அறிவோம் தொல்லியல் பயணங்கள் முடிவதில்லை-2

0
Business trichy

இந்திய அகழாய்வுத்துறையின் தந்தை என போற்றப்படும், மார்டிவீலர் அவர்களின் கருத்து இது “ஆய்வாளர்கள் தோண்டி பார்ப்பது பொருட்களை அல்ல, இது மனித குலத்துடன் தொடர்புபடுத்தி செயல்படுத்த வேண்டியது”என்கிறார்.

உதாரணமாய் இன்று நாம் வசிக்கும் ஒரு குடியிருப்பின் பொதுவான குப்பைத்தொட்டியை கிளறினால் எவ்வாறு, அக்குடியிருப்பில் மக்கள் உபயோகப்படுத்தியதை ஓரளவு உறுதியாய் கூற இயலுமோ! அதைதான் இன்று நமக்கு கிடைக்கும் தொன்மையான தொல்லியல் எச்சங்களை கொண்டு, அதன் முழு வடிவினை நம்மால் ஓரளவு உறுதியாய் ஊர்ஜிதம் செய்ய முடிகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 33 இடங்களுக்கு மேலாய் அகழாய்வு செய்யப்பட்டு தொன்மக்களின் வாழ்விடங்களை, ஈமக்காடுகளை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாய்வறிக்கைகள் தமிழக தொல்லியல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கைகளை நான் படித்ததை இங்கு பகிர்கிறேன்( நன்றி, தமிழக தொல்லியல்துறை, தர், நடனகாசிநாதன், கா.ராஜன், சாந்தலிங்கம், ராஜவேல், ஐராவதம்.மகாதேவன், யத்திஸ்குமார்).
சங்ககாலத்தில் சிறப்பாய் போற்றப்படும் பூம்புகார் நகரில் நடத்தப்பட்ட ஆய்வினை கொஞ்சம் சுருக்கமாய் காண்போம்.

புகாரின் தொன்மை:
சுமார் 2000 ஆண்டுகள் முன்பு சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுகப்பட்டினமாகவும் சிறப்புடன் விளங்கியது இந்நகரம், சுமார் 40 கி.மீ பரப்பளவில் இந்நகரம் பரவியிருந்தது, அகழாய்வில் தெரியவந்துள்ளது. காவிரிபூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, பல்புகழ்மூதூர், மண்ணகத்து வான்பதி, கபேரிஸ் எம்போரியம், சோழப்பட்டினம் என பல பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. அகநானூறு, புறநானூறு, பட்டினப் பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை, மிளிந்தபனா எனும் பிராகிருதநூல், புத்தஜாதக கதைகள், தாலமி, பிளினி, பெரிபுலஸ் ஆகிய வெளிநாட்டு அறிஞர்களின் பயணக்குறிப்புகள் இவற்றின் வாயிலாக புகார் நகரின் சிறப்பையும், தொன்மையும் உணரலாம்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் புகார் நகரின் சதுக்கபூதம்.

சங்ககால பூம்புகார், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி எனும் மூன்று பெரும் அமைப்புகளாக சிறந்து விளங்கியுள்ளது. இளஞ்சேட்சென்னி, சேட்சென்னி, நலங்கிள்ளி, கரிகாலன் போன்ற வேந்தர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். மக்கள் நலனை வேண்டி இந்திரவிழா சிறப்பாய் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டினருடன் சிறந்த வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர், பல நாட்டு பொருட்கள் புகார் நாளங்காடியில் விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை பட்டினப் பாலை அழகுற எடுத்து காட்டுகிறது

‘வடமலை பிறந்த மணியும் பொன்னும், குடமலை பிறந்த ஆரமும், அகிலும், தென்கடல் முத்தும், குணகடற்றுகிரும்,கங்கைவாரியும், காவிரிப் பயனும்,ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், பெரியஈண்டி வளர்தலை மயங்கிய நனந்தலை, தாய்லாந்து நாட்டின் தகுவா-பா எனும் ஊரில் பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் நாங்கூர் நாட்டைச்சேர்ந்த மணிகிராமத்தார் ஒரு ஏரியை வெட்டிய தகவலுள்ளது. மணிகிராமம் எனும் ஊர் இன்றும் புகாருக்கு வெகு அருகிலேயே உள்ளது. இன்னும் நிறைய குறிப்புகளை உதாரணமாய் சொல்லலாம்.

Full Page

அகழாய்வு:
புகார் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின் மேற்பரப்பினை ஆய்வு செய்கையில் அதன் நான்கெல்லைகளை ஓரளவு வரைவு செய்துள்ளனர்.கடல் கொண்டழிந்த புகார் நகரின் எச்சங்கள் சுமார் 6 கி.மீ தொலைவு வரை பரவிகிடக்கிறது. இதன் வடக்கு எல்லையாக மணல்மேடு என்ற ஊர் உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வாற்றங்கரையில் சுமார் 2 கி.மீ தொலைவு வரை மணல்திட்டு காணப்படுகிறது.இதில் நூற்றிற்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முக்கிய அலுவலர், படைத்தளபதிகள், அல்லது அரசகுடும்பத்தினராய் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் கிடைத்த கலயம், நெடுவாள், மக்கிய எலும்புகள் பூம்புகார் அகழ்வைப்பகத்தில் உள்ளது.
புகாரின் மேற்கே 15 கி.மீ தொலைவில் புஞ்சை என்ற ஊர் உள்ளது. இங்கு தொன்மைக்காலத்தில் உப்பு, மிளகு வாணிகம் நடைபெற்ற சான்று கிடைக்கிறது, இவ்வூரினை மேற்கெல்லையாக கருதுகின்றனர்.


தெற்கு எல்லையாக திருக்கடையூர் அடுத்துள்ள மாணிக்கப்பங்கு என்ற ஊரை கணிக்கின்றனர், ஆடலரசி மாதவி பிறந்தஊர் திருக்கடவூர், அவருக்கு மன்னரால் தானமளிக்கப்பட்டதே மாணிக்கப்பங்கு, கிழக்கே கடலே எல்லை, சிலப்பதிகாரத்தில் கூறப்படும் எல்லையான சுமார் 4 காத தூரம், அதாவது 40 கி.மீ எல்லைக்குள் இவற்றை கொண்டு வரலாம். 1963-64 ல் கே.வி.ராமன் தலைமையில் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கீழையூரை சேர்ந்த மங்கைமடத்தில் பண்டைய படகுத்துறை கண்டறியப்பட்டது. இதிலிருந்த இரு மரத்தூண்கள் படகுகளை இழுத்து வர பயன்பட்டது. பல்லவனீச்வரம் என்ற இடத்தில் புத்தவிகாரை கண்டறியப்பட்டது. கி.பி4 ம் நூற்றாண்டை சேர்ந்த புத்ததத்தர் ‘அபித்தம்மாவாதாரம்’ என்ற பாலி மொழி நூலை எழுதியுள்ளார், இதில் அவர் காவிரிபூம்பட்டினத்திலுள்ள புத்தப்பள்ளியில் இந்நூலை எழுதியதாய் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடம் இவ்விடமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது. புலிஉருவம் பொறிக்கப்பட்ட சங்ககால சோழர்காசு கிடைத்துள்ளது. வெள்ளையனிருப்பு என்ற இடத்தில் ரோமானிய காசு கிடைத்துள்ளது. வானகிரி என்ற இடத்தில் பழங்கால நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர்த்தேக்கத்திற்கு காவிரியிலிருந்து நீர் வர கால்வாய் ஒன்று இருந்திருக்க வேண்டும். இதன்மூலம் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் உறுதியாகின்றன.

-பார்த்திபன்

 

புகாரின் மேலும் பல
அகழாய்வுகளை
வரும் வாரம் காணலாம்…

Half page

Leave A Reply

Your email address will not be published.