லால்குடி ரவுண்டானா பணிகள் நிறைவடைவது எப்போது?எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் லால்குடியில் பொது மக்களின் நலனுக்காக ரயில்வே மேம்பாலம் மற்றும் போக்குவரத்து இடையூறை தவிர்க்க ரவுண்டானா அமைக்கும் பணி திமுக ஆட்சியில் அன்றைய அமைச்சர் நேருவால் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் லால்குடி ரயில்வே மேம்பால பணிக்கான செலவுகள் அதிக மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் பணி முழுமையாக நிறைவடைந்தும் இது நாள் வரை ரயில்வே மேம்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. மேலும், ரயில்வே மேம்பாலம் தொடக்கத்திலேயே பாலத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க இடம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையாக சர்வீஸ் ரோட்டிற்காக இடத்தை அளவு செய்த அதிகாரிகள் முன்பு எடுக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக எடுத்து சாலையும் போட்டுவிட்டனார்.

திமுக ஆட்சி காலத்தில் சர்வீஸ் சாலைக்கு எடுக்கப்பட்ட அளவு வேறு ஆனால் தற்போது நீங்கள் எடுக்கும் அளவு குறைவாக உள்ளது என்று பல கட்சிகள் அரசு அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் இவர்கள் சொல்வதை கேட்கவில்லை. தற்போது லால்குடி பஸ்நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மிகவும் சிரமப்பட்டு திரும்புகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் உள்ளது. ஓட்டுநர்களின் கவனம் சிறிதளவு குறைந்தாலும் அவ்விடத்தில் உயிர்பலி நடந்துவிடும்.

இந்நிலையில், ரவுண்டாணா பணி முடியுமேயானால் போக்குவரத்து நெரிசலில் குறையும் என கூறுகின்றனர் அப்பகுதி வாசிகள். ஆனால், ரவுண்டாணா பணியானது மிகவும் தொய்வான நிலையில் பணி நடைபெற்று வருவதால், இப்பணியை விரைவில் முடிக்கோரி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
