திருப்புகலூரில் உள்ள வாஸ்து கோயில் செங்கல் வைத்து நடைபெறும் பூஜை…!!!

0
1

புதிதாக வீடு கட்டுபவர்கள் கோயிலுக்குச் சென்று, சுவாமி அம்பாளுக்கு ஒரு அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்வார்கள். தடையின்றி நல்லபடியாக வீடு கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். ஆனால், நாகை மாவட்டத்தில் ஒரு கோயிலில் சுவாமி சந்நிதி முன்பாக சிறு மேடை மீது செங்கற்கள் வைத்து பூஜை செய்து, அந்த செங்கற்களை வீடு கட்டுபவர்கள் பெற்றுச் செல்கிறார்கள். அந்தச்செங்கற்களை வைத்துக் கட்டப்படும் வீடு தங்கு தடையின்றி கட்டி முடிக்கப்படுவதாகவும், அந்த வீட்டில் வசிப்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அந்தக் கோயிலுக்கு “வாஸ்து கோயில்” என்கிற சிறப்புப் பெயரும் வந்து சேர்ந்து கொண்டது.

 

நாகை மாவட்டத்தில், நன்னிலம் அருகே திருப்புகலூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, கருந்தாழ் குழலி எனப்படும் சூளிகாம்பாள் உடனுறை அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில். புராண காலச் சிறப்புகளும் ஆன்மீகப் பெருமைகளும் நிறையப் பெற்றிருக்கும் திருத்தலம். அந்தப் பெருமைகளை நிறைவாய்ப் பெற்றிருக்கும் திருத்தலம். வேளாக்குறிச்சி ஆதீன அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில் இது.

கோயிலின் உள்ளே நாம் நுழைந்தவுடனேயே, இரண்டு குடும்பத்தினர் நமக்கு அறிமுகம் ஆனார்கள். பூந்தோட்டம் கிராமத்திலிருந்து வந்திருக்கும் அபிராம சுந்தரி – ஜெயராமன் தம்பதியினர். இந்த “வாஸ்து கோயில்” குறித்து நமக்கு தகவல் தெரிவித்தவர்கள். வேளாங்கண்ணியிலிருந்து வந்திருந்த மகாலட்சுமி – கோமலநாதன் இன்னொரு குடும்பத்தினர். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த அந்த இரண்டு குடும்பத்தினரும், “செங்கல் வைத்து பூஜை செய்து, அந்தச் செங்கற்களைப் பெற்றுச் செல்லவே நாங்கள் இந்த “வாஸ்து கோயிலு”க்கு வந்திருக்கிறோம்.” என்று நம்மிடம் தெரிவித்தனர்.

 

2

விரிக் கரையோர சிவத் தலங்களில் இது எழுபத்தைந்தாவது திருத்தலம். புன்னை மரம் தல விருட்சம். அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு அக்னீஸ்வரர், சரண்யபுரீஸ்வரர் மற்றும் கோணப்பிரான் என மூன்று பெயர்கள் உண்டு. இறைவி மட்டும் என்ன? கருந்தாழ் குழலி மற்றும் சூளிகாம்பாள் என இரண்டு திருப்பெயர்கள். அக்னி பகவானுக்குக் பாவ விமோசனம் கொடுத்து சிவபெருமான் காட்சியளித்த திருத்தலம் என்பதால் அக்னி பகவானுக்கு இங்கு தனியாக திருவுருவச் சிலை அமைந்துள்ளது.

 

இத்திருத்தலப் பெருமைகள் குறித்து திருநாவுக்கரசர் ஐந்து பதிகங்களும், திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடி உள்ளனர். 
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலநக்க நாயனார், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார் மற்றும் பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட திருத்தலம் இது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்துக்கும் உரிய தோஷங்களை நிவர்த்தி செய்து அருளும் தலம். கருவறைக்கு வெளியே தென்புறம், இறந்த காலத்துக்கு உரியவரான பூதேஸ்வரர் சன்னதியும், வடபுறம், நிகழ் காலத்துக்கு உரியவரான வர்த்தமானீஸ்வரர், இறந்த காலத்துக்கு உரியவரான பவிச்சேஸ்வரர் என தனித்தனியே சந்நிதிகள் அமைந்துள்ளன. இவர்களை வணங்கி வழிபட்டு பித்ரு தோஷ நிவர்த்தி செய்து கொள்வதன் மூலமாக வாழ்க்கையில் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியன பெற்று பேரின்பப் பெரு வாழ்வு வாழலாம் எனச் சொல்லப்படுகிறது.

மியில் பிறக்கும் உயிர்களுக்கெல்லாம் புகலிடம் தந்து வரும் தலம் என்பதால் திருப்புகலூர் என்கிற பெயர் நிலைத்துப் போனது. நள மகாராஜாவுக்கே புகலிடம் தந்து, அவரது தோஷம் நிவர்த்தி செய்ய பக்கபலமாக இருந்த தலம் இது. சனி தோஷம் விலகிட இக்கோயில் திருக்குளத்தில் நீராடி வேண்டுகிறார் நளன். அப்போது “இங்கிருந்து ஏழு கல் தொலைவில் உள்ள திருநள்ளாறு தலத்தில் உமது தோஷத்தை விலக்கிக் கொள்கிறேன்.” என சனி பகவான் அசரீரியாகப் பேசுகிறார். அதன்படி நள மகாராஜாவுக்கு திருநள்ளாறு திருத்தலத்தில் சனி தோஷம் விலகுகிறது. அதனால் இத்திருக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். காக்கையை வலது தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இக்கோயிலில் சிலை உள்ளது.

 

அதெல்லாம் சரி. எல்லாப் பெருமைகளும் இறைவனுக்கு மட்டும் தானா? இறைவிக்கு இல்லையா? ஏன் இல்லை! இறைவிக்கும் பெருமைகள் பல இருக்கின்றன. அவைகளில் ஒன்று.
திருப்புகலூர் அருகே போலகம் எனும் ஒரு கிராமம். பிரசவ வலியினால் ஒரு பெண் துடிக்கிறாள். சொல்லிய நேரத்துக்கு வெளியூரில் இருந்து மருத்துவச்சி வரவில்லை. வரவும் முடியாது. காரணம், திருமலைராஜன் ஆற்றிலும் அரசலாற்றிலும் கரை புரண்டு ஓடுகிறது வெள்ளம். அந்தப் பெண்ணின் தாய், மகளை விட துடிதுடித்துப் போகிறாள். கருந்தாழ் குழலி அம்மனிடம் வேண்டிக் கொள்கிறாள். உள்ளூரிலாவது யாரையாவது அழைத்து வரலாம் என்று வெளியே போகிறாள். யாரும் உதவிக்கு வரவில்லை. சோர்ந்து போய் வீட்டுக்கு வருகிறாள். உள்ளே குழந்தை அழும் குரல் கேட்கிறது. அழகிய ஆண் குழந்தை. தாயும் சேயும் நலம். ஆச்சர்யப்பட்டுப் போகிறாள். அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.

 

4

மகள் கூறுகிறாள், “அம்மா, நீ வெளியே சென்றிருந்த நேரத்தில் வெள்ளைப் புடவையணிந்த அம்மா ஒருவர் இங்கு வந்திருந்து, எனக்குப் பிரசவம் பார்த்து விட்டுச் சென்றார்.” என்று. அதன் பின்னரே வாசலைக் கவனிக்கிறாள். வாசலிலிருந்து வெள்ளைத் துணி கிழிசல்கள் எங்கோ தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அப்போது ஆறுகளில் ஓரளவு வெள்ளமும் வடிந்து விட்டது. வாசலில் இருந்து தொடங்குகின்ற வெள்ளைப்புடவைக் கிழிசல்களைத் தொடர்ந்து நடந்து போகிறாள். என்னஆச்சர்யம்?அந்தக் கிழிசல் துணி அடையாளம் ஆனது, திருப்புகலூர் கோயில் வாசல் வரை வந்து முடிந்துள்ளது.மெய் சிலிர்த்துப் போகிறது அந்த அம்மாவுக்கு. கோயிலின் உள்ளே சென்று அம்மன் சந்நிதி அடைகிறாள்.

 


கருவறையில் எப்போதும் இல்லாதபடிக்கு, கருந்தாழ் குழலி அம்மன் அப்படியே வெள்ளைப் புடவையில் காட்சியருளினாள். அவளுக்குப் புரிந்து விட்டது. தனது வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்துச் சென்றது வேறு யாருமல்ல, சாட்சாத் இந்தக் கருந்தாழ் குழலி அம்மன் தான் என்று உணர்ந்து கொண்டு, அந்த நிமிடத்தில் தன் கண்ணீரைக் காணிக்கை ஆக செலுத்தினாள். அந்த அம்மா அது மட்டும் செய்யவில்லை.

வீட்டுக்கு வருகிறாள். தங்கள் வீட்டு வயல்கள் அத்தனையும் கோயிலுக்கே எழுதி வைத்து விடுகிறாள். அந்த வயல் தற்போதும், போலகம் கிராமத்தில் திருக்கோயில் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு “மருத்துவக் காணி நிலம்” என்று இப்பவும் அதே பெயரில் வழங்கி வரப்படுகிறது.
இந்தப் பகுதியில் பிரசவ காலத்தின் போது எந்தக் கர்ப்பிணிக்கும் குழந்தை இறப்பு என்பது ஏற்படுவதில்லை. பிரசவம் நிகழ்ந்து தாயும் சேயும் நலமுடன் வாழ்கின்றனர். அம்மன் சந்நிதியில் தினசரி சாயரட்சை பூஜா காலத்தின் போது, கருந்தாழ் குழலி எனப்படும் சூளிகாம்பாள் அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றித் தான் பூஜை செய்யப்படுகிறது.

 

திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், சாயரட்சை பூஜையின் போது அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வணங்கி வழிபடுகிறார்கள்.
அதற்குள் அர்ச்சகர் குரல் கேட்கிறது. “சுவாமி சந்நிதி முன்னால செங்கல் வைத்து பூஜை பண்ணிக்க வேண்டியவங்க எல்லாம் வந்துடுங்க.” என்று ஓங்கி குரல் கொடுக்கிறார். பூந்தோட்டம் கிராமத்திலிருந்து வந்திருப்பவர்களும், வேளாங்கண்ணியிலிருந்து வந்திருப்பவர்களும் தலா மூன்று செங்கற்களுடன் அங்கு வந்து சேர்கின்றனர். சிறு மேடை மீது அந்த செங்கற்கள் வைக்கப்படுகின்றன. அவைகளுக்கு மஞ்சள் சந்தனம் பூசி குங்குமம் இடப்படுகிறது. அதன் மீது பூக்கள் சொரியப்படுகின்றன. அந்த செங்கற்களுக்குத் தனி மரியாதையும் தனி அந்தஸ்தும் வந்து விடுகிறது. அர்ச்சகர், அந்த செங்கற்களுக்குப் பூஜை செய்கின்றார். வணங்கி வழிபட்டு பூஜை நிறைவு பெற்ற பின்னர், அந்த வெவ்வேறு இரண்டு குடும்பத்தினர்க்கும் பூஜிக்கப்பட்ட தலா மூன்று செங்கற்களைத் தருகிறார். பக்தியுடன் அதனைப் பெற்றுக் கொள்கிறார்கள் அவர்கள்.

 

“நாங்க எங்க ஊர்ல எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு கடை கட்ட போறோம். அதுக்கு தான் இந்த வாஸ்து கோயில்ல பூஜை செஞ்சு செங்கல் வாங்கிட்டுப் போறோம். இந்தக் கோயில்ல செங்கல் வாங்கிட்டுப் போயி கட்டிட வேலை ஆரம்பிச்சாலே, விறுவிறுனு முடிஞ்சுடும். வீடா இருந்தா அவுங்க வாழ்க்கை நல்லா இருக்கும். கடை அல்லது ஒரு தொழில் நிறுவனமா இருந்தா அவுங்க யாவாரமோ, தொழிலோ நல்லா நடந்துகிட்டு இருக்கும். நமக்கு அது தாங்க வேணும்” என்கிறார்கள் பூந்தோட்டம் கிராமத்தின் அபிராம சுந்தரி – ஜெயராமன் தம்பதியினர் அந்த நம்பிக்கையினை அப்படியே நம்மிடம் வழிமொழிகிறார்கள் வேளாங்கண்ணியிலிருந்து வந்திருக்கும் மகாலட்சுமி கோமலநாதன் குடும்பத்தினர். வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது அந்த மூன்று செங்கல்லில் ஒன்றினை வாசல் நிலை மேல் வைத்தும், இன்னொன்றினை ஈசான மூலையில் வைத்தும், மற்றொன்றினை பூஜையறை சுவர் மேல் வைத்தும் கட்டிடம் கட்டி எழுப்ப வேண்டும்.

“தேவார மூவர் பாடல் பெற்ற திருத்தலம். அதில் சுந்தரர் ஒருவர். திருவாரூரில் மண்டபம் கட்டி வருவோர்க்கெல்லாம் அன்னதானம் செய்வதற்காக, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அதற்கான வழிவகைசெய்திட பொருள் வேண்டி பயணம் செய்கிறார். வேண்டிய பொருள் குவிந்தபாடில்லை. மனம் சோர்ந்து, திருப்புகலூர் வந்து சேர்கிறார். இரவு நேரமாகி விடுகிறது. அவர் வருவதற்கு முன்பாகவேக் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கிறது. இனி என்ன செய்வது? கோயில் திறந்திருந்தால் உள்ளேயாவது படுத்துக் கொள்ளலாம். அதனால், கோயில் வாசலில் படுத்துத் தூங்குகிறார். படுப்பவர் சும்மா படுக்கவில்லை. தலைக்கு வைத்துக் கொள்ள சற்று உயரமாக ஏதாவது வேண்டுமே? ஒரு செங்கல்லை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்க முயற்சிக்கிறார். உறக்கம் வந்து தாலாட்ட மாட்டேன் என்கிறது. மனசுக்குள் திருவாரூரில் மண்டபம் எப்படி கட்டி முடிப்பது என்று பெருங்கவலை. நடந்து வந்த களைப்பில் கொஞ்ச நேரத்தில் தூங்கியும் விடுகிறார்.

 

காலையில் எழுந்து கண்விழித்துப் பார்க்கிறார். என்ன மாயம்? என்ன ஆச்சர்யம்? சுந்தரர் படுக்கும் போது தலைக்கு வைத்திருந்த சாதாரண செங்கல், அப்படியே தங்கமாக மாற்றம் பெற்று பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளபடியே மெய் உருகிப் போகிறார் சுந்தரர். ஈசனின் திருவிளையாடலினால் சாதாரண சுட்ட செங்கல்லும் அப்படியே அசல் தங்கமாக மாறி இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறார். அப்புறம், இதை விட வேறென்ன வேண்டும்? திருவாரூர் சென்று மண்டபம் கட்டி முடிக்கிறார். சுந்தரருக்கு செங்கல்லை பொற்கல்லாக மாற்றித் தந்த இத்திருத்தலத்து அக்னீஸ்வரன், தன்னை வணங்கி வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு, பூஜிக்கப்பட்ட செங்கற்களை வழங்கி வீடு, கடை, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களை நல்லபடியாகக் கட்டித் தந்து நல்வாழ்வு வாழ வைத்துக் கொண்டிருக்கிறான்.” என்று சற்று விரிவாகப் பேசுகிறார் வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் ல சத்தியஞான மகாதேவதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

3

Leave A Reply

Your email address will not be published.