உயிர் வளர்ப்போம்! -12 (கதை வழி மருத்துவம்)

அருளமுதம் எனும் அருமருந்து

0
1 full

மன்னன் தன் மனதில் எழுந்த ஐயத்தை யோகியாரிடம் “அய்யனே, தாங்கள் தளபதியின் பாதங்களில் ஏதோ ஒரு அதிசய பொடியை தடவி குணப்படுத்தினீர்களே. அது என்ன பொடி? அதன் மகத்துவத்தை எங்களுக்கு விளக்கி அருளுங்கள்” என்று முன் வைத்தான். மன்னனை கூர்ந்து நோக்கிய யோகியார்.

“மன்னா, நீங்கள் அனைவரும் நினைப்பது போல ஒரு சிறப்பான மருந்து என்பது அதிசயமானதாக, இரகசியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில் அந்த பொடியில் அடங்கியுள்ளவை இரண்டே எளிய வத்துக்கள் தான். அதுவும் அவையிரண்டும் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துபவைதான்” என்று கூறினார்.

இதனைக் கேட்ட மன்னன் ஆச்சரியத்தில் மூழ்கினான். யோகியாரின் பீடிகை அனைவரின் மனதிலும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியிருந்தது. அனைவரும் யோகியாரிடம் அந்த இரண்டு மருந்துகளின் பெயரையும், அப்பொடியை தயாரிக்கும் முறையையும் கூறுமாறு வேண்டினர். ஆனால் யோகியாரோ அனைவரையும் நோக்கி, “என் அன்பு மக்களே, இந்த எளிய பொடியில் அடங்கியுள்ள பொருட்களை அறிந்து கொள்ள இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்களே, இப்பொடியை விட அதிசய மருந்து ஒன்று உங்கள் அனைவரிடமும் இருப்பதை அறிவீர்களா? இம்மருந்து எந்த ஒரு நோயையும் குணமாக்கிட வல்லது. இதுவே மருந்துக்கெல்லாம் மாமருந்து. இதுவே உங்கள் அனைவருக்கும் அக்குயோகா கலை வாயிலாக நாம் அளிக்க உள்ள குருமருந்து. இறைவன் உங்கள் அனைவருக்கும் அளித்த திருமருந்து “அதுவே” ஆகும் என மேலும் ஒரு பீடிகையை போட்டார்.

2 full

இதனைக்கேட்ட அனைவருக்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது. “நமக்குள் ஒரு மாமருந்தா?” என மன்னன் திகைப்புடன் கேட்டான். மேலும் “எங்கள் அனைவருக்கும் அந்த குருமருந்தை தெளிவுபடுத்தி அருளுங்கள், அய்யனே” என அனைவரும் பணிந்து வேண்டினர்.
யோகியார் சிரித்தபடி ஒவ்வொன்றாய் கூறுகிறேன். பொறுமையுடன் கேளுங்கள். முதலாவதாக அந்த பொடியில் உள்ள இரண்டு பொருட்கள் இஞ்சியும் உப்பும் தான்.
இஞ்சியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இஞ்சியில் உப்பினை கலக்க வேண்டும். இஞ்சியின் எடையில் கால் பங்கு உப்பினை கலக்க வேண்டும். இக்கலவையை நிழலில் 1 வாரம் பரப்பி காய வைக்க வேண்டும். காய்ந்த கலவையை நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

இதுவே அந்த பொடியினை தயாரிக்கும் முறை ஆகும். இப்பொடியினை இரு உள்ளங்கால்களிலும் இரவு உறங்கும் முன்னர் ஒரு துணியில் வைத்து கட்டிக்கொண்டு உறங்கிட வேண்டும். இவ்வாறு உறங்கும் பொழுது, உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் யாவும் நாளடைவில் நீக்கம் பெறும். 21 நாட்கள் இதனை தொடர்ந்து செய்து வர உடலின் கழிவுகள் யாவும் நீங்கி களங்கமற்ற தேகம் வாய்க்கப்பெறும். அடுத்ததாக நான் கூறிய அரிய குருமருந்தை பற்றி கூறுகிறேன். அது உங்கள் உடலின் நடு பாகத்தில் மறைந்துள்ளது. இதனை திருமூலர் பெருமானின் பாடல் மூலம் அறியலாம்” என்றார்.

“மாறா மலக்குதம் தனிமேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அன்னலும் அங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே”
என யோகியாரின் கனிவான குரலில் ஒலித்த அந்த திருமந்திரப்பாடலின் விளக்கத்தை அவர் கூறலானார். “அன்பர்களே, நமது உடலில் மலக்குதம் எனப்படும் எருவாயிலிருந்து (ஆசனவாய்) இரு விரல்கள் மேலாகவும், கூறா இலிங்கம் எனப்படும் ஆண்/பெண் குறியின் கீழாகவும் உள்ள மூலாதாரம் எனும் புள்ளியில் தனஞ்செயன் எனும் வாயுவானது அடங்கியுள்ளது. நாம் தாயின் வயிற்றிலிருந்து உதைத்து வெளிவருதற்கு இந்த தனஞ்செயன் வாயுவே கால்கள் இரண்டிற்கும் சக்தி அளித்தது. அதன் பின்னர் அவ்வாயுவானது நமது மூலாதாரத்திற்குள் சுருண்டு அடங்கி விடுகின்றது. இவ்வாற்றல் பொருந்திய தனஞ்செயன் வாயுவே நான் கூறிய அரிய மருந்தாகும். எப்போதும் நம் உடலில் அமைதியாக உறங்கும்.

 

இதுவே உடலின் எந்த ஒரு பிணியையும் நீக்கும் அறிய பணியைச் செய்ய வல்லது.” இவ்வாறு யோகியார் அந்த அறிய மருந்தைப்பற்றி கூறியதும் அனைவரின் மனதிலும் ஒரு குழப்பம் எழுந்தது. இதனை எவ்வாறு எடுத்து பயன்படுத்துவது? நமது உடலில் இப்படி ஒரு அரிய மருந்து இருந்தும் நமக்கு ஏன் நோய் தோன்றுகின்றது? என பலவாறான கேள்விகள் எழுந்தன.
மன்னன் மக்களின் பிரதிநிதியாக இக்கேள்விகளை யோகியாரிடம் முன் வைத்தான். ஆனால் யோகியாரோ “கோட்டையை அடைந்த பின் இதனை பற்றிய விளக்கத்தை அளிக்கிறேன். இம்மருந்தினை உபயோகிக்கும் முறையை உமக்கு கூறும் முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. இப்போது பயணத்தினை நாம் தொடரலாம். பயணத்தினிடையே அக்குயோகாவின் அடிப்படைகளை மேலும் விளக்குகிறேன்” என அறிவுறுத்தினார். யோகியரின் அறிவுரையை ஏற்ற மன்னன் பயணத்தினை தொடர ஆணையிட்டான்.

 

மீண்டும் தொடர்ந்த பயணத்தில் அவர்கள் அடுத்தபடியாக கடந்து வந்தது கணல்வாயன் மலையை. இந்த இடம் இயல்பாகவே சற்று வெம்மையாக விளங்கியது. அந்த இடத்தில் வெப்பம் ஏற்படக் காரணம் கணல்வாயன் மலையின் நடுவே எரிந்து கொண்டு இருக்கும் எரிமலைக் குழம்பாகும். பலநூறு ஆண்டுகளாக இம்மலை தீயை அவ்வப்போது கக்கியபடி உள்ளது.

 

மன்னன் அந்த மலைப்பகுதியை கடக்கும் பொழுது சற்று வருத்தத்துடன் “இந்த எரிமலை நமது அரசாங்கத்துக்குட்பட்ட நிலப்பரப்பில் ஒரு பெரும் பகுதியை பயனற்றதாக ஆக்குகின்றது” என்றான். இதனைக் கேட்ட அனைவரும் மன்னனை ஆமோதித்தனர். ஆனால் யோகியாரின் கருத்து வேறாக இருந்தது. அவர் மன்னனிடம், “மன்னா, இந்த எரிமலை இருப்பதால்தான் தங்கள் நாடு சுபிட்சத்துடன் விளங்குகின்றது. இம்மலையும் அதன் வெப்பமும் இல்லாவிட்டால் தங்கள் நாடு ஒரு பனி பிரதேசமாக விளங்கி இருக்கும். மேலும் இதிலிருந்து வெளிப்படும் குழம்பானது ஆறிய பின் தாவரங்களுக்கு மிகச்சிறந்த உரமாக திகழ்கின்றது.

 

நம் நாட்டின் மண் வளமுடன் திகழ்வதற்கு இந்த எரிமலையின் குழம்பே காரணம். தமது நாட்டின் மண்ணுக்கு ஆற்றல் அளிப்பதே இந்த நெருப்புதான்”என்றார். இதனைக் கேட்ட மன்னன் உட்பட அனைவரும் இறைவனின் படைப்பில் உள்ள அற்புதத்தை எண்ணி வியந்தனர். இயற்கையின் சமன்பாட்டினை நன்கு புரிய வைத்த யோகியாருக்கு தம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். அதற்கு யோகியார் “நன்றிகளை அனைவரும் இறைவனுக்கு தெரிவியுங்கள். இந்த நாட்டின் நல்வளத்திற்காக கணல்வாயன் மலையினை தந்த இறைவன் மகத்தானவன்.
நெருப்பினை படைத்து அதனை பூமியில் வைத்துள்ள இறைவன் நமது உடலிலும் இந்த நெருப்பினை நிலைப்படுத்தியுள்ளான். இந்த நெருப்பு எனும் பூதம் நம் உடலில் செயல்படுவதால்தான் நாம் இயங்கவும், உயிருடன் வாழவும் முடிகின்றது. குறிப்பிட்ட இந்த வெப்ப நிலை குறைந்து விடுமே ஆயின் நமது உடலின் உறுப்புகள் எதுவும் இயங்கிட இயலாது. உடலின் நரம்பு மண்டலம் முழுவதும் இந்த நெருப்பு பூதத்தினாலேயே உயிர்ப்புன் திகழ்கின்றது” என நெருப்பு பூதத்தின் பெருமைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மேலும் நெருப்பு பூதத்தின் இயல்புகளை வகுத்துக் கூறலானார். “எல்லா பூதங்களுக்கும் ஒரு ஜோடி கரு மற்றும் உரு-உறுப்புகள் இருப்பதை ஏற்கனவே கூறியுள்ளேன்.

 

ஆனால் இந்த நெருப்பு பூதத்திற்கு மட்டும் இரண்டு ஜோடி கரு மற்றும் உரு உறுப்புகள் உள்ளன. கரு ஒன்று-இருதயம், கரு இரண்டு – இருதய மேலுறை, உரு ஒன்று-சிறுகுடல், உரு இரண்டு மூவெப்பமண்டலம். இரண்டாவதாக வருகின்ற கரு-உரு உறுப்புகள் இரண்டும் உண்மையில் முதல் கரு-உரு உறுப்புகளின் நீட்சி ஆகும். இருதயத்தின் மேல் உள்ள உறை இருதயத்தில் உண்டாகும் வெப்பத்தினை உடலில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு கடத்துகின்றது. அவ்வாறே சிறுகுடல் உணவினை எரித்து உண்டாக்கும் வெப்பம், மற்றும் இருதய உறையின் வெப்பம் ஆகிய இரண்டையும் உடலில் மூன்று மண்டலங்களாக பகுந்து அளிப்பது மூவெப்ப மண்டலம் ஆகும்.” என விளக்கிய யோகியார் நெருப்பு பூதத்தின் இயல்புகளை பற்றி மேலும் கூறலானார்.

தொடரும்…

3 half

Leave A Reply

Your email address will not be published.