கேள்வி குறியாகும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வு ?  தொடர் -2

0
D1

கேள்வி குறியாகும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வு ?

 

 

கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுப் புதிய ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர்கள் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் தோராயமாகச் சுயநிதி ஆசிரியர் பெற்ற தொகுப்பூதிய விவரங்கள்:

 

ஊதியக்குழு

 

D2

எண் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் சுயநிதி ஆசிரியர்கள் பெற்ற தொகுப்பூதியம்

4 1986 2,200 2,000

5 1996 8,000 3,000 – 5,000

6 2006 21,600 10,000

7 2016 57,700 10,000 – 15,000

4ஆவது ஊதியக்குழுவின் அடிப்படை ஊதியத்திற்கும் சுயநிதி ஆசிரியர்களின் தொகுப்பூதியத்திற்கும் சுமார் ரூ.200 வேறுபாடு இருந்த நிலையில், 7ஆவது ஊதியக் குழுவின் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.57,700 என்கிறபோது வேறுபாடு ஏறத்தாழ ரூ.42,000ஆக உள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

பொறியியல் கல்லூரிகளின் மீது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த மோகம் குறைந்து, கலைக் கல்லூரிகளின் மீது படையெடுக்கத் தொடங்கிப், பாடப் பிரிவுகளில் அதிகபட்சம் 60 மாணவர்களால் வகுப்பறைகள் நிரம்பி வழிகின்றன. அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தவிர்த்துச், சுயநிதி பாடப் பிரிவுகளிலும், சுயநிதி கல்லூரிகளிலும் நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டை சிறப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

இந்தப் பொன்னான நேரத்தில் சுயநிதி ஆசிரியர்களில் UGC தகுதிபெற்றவர்களுக்கு ஊதிய உயர்வாகத் தொகுப்பூதியமாக ரூ.50,000 வழங்கலாம். ஏனெனில், அரசு நிர்வாகத் துறைகளில் 8ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று அலுவலக உதவியாளர் வேலையில் தற்போது சேர்ந்தால் அடிப்படை ஊதியம்+ அகவிலைப்படி+ வீட்டு வாடகைப்படி+ நகர ஈட்டுப்படி என 20,000 மாத சம்பளம் பெறுகின்றனர். கல்லூரிகளில் முதுகலை, எம்பி.பில், பிஎச்.டி. முடித்து இதற்குமேல் செட் அல்லது நெட் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றிப் பெற்ற சுயநிதி ஆசிரியர்கள் குறைவாகவே மாத ஊதியம் பெறுகிறார்கள்.

 

கடந்த இரு வாரத்திற்கு முன்பு, மாணவர் சேர்க்கை குறைந்து, சோகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள், உயர்கல்வித்துறைச் செயலர் மற்றும் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.55,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.85,000 சேர்க்கைக் கட்டணம் பெறப்படுகின்றது. 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊதியம் மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில், சுயநிதி ஆசிரியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி மாற்றியமைக்கப்பட, மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கலைக் கல்லூரிகளில் ஊதிய உயர்வு வழங்கப் பொறியியல் கல்லூரிகளுக்கு இருப்பதுபோல் ஒரு அமைப்பு ஏன் உருவாக்கப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது.

 

சுயநிதி ஆசிரியர்களுக்கு ஊதியம்தான் குறைவாக வழங்கப்படுகின்றது என்றால் பணியாற்றுவதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற அவலமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. UGC ஊதிய நிரக்குப் பெறும் ஆசிரியருக்கு உள்ள உரிமைகள்:

 ஒரு நாளைக்கு 5 மணி நேரப் பாடவேளை – வாரத்திற்கு 6 நாள் முறையில் ஆசிரியர் வாரத்திற்கு 16 மணிநேரம் நேரடி கற்பித்தல் பணி செய்கிறார்.

 ஆண்டுக்கு 12 நாள் தற்செயல் விடுப்பு

 ஆண்டுக்கு 15 நாள் ஈட்டிய விடுப்பு

 ஆண்டுக்கு 30 நாள் மருத்துவ விடுப்பு

 பண்டிகைகளுக்காக வரையறுக்கப்பட்ட விடுப்பு 3 நாள்

 மனைவி மற்றும் பணியாளர் கருத்தடை செய்து கொண்டால் 7 நாள் விடுப்பு

 ஆண்டுக்கு 15 நாள் கல்விசார் பணிக்கும், 15 நாள் விடைத்தாள் திருத்தும் பணிக்காக 15 மொத்தம் 30 நாள்கள் பணிமேல் விடுப்பு

 கல்விசார் கருத்தரங்கம் மற்றும் அயல்நாட்டு பயணங்களுக்குப் பணிமேல் விடுப்பு வரையறை இல்லை

 தற்செயல் விடுப்பு இல்லாத நிலையில் அரை சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு

 பெண்கள் எனில் பிள்ளைபேற்றிக்காக 180 நாள்கள் விடுப்பு

N2

 நவம்பர் மாதத்தில் பருவ விடுமுறை 30 நாள்கள்

 ஏப்ரல், மே, ஜுன் மாதத்தில் பருவ விடுமுறை 60 நாள்கள்

இந்த உரிமைகளில் சுயநிதி ஆசிரியர்களுக்குச் சில கல்வி நிறுவனங்கள் ஆண்டு 12 நாள் தற்செயல் விடுப்பு வழங்குகின்றன.

 

 

இரண்டு நாள்களுக்கு மேல் தற்செயல் விடுப்பு எடுக்கமுடியாது. எடுக்கவில்லை என்றால் அந்த இரண்டு நாள் விடுப்பு அடுத்துவரும் மாதங்களில் இணைத்துக்கொள்ள முடியாது. சென்னையில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் தற்செயல்விடுப்பு என்பதே கிடையாது. விடுப்பு எடுத்தால் அந்த நாள்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும் திங்கள் விடுப்பெடுத்தால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு 3 நாள் ஊதியம் குறைக்கப்படும். வெள்ளி விடுப்பெடுத்தால் சனி, ஞாயிறு சேர்த்துக்கொள்ளப்பட்டு 3 நாள் ஊதியம் குறைக்கப்படும். அதாவது விடுமுறைகளோடு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளமுடியாது.

 

மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு போன்ற விடுப்புகள் கிடையாது.

பணிமேல் விடுப்பு கருத்தரங்கத்தில் கட்டுரை வாசிக்கும் நாளுக்கு மட்டும் வழங்கப்படும். பல கல்லூரிகளில் அதற்கும் பணிமேல் விடுப்பு கிடையாது என்ற அவலமும் உண்டு. பெண்களுக்கான பிள்ளைபேற்றிகான விடுப்பும் வழங்கப்படுவதில்லை. அது ஊதியமில்லா விடுப்பாக வழங்கப்படுகின்றது.

பருவ விடுமுறைகளான 90 நாள்களுக்குச் சில கல்லூரிகள் மட்டுமே ஊதியம் வழங்குகின்றன. பல கல்லூரிகளில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஊதியம் வழங்கும் கல்லூரிகள் கோடை விடுமுறையில் விண்ணப்பம் விற்பது, பெறுவது, விண்ணப்பங்களைத் துறை வாரியாகப் பிரிப்பது தொடர்பான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் (கொல்வார்கள்) கொள்வார்.

 

சுயநிதி ஆசிரியரின் பணி மீது கல்வி நிறுவனம் மனநிறைவு கொள்ளவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் ஆசிரியரைப் பணியிலிருந்து வெளியேற்றலாம் என்ற எழுதப்படாத நடைமுறையும் உள்ளது. ஆனால் ஆசிரியர் வேறுபணிக்குச் சென்றால் 3 மாதம் முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கவேண்டும். அல்லது 3 மாத ஊதியத் தொகையை வழங்கவேண்டும்.

வேறுபணிக்கான நேர்காணலுக்குச் சென்றால் நிர்வாகத்தின் சான்றிதழ் பெறும்போது ஆசிரியரின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் பெற்றுச் செல்ல 3 மாத ஊதியத்தை அலுவலகத்தில் செலுத்தவேண்டும். நேர்காணல் முடிந்து வந்தவுடன் கல்விச் சான்றுகள் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைத்தவுடன் ஆசிரியர் கொடுத்த 3 மாத ஊதியத்தொகை மீள வழங்கப்படும்.

மேலும் பருவத்தின் இடையில் ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகிச் செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆசிரியர் நிரந்த பணி தொடர்பாக வலியுறுத்திச் சான்றிதழ்களைக் கேட்டால், “பணிக்கு வரும்போது கைகட்டி, வாய்பொத்தி அடக்க ஒடுக்கமாகப் பணிவாக இருக்கின்றீர்கள். நிரந்த பணிக்குச் செல்வது என்றால் பணிவு எல்லாம் பறந்து போய்விடுகின்றன. நீங்க எல்லாம் ஆசிரியராக இருந்து இந்தக் கல்வி எப்படித்தான் உருப்படப்போகிறதோ” என்ற கல்வி நிறுவனர்களின் அங்கலாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

 

கல்லூரிகளில் NAAC என்னும் தேசியத் தரமதிப்பீட்டு குழு வருகை தரும்போது, கல்லூரி உயர்தகுதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்களின் திறமைகளை, வெளியீடுகளைப் பதிவு செய்வார்கள். அப்போது நிரந்த பணியில் உள்ள ஆசிரியர்களின் பதிவுகளை விடச் சுயநிதி ஆசிரியர்களின் பதிவுகள் மேலோங்கி இருக்கும்.

 

அதுபோலவே கல்லூரிகளின் தேசியத் தரப்பட்டியலுக்குச் சுயநிதி ஆசிரியர்களின் உழைப்பு இணைத்துக்கொள்ளப்படும். முதல் 10 இடங்களில் தங்களின் கல்வி நிறுவனம் இடம்பிடித்து விட்டால் வாணவேடிக்கைகளோடு கொண்டாட்டம் நடைபெறும். கொண்டாட்டத்தின் கூச்சலில் சுயநிதி ஆசிரியர்கள் உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் மறைந்துபோகும். கல்வி கற்பிப்பதில் ஒருவித அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

 

எனக்குச் சம்பளம் குறைவாக உள்ளது என்றெல்லாம் பேசக்கூடாது. மாணவர்களின் முன்னேற்றமே நம்முடைய முன்னேற்றம் என்பதை மனதில் நாம் ஆசிரியர்கள் என்ற பெருமிதத்தோடு பணியாற்றவேண்டும் என்ற இனிப்பு வார்த்தைகள் கல்லூரி விழாக்களில் இலவசமாய் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்குச் சுயநிதிப் பாடப்பிரிவுகளில் 10 ஆண்டுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தாங்கள் கலந்துகொண்ட கருத்தரங்கக் கட்டுரைகளோடும், வெளியிட்ட நூல்களோடும் இன்னும் இருக்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்தியும் நேர்காணலுக்குச் செல்வார்கள். நேர்காணலின் முடிவில் கல்விப் பணியில் சுயநிதியில் பாடப்பிரிவில் அனுபவம், கருத்தரங்கக் கட்டுரைகள், நூல்கள் வெளியீடு எதுவுமில்லாத ஒரு புதியவர் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

 

சுயநிதிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் பெருந்திட்ட ஆய்வு என்றழைக்கப்படுகின்ற Major Research Projectஇல் 10இலட்ச ரூபாய் பெற்று ஆய்வை முடித்த ஆசிரியர் ஒருவர் நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்காக 3 நேர்காணலில் கலந்துகொண்டுள்ளார். 3 நேர்காணலிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு நேர்காணலில் அந்த ஆசிரியரின் பெருந்திட்ட ஆய்வறிக்கையைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பெரிதும் பாராட்டிப் போற்றி புகழ்ந்த நிலையிலும் அவருக்கு நிரந்தரப் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்தைப் பெறுவதில் 40 இலட்சம் வரை பேரம் பேசப்படுகின்ற நிலையில், மிகக்குறைந்த ஊதியம் பெற்றுப், பெற்றோரைப் பாதுகாத்துத், திருமணத்தை முடித்துக்கொண்டு, பிள்ளைகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சுயநிதி ஆசிரியர்களின் நிரந்தரப் பணி ஆசைகளும் கனவுகளும் காற்றில் கரைந்துபோகின்றன.

 

 

 

இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் பணிநிறைவு செய்து ஓய்வு பெறப்போகும் இவர்களின் எதிர்காலம் இருண்டே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மிகக்குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் சுயநிதி ஆசிரியர்களின் வாழ்வில் யார் ஓளியேற்றப் போவது? அரசா? கல்வி நிறுவனங்களா? எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் சமூகமா? என்ற கேள்விகள் நம்முன்னே இருக்கின்றது. “சுயநிதி ஆசிரியர்களையும் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்திற்குள் கொண்டு வந்து, காலத்திற்கேற்ப அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைக்கவேண்டும்.

 

ஆசிரியரின் மனநிலை நிறைவு கொள்ளாதபோது கற்பித்தலில் அதற்கான விளைவுகள் வந்தே தீரும்” என்பதை ஆசிரியர்களின் போராட்டக் களங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர், இந்தியப் பல்கலைக்கழகக்கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தேசியச் செயலர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெயகாந்தியின் கூற்றினை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டு ம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிநிலையில் தெய்வத்திற்கு மேலாக ஒருபடி மேலே உயர்ந்திருக்கும் குரு என்றழைக்கப்படும் ஆசிரியர்களில் இருள் சூழ்ந்த சுயநிதி ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது என்பதும் ஒரு சமூகக் கடமையே என்பதை நாம் அனைவரும் மனதில் இருத்திக் கொள்வோம்.

இதற்கு முந்தி தொடரை படிக்க… கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.. 

கேள்வி குறியாகும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வு ?  தொடர் -1

https://ntrichy.com/2019/01/31/question-mark-life-self-financed-college-teachers-series-1/

 

 

–  ஆசைத்தம்பி

N3

Leave A Reply

Your email address will not be published.