரதி, நலம் பெறுவாய். எந்த ஒரு வைத்தியருக்கும் இருக்கக் கூடாத பண்பு செருக்கு. எப்பேர்ப்பட்ட மருத்துவராக இருப்பினும் அவருக்கு அம்மருத்துவ கலையை அருளியதும், நோயுற்ற மக்களுக்கு சுகமளிப்பதும் இறைவன் ஒருவனே. மருத்துவர் என்பவர் வெறும் கருவி மட்டுமே. எப்பேர்ப்பட்ட மருத்துவராய் இருப்பினும் அவரும் ஒருநாள் நோயுறவே செய்வார். இறைவன் விதித்த மரணம் அவரை அணுகியே தீரும்.

 

நாம் கொஞ்ச காலம் வாழ்கின்ற இப்பூலோகத்தில் சக மனிதர்களை அன்புடன் நடத்துவது நம் அனைவரின் தலையாய பண்பாகும். மருத்துவம் படித்து விட்டோம் என்பதற்காக தன்னை மற்றவர்களிலும் உயர்ந்த பிறவியாக கருதிக்கொண்டு செருக்குடன் அலையும் வீணர்கள் நாயினும் நலிந்து, நோயுற்று அழிந்ததை இவ்வையகம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. இனியேனும் இந்தவகை அறிவிலிகளுக்கு இறைவன் பணிவையும் பண்பையும் வழங்கி அருள்புரியட்டும்” என்றார். அங்கிருந்த மன்னனும் இதனை ஆமோதித்தான். மருத்துவம் கற்பிக்கப்படும் பாடசாலைகளில் நற்பண்புகளையும் பாடமாக்கிட வேண்டும் என உறுதிபூண்டான். இதனையடுத்து சாரதி தேரினை கிளப்பிட பயணம் தொடர்ந்தது. அப்போது மன்னன் யோகியாரிடம் அவர் சாரதியின் சிகிச்சைக்காக பயன்படுத்திய குழல், மற்றும் எண்ணைய் குறித்து வினவினான்.

 

யோகியாரும் “இந்த எண்ணைய் மற்றும் குழல் இரண்டுமே தயாரிக்க மிக எளிதானவை. நம் அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய எளிய மருத்துவ உபகரணங்கள் ஆகும். அந்த எண்ணையின் பெயர் ஏம எண்ணெய் என்பதாகும். ஏமம் என்றால் மகிழ்ச்சி என்று பொருள்படும். மக்களின் வலியை நீக்கி மகிழ்ச்சி அளிக்கும் எண்ணெய் என்பதால் இதற்கு ஏம எண்ணெய் என பெயர் உண்டாகியது. இது முற்றிலும் எளிமையாக இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்க கூடியது. சர்வரோக நிவாரணி. சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி என பலவற்றில் இருந்தும் உடனடியாக நிவாரணம் அளிக்க கூடிய பண்பு இதற்கு உண்டு. இதன் செய்முறையை தங்களுக்கு விளக்குகிறேன்.

யோகியின் போதனைகள் தொடரும்…

 

N3

Leave A Reply

Your email address will not be published.