எது ஒர்ஜினல் மரச்செக்கு விவரிக்கும் திருச்சி இளம் தொழில் அதிபர் புவனேஸ்வரி !

0
1

‘நலம்’ தரும் உடல் பலம் குடும்ப நலனுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்…

நம்முடைய பொருளாதார பெருக்கத்தின் விளைவால் உணவை புசிப்பதன் மீதான வெறி, அதனுள்ள நன்மை, தீமைகளை வேரறுத்து சுவையே பிரதானம் எனும் நிலைப்பாட்டினில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்ணும் உணவின் தன்மை, அது எத்தகைய பொருட்களால் உருவாக்கப்பட்டது, எதனால் இந்த உணவை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்ற எண்ண ஓட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிக்காமல் சிந்தனையை ஒருங்கே குவித்து பன்னாட்டு நிறுவன பொருள்கள் மீதான மோகத்தால் தொடர்ந்து புசிக்கிறோம்.

 

உடல் ஆரோக்கியத்துக்காக நேரம் செலவழிக் காமல், மருத்துவமனைகளில் காத்திருக்கும் தற்போது கலாச்சார நுகர்வால் சிறு குழந்தைகள் கூட விதிவிலக்கில்லாமல் துயரடைகின்றன. அப்போதெல்லாம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு பார்க்க சென்றால் விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஆப்பிள், ஆரஞ்சுகள் இன்று அத்தியாவசிய உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. பழங்கள் எடுத்துக் கொள்வது உடல் நலனுக்கு சிறந்தது என்றாலும், இன்று அதன் நுகர்வு தன்மை அதிகரித்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

 

4

நுகர்வு குறித்த அடிப்படை அறிவு இல்லாமலும், மாய விளம்பரங்களை நம்பி தொடர் நுகர்வின் விளைவு மரபணு நோய்களுக்கு ஆட்பட்டு வாழ்நாளை குறைத்து கொள்ள மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். எப்போதோ, எங்கோ ஒருவருக்கு வந்து கொண்டிருந்த உயிர்க் கொல்லி நோய்கள் இன்று மனித சமூதாயத்தின் மீது தனது பெரும் வலையை விரித்து கொத்து கொத்தாக உயிர்களை அள்ளிச் செல்கின்றன.

அறிவியல் முன்னேற்றத்தால் இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றி கொண்டாலும், தொடர் நோய் தாக்குதலாலும், புற்றுநோய் போன்ற உயிர்்க் கொல்லி நோய்கள் பரவுவதற்குமான காரணிகளாக தற்போது அறியப்படுவன நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளைச் சர்க்கரை மற்றும் உப்பு போன்றவையே.

 

‘வைத்தியருக்குக் கொடுக்கும் காசை, வாணியருக்குக் கொடு’ என்ற பழமொழியை கேட்டிருப்போம். மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி தான் இது. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, நோய்களுக்கு ஆளாகி, மருத்துவமனைக்கு அலைவதை விட, நல்ல தரமான மரசெக்கு எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதே இதன் பொருள்.

 

உணவே மருந்தென்பர் நமது முன்னோர்கள், ஆனால் நமது முன்னோர்களின் வழியை விட்டு வேறு வழியில் பயணித்து நாம் இழந்தது ஏராளம். அப்படி நம்மால் கைவிடப்பட்ட ஒன்று தான் மரச்செக்கு எண்ணெய், தற்போது பலர் அதை உணர்ந்து மரச்செக்கு எண்ணைக்கு மாறி வருகின்றனர்.

 

திருச்சி காஜாமலை பகுதியில் “நலம்” மரச்செக்கு ஆலை நடத்தி வரும் புவனேஸ்வரியிடம் ஒரு நேர்காணல்…

 

ஏன் மரச்செக்கு ஆலை தொழில் தொடங்கினீர்கள்?

எனக்கு சொந்த ஊரு மதுரை. டீச்சர் டிரெயினிங் படிச்சிருக்கேன். என் கணவரோட வேலை சூழல்ல திருச்சிக்கு வந்தோம். கொஞ்ச நாள்ல உடம்பு சரியில்லாம போச்சு, தொடர்ந்து மாத்திரை, மருந்து சாப்பிடுவது தீர்வு கிடையாதுன்னு முடிவு பண்ணேன். “உணவே மருந்து”ன்னு கொஞ்சம் கொஞ்சமா மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் போன்ற இயற்கை உணவுகளுக்கு எங்க மொத்த குடும்பமே மாற ஆரம்பிச்சோம். அப்பறம் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் ஆவூர்ல நாங்களே கூலிக்கு ஆள் வச்சு எண்ணெய் ஆட்டி கொண்டு வந்தோம். இப்போ எங்களுக்குனு 150 வாடிக்கையாளர் வந்துட்டதால, தனியா மரச்செக்கு ஆலை ஆரம்பிச்சோம்.

 

செக்கில் என்ன மரச்செக்கு, மிஷின் செக்கு எல்லாமே இயந்திரம் தானே?

2

மிஷின் செக்கின் எண்ணெய் ஆட்டும் உலக்கை இரும்பால் ஆனது, ரொம்ப வேகமா எண்ணெய்யை பிழியும். அதனால ஏற்படுற வெப்பம் பிழிகிற எண்ணெயின் தன்மையையே மாற்றி விடும். மிக மெதுவாக சுற்றும் வாகை மர உலக்கை உள்ள செக்கில் எண்ணெய் பிழியும் போது, உயிரோட்டமுள்ள எண்ணெய் கிடைக்கும். ஏன்னா இப்படி செய்யும் போது வெப்பம் ஏற்படாது. விதையின் உள்ளிருக்கும் எண்ணெயின் தன்மையும் அப்படியே கிடைக்கும். ஆனா, மரச்செக்கு மெதுவா சுத்துறதால 4 லிட்டர் எண்ணெய் எடுக்க குறந்தது 2 மணி நேரமாவது ஆகும்.

 

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன் படுத்துகிறீர்களே?

இல்லை, நாங்க வெளியூர்களுக்கு அனுப்பும்போது மட்டும் தான் வேறுவழி இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெயை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுவாக பெங்களூர், சென்னைக்கு ஒரு நாளிலேயே சென்று விடும், அவர்கள் கையில் எண்ணெய் கிடைத்த உடனேயே அதை பாத்திரத்தில் மாற்றிவிடவேண்டும். அவ்வாறு கட்டாயமாக மாற்ற சொல்லி அறிவுறுத்துகிறோம்.

15, 20 நாட்களுக்கு மேல் பிளாஷ்டிக் பாட்டிலில் இருந்தால் அதை ஒருசில்வர் பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் காயவைத்தால் அதன் சுவை மாறாமலும், தீமை இல்லாமலும் இருக்கும். பொதுவா முன்னாடி எல்லாம் எங்க கடைக்கு வரவங்க, பாட்டில்ல வாங்கிட்டு போவாங்க. அதை கம்மிபண்ணனும்னு பாத்திரம் எடுத்து வந்தா, 5 ரூபா கம்மின்னு ஒரு சலுகை கொடுத்தோம். அதில இருந்து நிறைய பேர் பாத்திரம் எடுத்துவர ஆரம்பிச்சிட்டாங்க.

உங்க மரச்செக்கு ஆலையில் வேற என்னல்லாம் ஸ்பெஷல்?

இங்க திணை, எள்ளு, கடலை, கம்பு லட்டு கிடைக்கும். ஒரிசினலான நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், குளியல்பொடி, சோப்புன்னு எல்லாமே இயற்கையான பழமை மாறாத ரெசிபியில நாங்களே அரைச்சு செய்றோம்.

 

ஓரிஜினல்னு சொல்லி நிறைய போலி பொருட்கள் வலம் வருதே?

எங்களுக்கு தேவையான எல்லா பொருளையும் புதுக்கோட்டை இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்திலதான் வாங்குறோம். ஆரம்பத்திலே நிறைய பேரு, இது தான் ஒரிஜினல்னு சொல்லி எங்ககிட்ட ஏமாத்தி வித்துருக்காங்க. இப்போ அனுபவம் அதிகமானதால, எது ஒரிஜினல்னு எங்களால சரியா கணிக்கமுடியும்.

 

இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகமா இருக்கே, அது நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

நாங்களும் பிரிட்ஜ், குக்கருன்னு எல்லாரையும் போலத்தான் வாழ்ந்துட்டு இருந்தோம். நம்மளுடைய எண்ணங்கள் தான் எல்லாத்துக்கும் காரணம். வேகமான இந்த உலகத்தில நாமலும் அவங்க கூட பயணிக்காம, கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா இந்த உலகத்தை ரசிக்கலாம். இந்த வேலை ரொம்ப பெருமையோடும், விருப்பத்தோடும் செய்யவேண்டியது.

ஆர்வம் உள்ள பெண்களுக்கு இதை கத்துதரவும் தயாரா இருக்கோம். குறைந்த லாபம் கிடைத்தாலும் மனநிறைவுக்கு பஞ்சமில்லை.

சுபா ராஜேந்திரன் 

3

Leave A Reply

Your email address will not be published.