15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

0

இன்றைய சூழ்நிலையில் பல பள்ளிகளில் விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நேரத்திலும் கூட பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கச்சொல்கின்றன. அதுவும் அரசு பள்ளிகள் முறையாக இல்லாத விளையாட்டு சாதனங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களின் காரணமாக மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கனவாகவே உள்ளது. அந்த வகையில் இந்த மாதிரியான எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கிரிக்கெட்டில் சாதிக்கின்றனர் ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தொடர்ந்து கடைசி 15ஆண்டுகளாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.

 

அதுமட்டுமின்றி அன்டர் 14, 16, 19 உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர், இப்பள்ளியின் கிரிக்கெட் அணியினர்.

இந்நிலையில், பிசிசிஐ தமிழக அளவில் 32மாவட்டங்களில் அணியினை தேர்வு செய்து ஜூனியர் சூப்பர் கிங்ஸ் என்ற போட்டியினை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்றுவரை சென்று தோற்றனர். இந்த முறை அந்த கோப்பையினை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து விளையாடி தற்போது கால்இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேவேகம் குறையாமல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நம்ம திருச்சியின் சார்பில், பயிற்சியில் இருந்த ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியின் கிரிக்கெட் கேப்டன் எம். சுதர்சன், வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன், அபு, ஜி. மதன்குமார், ஜி.ராமன் ஆகியோர்களை சந்தித்த போது…

நம்ம திருச்சி: சமீபத்தில் மறக்கமுடியாத வெற்றிகள்?
கேப்டன் எம்.சுதர்சன் : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு லீக் மேச்சில் பைனல்ஸ் வரைக்கும் போனோம் நாங்க தோற்று விடுவோம் என்கின்ற சூழல் கடைசியில் ஜெயிச்சுட்டோம். அதுதான் எங்களால மறக்க முடியாத வெற்றி.

 

 

நம்ம திருச்சி : எந்த மாதிரியான புதுமையான பயிற்சிகள் இந்தப் பள்ளியில் தராங்க?

வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எல்லா ஸ்கூல்லயும் தனியா கோச்சிங் சென்டருக்கு அனுப்பி பிராக்டீஸ் கொடுப்பாங்க. ஆனா எங்க பள்ளியில் குடுக்குற பிராக்டிஸ்சே போதிய அளவிற்கு இருக்கும். நாங்க பயிற்சி செய்ய எங்களுக்கு அதிக நேரம் வேண்டும். அதனை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வகுப்பு ஆசிரியர்கள் அனுமதி வழங்குகின்றார்கள். அதே மாதிரி மற்ற பள்ளிகளில் ஓன் கிட் தான் பயன்படுத்த சொல்லுவாங்க.எங்க ஸ்கூல்ல கிட்டை வாங்கி எங்களுக்கு கொடுக்கிறார்கள். கிரிக்கெட் பயிற்சி ஆசிரியர்கள் ராஜா சீனிவாசன் சார் ,கார்த்திக் சார், ஆகிய இருவரும் எங்களுக்கு பயிற்சியுடன் கூட தன்னம்பிக்கையும் சேர்த்து வழங்குகின்றார்கள்.

அபு : எங்களுக்கு பிரத்தியேகமாக ஒயிட் பந்தை ஆர்டர் செய்து வழங்குகின்றார்கள். இந்த சமயத்தில் இதற்கெல்லாம் நாங்கள் பள்ளிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

நம்ம திருச்சி : தோல்விகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?

மதன்குமார் : தோல்வி என்பதே எங்களுக்கு ரொம்ப ரேர். மேட்ச்னு போனாலே கண்டிப்பா ஜெயித்திடுவோம். சில சமயம் நாங்க தோத்தா அதை சகஜமா எடுத்துக்குவோம்.தோத்தாலும், ஜெயிச்சாலும்,எதிர் அணிகளிடம் கைகுலுக்கி வாழ்த்தினை தெரிவிக்க வேண்டும் என்று எங்க சார் சொல்லிக் கொடுத்திருக்காங்க. சண்டை போடக்கூடாது, டிசிப்ளினா இருக்கணும்னு சொல்லுவாரு அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றோம்.

நம்ம திருச்சி : முயற்சியும் & பயிற்சியும், இருந்தால் வெற்றிக்கு போதுமா அல்லது இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா?

ஜி ராமன் : முயற்சியும், பயிற்சியும்,இருந்தால் போதும் இதுல அரசியல் எதுவும் இல்லை அன்னிக்கி நாம நல்லா விளையாடினால் போதும் ஜெயித்திடுவோம். வெளியில அரசியல் இருக்கான்னு தெரியல.

நம்ம திருச்சி : சாதி பாகுபாடுகள் உள்ளதா?

வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எங்க பள்ளி பொறுத்தவரைக்கும் திறமைக்கு வாய்ப்பு. மற்ற பள்ளிகளிலும் அப்படித்தான் இருக்கு. ஆனால் பள்ளியை தாண்டி பெரிய பெரிய டீமில் சாதி பாகுபாடுகள் இருக்கின்றதோ? என்கின்ற எண்ணம் இருக்கின்றது.

நம்ம திருச்சி : இந்த பள்ளியில கிரிக்கெட்டுக்கு எப்படி மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்?

மதன்குமார் : ரொம்ப கடுமையான செலக்ஷனா தான் இருக்கும். எங்க பள்ளியில் மொத்தம் 2000 பேர் படிக்கிறார்கள். அதுல 200பேர் கிரிக்கெட் விளையாட வருவாங்க. அதுல 30 பேரை செலக்ட் பண்ணி அதிலிருந்து 15 பேர் எடுத்து அதிலிருந்து கிரிக்கெட் டீம்முக்கு செலக்ட் பண்ணுவாங்க.

food

வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதலே எப்படியாவது செலக்ட் ஆய்டனும்னு விளையாடிக் கொண்டே இருந்தேன்.ஆனா பத்தாம் வகுப்பில் தான் செலக்ட் ஆனேன்.

நம்ம திருச்சி : படிப்பையும், கிரிக்கெட்டையும், எப்படி பேலன்ஸ் பண்றீங்க?

மதன்குமார் : என்னைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட் தான் முக்கியம். 65% கிரிக்கெட் மீதமுள்ள 35% படிப்பு இப்படித்தான் நான் பிரித்து வைத்துள்ளேன். நான் இந்த ஸ்கூல்ல சேர்ந்த காரணமே கிரிக்கெட் தான். சில சமயம் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு உடனே கிரிக்கெட் பிராக்டீஸ் கூட பண்ணியிருக்கோம்.

அபு : நான் எட்டாவது வரைக்கும் வேற ஸ்கூல்ல படிச்சேன். அங்கேயும் கிரிக்கெட் விளையாடுவேன் ஆனால் எனக்கான திறமை வெளியில வரல. இந்த ஸ்கூல்ல நல்லா கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு இந்த ஸ்கூல்ல சேர்ந்தேன். இப்ப என் திறமையை வெளியே கொண்டு வராங்க சந்தோஷமா இருக்கு.

நம்ம திருச்சி : ஒரு சப்ஜெக்ட்ல மார்க் கம்மியா எடுத்தா வீட்ல என்ன சொல்லுவாங்க திட்ட மாட்டாங்களா?

மதன்குமார் : வீட்டுலயும் எங்களை ஒரு கிரிக்கெட் ப்ளேயராகதான் பார்க்கின்றார்கள். பாஸ்மார்க் வாங்குனா போதும்னு சொல்லுவாங்க ஆனால் நாங்க 60-70 மதிப்பெண்களை வாங்கிவிடுவோம்.

வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நல்லா படிச்சா தான் கிரிக்கெட்னு எங்க கிரிக்கெட் சார் சொல்லுவாரு அதனால நாங்களே நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும், பாடங்களை கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதேமாதிரி எந்த இடத்தில் டோர்னமெண்ட் நடந்தாலும் அந்த இடத்திற்கு நாங்க புக்கோட தான் போவோம் நேரமிருக்கும்போது அங்கேயும் படிப்போம்.

நம்ம திருச்சி : அரசு சார்பில் உதவிகள் வருகின்றன. இன்னும் ஏதாவது உதவிகள் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயம் இது?

மதன்குமார் : கிரிக்கெட் பொறுத்த வரைக்கும் நாங்க சாதாரண மேட் கிரவுண்டில் தான் விளையாடுகின்றோம் சென்னை போன்ற அணிகளுடன் மோதும்போது டர்ஃப் கிரவுண்டில் விளையாடும் சூழல் வரும் அப்போது நாங்கள் கொஞ்சம் திணறுவோம் காரணம் டர்ஃப் கிரவுண்டில் விளையாண்டு பழக்கம் இல்லை.சென்னை போன்ற அணிகள் விளையாண்டு பழக்கம் பெற்றவர்கள். ஆகையால் திருச்சியில் இலவசமாக ஒரு டர்ஃப் கிரவுண்டை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் திருச்சியில் டர்ஃப் கிரவுண்ட் இருக்கு இலவசமாக இல்லை.

நம்ம திருச்சி : சமீபத்தில் வெளியான “கனா” திரைப்படத்தைப் பற்றி உங்களின் பார்வையில்.

மதன்குமார் : பெண்களும் அவசியமாக கிரிக்கெட்டில் பங்கேற்ற வேண்டும். இந்தப் படத்துல எங்களுக்கு ரொம்ப பிடிச்சது கிரிக்கெட் கோச்சும், அப்பாவும்,ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறது.எங்க ஸ்கூல்லயும் அப்படித்தான் சப்போர்ட் பண்றாங்க. அதனாலதான் என்னவோ தெரியல எங்க பள்ளியில் “கனா” படத்தை இரண்டு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க.

நம்ம திருச்சி : நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அதை நாம் மறந்து கிரிக்கெட் பின்னே செல்வது ஏன்?

அபு : எந்த ஒரு விளையாட்டும் யாரும் மறக்கவில்லை. இன்றும் பல இடங்களில் கில்லி விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.கிரிக்கெட் பின்னால் செல்வது கிரிக்கெட் எல்லாத்துக்கும் தெரியுது. ஹாக்கி தெரியறதில்ல. ஹாக்கியும் பெரிய விளையாட்டுதான். பேசப்பட வேண்டும்.ஆனால் ஒரு சரியான கிரவுண்ட் கூட தமிழ்நாட்டில் இல்லையே என்ன செய்ய?…

ரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜா சீனிவாசன் கூறுகையில், எங்க பள்ளியின் கிரிக்கெட் டீம் தமிழ்நாட்டின் நம்பர் 1 என்கின்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டு வருகின்றது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றோம்.2000ம் ஆண்டு முதல் தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். மாணவர்கள் கடுமையான பயிற்சி செய்கிறார்கள் அதன் விளைவுகளே வெற்றி. விளையாட்டு என்பதனைத் தாண்டி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முறையான பயிற்சி இருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்றார்.

மற்றொரு பயிற்சியாளர் கார்த்திக் கூறிகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே பெரம்பலூர், அரியலூர்,போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாண்ட பொன்னர் என்கின்ற முன்னாள் மாணவன் இன்று போலீஸ் அதிகாரியாக உள்ளார். இப்பள்ளியில் கிரிக்கெட் விளையாண்டு இன்றைக்கு பலபேர் நல்ல இடத்தில் உள்ளார்கள் என்றார்.

பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேஷ் கூறுகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியில் அட்மிஷன் போட வராங்க.எல்லாக் ஆக்டிவிட்டியையும் என்கரேஜ் பண்றோம்.கல்வியை மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்காமல் என்.சி.சி., ஸ்கவுட்,ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ் போன்ற எல்லாத்தையும் சேர்த்து கற்றுத்தரோம். மாணவர்கள் இத்தகைய சாதனைகளை செய்வதை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஊக்குவிப்போம் என்றார்.

-ஜோல்னா ரெங்கா

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.