திமுக – மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி குறித்து அவதூறு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று (02.02.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில்
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் பல அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிவருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும், இணையதள செய்திகளிலும் மனிதநேய மக்கள் கட்சி – திமுக உறவு குறித்து விஷமத்தனமாக கருத்துகள் பரப்பபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். இச்செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற செய்திகளாகும். உள்நோக்கம் கொண்ட தீயசக்திகள் வதந்திகளை பரப்பி நிறைவேற்ற விரும்பும் சதி திட்டம் பலிக்காது.
மனிதநேய மக்கள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் சமூகநல்லிணக்கத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்தாய் உள்ள பாஜவை எதிர்த்துத் தேர்தல் களத்தில் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
