+2 படிப்பில் 100% வருகை பதிவு விருது பெற்ற மாணவர்

மாணவர்கள் என்றாலே பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லமாட்டார்கள் என்ற பொதுவான சிந்தனை உண்டு.

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா 25.01.2019ஆம் நாள் மாலை நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி அலெக்ஸாண்டர், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
2017-18ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர் நிலவன் 100% வருகைப் பதிவு பெற்றுள்ளமையைப் பாராட்டி ஆசிரியர் கி.வீரமணி விருது வழங்கினார். “100% வருகைப் பதிவுக்கான விருதைப் பெறுகிறார் கடந்த கல்வியாண்டில் கல்வி பயின்ற எம் மாணவர் நிலவன்’ என்று அறிவிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டவுடன், கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது. ஆசிரியர் கி.வீரமணி பரிசு வழங்கியபோதும் கரவொலியால் அரங்கம் மீண்டும் அதிர்ந்தது. திறமையுடைய மாணவர்களைப் பாராட்டுகின்ற வகையில் இக் கல்வி நிறுவனம் எடுக்கும் பல முயற்சிகளைப் பெற்றோர் பலர் பாராட்டி வருகின்றனர். ஆசிரியர் கி.வீரமணியிடம் விருது பெற்ற மாணவர் நிலவன் தற்போது திருச்சி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
