என் உயிரைக் காப்பாற்றிய திருச்சி காரோட்டி நண்பன் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

என் உயிரைக் காப்பாற்றிய திருச்சி காரோட்டி நண்பன் ஸ்டாலின் நெகிழ்ச்சி !
திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “என் உயிரைக் காப்பாற்றியவர் முன்னாள் எம்.எல்.ஏ பரணிகுமார்” என்று நெகிழ்ந்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ பரணிகுமார் மகள் கீர்த்தி பரணிகுமார்-ராஷ்மி முகிலன் திருமண விழா திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இன்று (ஜனவரி 23) நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ஆபத்தான ஒரு சமயத்திலிருந்து என்னை காப்பாற்றியவர் பரணிகுமார். ஒருமுறை விருதுநகர் மாவட்டத்தில் நாங்கள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிந்தோம். அப்போது கார் ஓட்டி வந்தவர் தம்பி பரணிகுமார். முன்சீட்டில் நானும், பின்சீட்டில் அன்பில் பொய்யாமொழி, அப்போதைய விருதுநகர் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் அமர்ந்திருந்தோம். அப்படி பயணம் செய்கையில், ஓரிடத்தில் ரயில்வே கேட் திறந்திருந்தது. எங்களது கார் தண்டவாளத்தை கடக்கையில் இடதுபுறம் ரயில் வருவதைப் பார்த்து அப்படியே கொலை நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தோம்.
ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட பரணிகுமார், காரை வேகமாக ஓட்டி தண்டவாளத்தை கடந்தார். திரும்பிப் பார்த்தால் ரயில் எங்களை கடந்துசென்று கொண்டிருக்கிறது. அன்று இரவு முழுவதும் எங்களால் தூங்க முடியவில்லை. இந்த செய்தி காட்டுத் தீபோல பரவி எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தோம் என்றால் அதற்கு காரணம் பரணிகுமார்தான்” என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.
மேலும், “மேகதாட்டு அணையை கட்டுவதற்கான முழு ஆய்வறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது என்ற விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்துள்ளது. மத்திய அரசும் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கைக் கூட வெளியிடவில்லை என்பது வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது” என்றும் விமர்சித்துள்ளார்.
