திருச்சியில் மாபெரும் இயற்கை விவசாய பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் பிப்.2-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை 9 நாட்கள் மாபெரும் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல வேளாண் வல்லுனர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நேரடியாக பயிற்சி அளிக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:


ஈஷா விவசாய இயக்கத்தை நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினோம். இயற்கை விவசாயத்தின் மூலம் தமிழக மக்கள் நஞ்சில்லா உணவும், நோயில்லா வாழ்வும் பெற வேண்டும் என்பதே ஈஷா விவசாய இயக்கத்தின் பிரதான நோக்கம்.
விவசாயம் செய்வதற்கு மண் வளம் என்பது மிகவும் ஒரு அடிப்படையான ஒன்று. இயற்கை விவசாயத்தினால் மட்டுமே மண்ணை வளமாக வைத்து கொள்ள முடியும். தற்போதைய நிலையில், ஒருவர் ரசாயன விவசாயத்தை கைவிட்டு இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமானாலும், அந்த இயற்கை விவசாய முறை வெற்றிகரமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும், அந்த முறை தற்சார்பு உடையதாகவும் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது, சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய முறை மிக உகந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் சுபாஷ் பாலேக்கரின் வழிமுறையை பின்பற்றி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
இதன்காரணமாக, ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு பல்லடத்தில் ஒரு மாபெரும் இயற்கை விவசாய பயிற்சியை 8 நாட்கள் நடத்தினோம். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு சுபாஷ் பாலேக்கர் நேரடியாக விவசாய பயிற்சி அளித்தார்.

இதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாதந்தோறும் ஏராளமான பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். அதன்மூலம், தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற 4,256 விவசாயிகள் ஈஷா விவசாய இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறி உள்ளனர். அவர்களில் 3,120 விவசாயிகள் 14 ஆயிரத்து 862 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாய செய்து வருகின்றனர். சுபாஷ் பாலேக்கரின் வழிமுறைகளை ஈஷா விவசாய பண்ணைகளில் பரிசோதித்து பார்த்தோம். அந்த முறைகள் வெற்றிகரமாக உள்ளன.
அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சுமார் 3,000 இயற்கை விவசாய பயிற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் திருச்சியில் ஒரு மாபெரும் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பை நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சி, திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் வரும் பிப்.2-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உணவும், தங்கிமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல வேளாண் வல்லுனர் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் அவர்கள் இந்த பயிற்சி வகுப்பை நேரடியாக நடத்த உள்ளார். இந்த பயிற்சியில் நெல், கரும்பு, தென்னை, வாழை உட்பட தமிழகத்தில் விளையும் அனைத்து பயிர்களின் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இயற்கை விவசாயத்தின் அடிப்படை விஷயங்களில் ஆரம்பித்து இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு, நாட்டு மாடுகளின் அவசியம், பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம், மண்ணை வளப்படுத்தும் வழிமுறைகள், விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் என இயற்கை விவசாயம் தொடர்பாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
இந்த 9 நாள் பயிற்சிக்கு பிறகு பயிற்சி பெற்ற விவசாயிகள் தங்களது பண்ணையை வெற்றிகரமான மாதிரி பண்ணையாக மாற்றி அவர்களுடைய பகுதி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த உள்ளோம். மேலும், இதன் தொடர்ச்சியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த விவசாய பயிற்சியாளர்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் புதிய இயற்கை விவசாயிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 8300093777, 9442590077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சுவாமி ஸ்ரீமுகா கூறினார்.
ஈஷா விவசாய இயக்கத்தின் தன்னார்வலர் திரு.முத்துக்குமார் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
