ஆதி மகள்-4

0
Business trichy

தோழியை சந்திப்பதற்காக அப்பாவுடன் ஆட்டோவில் கிளம்பி வந்த காயத்ரிக்கு, மழையின் குளிர்ச்சியும், ஆதிக்கமும் அந்த நினைவையே மறக்கச் செய்திருந்தது.
திடீரென நினைவு வந்தவளாய் மழை அதிகமா இருக்குப்பா. நான் அகிலாவை பார்க்கப் போகல. உங்க கூடவே திரும்பி வீட்டுக்கு வந்துடுறேன் என்றாள்.. அகிலா அவளது நெருங்கிய தோழியின் பெயரது. அப்பா அதை பெரிதாக ஒன்றும் கேட்டுக்கொண்டதாக தெரியவில்லை. ஆட்டோவின் முன்புறக் கண்ணாடியின் வைப்பர், பெய்யும் மழையின் நீரை அடித்து தள்ளிக் கொண்டிருந்தது.

 

மழையினால் மாலை நேர வெளிச்சம் குறைந்திருந்தது, ஆட்டோவின் முன்புறம் தெரிந்த மங்கலான வெளிச்சத்தில் சண்முகநாதன் உற்று நோக்கினார்.
அவர் போய்க்கொண்டிருந்த வீட்டின் முன்புறம், குறைவான வெளிச்சத்துடன் காட்சி தந்தது. அங்கு சில கார்களும், இருபது, முப்பது நபர்களும் நின்று கொண்டிருப்பது தெளிந்தும், தெளியாத காட்சியாய் சண்முகநாதனுக்கு தெரிய, இந்த கொட்டும் மழையில் ஏன் இத்தனை நபர்கள் அங்கு நிற்க வேண்டும்.

 

வந்தவர்கள் அந்த வீட்டிற்குத்தான் வந்திருக்கிறார்களா? அல்லது அக்கம்பக்கத்தில் ஏதேனும் நிகழ்வா? அப்படியே இருந்தாலும், இத்தனை பேரும் ஏன் இந்த கொட்டும் மழையில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் நிற்க வேண்டும் என சண்முகநாதனுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. தனக்குத்தான் இப்படி தோன்றுகின்றதா! என்ற குழப்பத்துடன் காயத்ரியை பார்க்க, காயத்ரியோ தன்னை எதற்காக அப்பா பார்க்கிறார் என்ற எண்ணத்துடன், அப்பா பார்த்த திசையை நோக்கி அவளும் பார்க்க, ஆட்டோ டிரைவர் அவளது முன்புற காட்சியை மறைத்திருந்தான். ஆட்டோவிற்கு வெளியே சற்று தலையை நீட்டிப் பார்த்தாள் காயத்ரி, அவள் முகத்தில் அபரிமிதமாய் மழைநீர் அடிக்க அவளால் காட்சியை காணமுடியாமல் மீண்டும் முகத்தை ஆட்டோவிற்குள் நுழைத்துக் கொண்டாள். தாமரை மொட்டின் மீது புறளும் நீர்திவலையாய் காயத்ரியின் முகத்தில் மழைநீர் நிதானமாய் வழிந்தோடியது. தனது ஆடையினால் முகத்தை துடைத்துக்கொண்டாள் காயத்ரி.

 

ஆட்டோ மெதுவாக சென்று அந்த வீட்டின் முன் நின்றது. சண்முகநாதனுக்கு ஒருவித குழப்பமும் தயக்கமும் பதட்டத்தை அதிகப்படுத்தியது. வீட்டை நோக்கி அவசரமாய் ஓடினார். காயத்ரி ஆட்டோவை விட்டு இறங்காமல் ஆட்டோவின் உள்ளேயே உட்கார்ந்து கொண்டாள். தன் கண்களை அகல விரித்து வீட்டின் முகப்பை பார்த்த காயத்ரி பின்பு அங்கு நின்றிருந்த கூட்டத்தை கவனித்தாள். இருள் பரவிக் கொண்டிருந்த நேரம். தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தும், அதன் வெளிச்சத்தை இருள் கிரகிக்கவில்லை. அதனால் அங்கே நின்றிருந்தவர்களின் முகங்கள் காயத்ரிக்கு தெளிவாக தெரியவில்லை. யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த அப்பாவை ஆட்டோவில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த சூழல், மழையை பொருட்படுத்தாது நனைந்தபடியே அங்கு நின்றிருந்தவர்களின் அமைதி, நெருங்கும் கனத்த இருள், இவையெல்லாம் காயத்ரிக்கு ஒரு அசாதாரண நிகழ்வாய் தோன்றியது. மீண்டும் அப்பாவை கண்களால் தேடினாள். அவர் அவசர அவசரமாக தான் கொண்டுவந்திருந்த கைப்பையினுள் இருந்த அந்த வீட்டின் சாவிக்கொத்தை வெளியே எடுத்து கேட்டை திறந்து உள்ளே சென்று வாசல் கதவை திறந்தார்.
அப்போது அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மூன்று கார்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற வேன் முன்னோக்கி நகர்ந்து, வீட்டின் முன்னால் வந்து நின்றது. அதில் அமரர் ஊர்தி என்ற வாசகத்தை வாய்விட்டு படித்த காயத்ரி, அந்த மழையிலும் ஆட்டோவை விட்டு இறங்கி கலக்கமடைந்தாள். இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட வீடு, இனிமேல்தான் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் என்று அப்பா சொன்னது அவள் நினைவுக்கு வந்து சென்றது.

 

மழையில் நனைந்தபடியே நின்றிருந்த காயத்ரியை பார்த்த ஆட்டோ டிரைவர் மழையில நனையாதீங்கம்மா உள்ள உட்காருங்க என்று சொன்னவுடன், காயத்ரி தன்நிலைக்கு வந்தாள். காயத்ரிக்கு அடர்த்தியான கூந்தல் இருந்ததால் தலை அவ்வளவாக நனைந்ததாக தெரியவில்லை. ஆடை முழுவதும் நனைந்து உடலோடு உடலாய் ஒட்டிக்கொண்டது. எப்போதும் சேலையே விரும்பி உடுத்தும் அவள் இன்று மஞ்சள் நிற சுடிதாரும், கருப்பு சாலும் அணிந்திருந்தாள். ஆடை முழுதும் நனைந்திருந்ததாலும் அந்த இடத்தில் பெண்கள் யாரும் தென்படாததாலும் அந்த வீட்டை நோக்கிச்செல்ல முற்படாமல் அவள் அமைதியானாள். இனம் புரியாத ஏதோ ஓர் உணர்வு அவள் இருப்பை உறுத்தியது.

 

மழை திடீரென முற்றிலும் நின்று விட்டது. தெருவிளக்கின் வெளிச்சம் எங்கும் பரவத் தொடங்கி சில அடிதூரங்களில் அங்கு நிற்பவர்களின் முகங்கள் தெரிந்தன. அப்போது கருப்பு நிறக்கார் ஒன்று இவர்களை கடந்து சென்று ஆட்டோவின் முன்னே நின்றது.

Full Page

காரின் டிரைவர் சீட்டிலிருந்த ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறங்கி வீட்டினுள் சென்றார். காரை அவளே ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள். திருத்தமாக கருப்பு நிற சேலையும் அதற்கான ப்ளவுசும் அணிந்திருந்தாள். அந்த கருப்பு நிற ஆடையில் அவளது சிவந்த முகமும் கைகளும் கலங்கமில்லா சிலையாய் காயத்ரிக்கு தெரிந்தது. அந்த பெண் நடந்து சென்ற விதமும் உடல்வாகும், அங்கு நின்றிருந்தவர்களிடம் அவள் கைநீட்டி பேசிய விதமும், அந்த இடத்தில், அந்த தருணத்தின் முக்கியமான நபராக அவள் இருப்பாள் என பார்ப்பவர்களை எண்ண வைத்தது.

சிறிதுநேரம் ஆட்டோவில் காத்திருந்த காயத்ரிக்கு ஆடையின் ஈரம் இறுக்கத்தை தந்தது. மனது லேசாக கனத்து போயிருந்தது. மழை விட்டிருந்ததால் சிறிது தூரம் நடந்து வந்தால் இயல்பாய் இருக்கலாம் போல் இருந்தது அவளுக்கு.
தான் நடந்து போக வேண்டிய சாலையை பார்த்தாள். அகன்ற மலைப்பாம்பாய் நெளியாமல் கிடந்தது செம்மண் சாலை. வீடும் அமைதியாக, சிலர் வருவதும் போவதுமாக இருந்தனர்.

வீட்டின் முன்னால் நின்ற வெள்ளை நிற வேனின் அருகே வந்த நான்கைந்து நபர்கள், அந்த வேனின் பின்புற கதவை திறந்து உள்ளே மரங்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட கண்ணாடி மூடியுடன் இருந்த பிரேத குளிர்சாதன பெட்டியை இறக்கினர்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த காயத்ரிக்கு என்னவோ போலிருந்தது. அங்கிருந்தபடியே அப்பாவை தேடினாள். வீடு கட்டி முடிக்கப்பட்டு குடிவருவதற்கு முன்பே இப்படி ஒரு துக்கத்தை இங்கு ஏன் நிகழ்த்துகிறார்கள். இறந்து போனவர் யாராக இருக்கும், எப்படி இருந்தாலும், வீட்டுக்கு முக்கியமானவராக, இந்த வீட்டுடன் தொடர்புடைய தவிர்க்க முடியாத நபராகத்தான் அவர் இருக்க முடியும். இந்த இறப்பும், துக்கமும் அப்பாவை, அப்பாவின் தொழிலை பிறரது பார்வையில் சென்டிமென்ட்டாக தவறாக்கி விடுமா, அப்பா இந்த நிகழ்வை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார். என நினைத்துக்கொண்டே தன்னையறியாமல் ஆட்டோவை விட்டு இறங்கி சிறிது தூரம் தெருவில் நடந்திருந்தாள் காயத்ரி.
சாலையின் வலதுபுறம் மேடான பகுதியில் ஈரமும் மண்ணும் சற்று இறுகி நடக்கும் பக்குவத்தில் இருந்தது. தெருவிளக்குகள் அருகருகே இருந்ததால் நடப்பதற்கு சிரமமின்றி இருந்தது அவளுக்கு.

அவளின் எதிர்புறம் வெள்ளையும் கருப்பும் கலந்திருந்த நிறத்தில் ஓடிவந்த நாய் ஒன்று தன்னை பார்த்து குரைக்கும் என காயத்ரி எதிர்பார்த்தாள். ஆனால் அதற்கு மாறாக அது அவளை விட்டு விலகி திரும்பி பார்க்காமல் ஓடியது. மிகவும் இளைத்துப் போயிருந்த அந்த நாயை பார்த்த அவளுக்கு பாவமாக இருந்தது?

பயணிப்பாள்…

-அஸ்மின்

முந்தைய தொடர்களை வாசிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்

https://ntrichy.com/category/aathimakal-thodar/

Half page

Leave A Reply

Your email address will not be published.