ஆதி மகள்-3

0
D1

காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஜானகி அம்மாளும், சண்முகநாதனும் பின்தங்கிப் போனார்கள். தனக்கு பிடிக்காதவனுடன் திருமணம் இல்லை என்பதில் காயத்ரி தீர்க்கமாக இருந்தாள். வீட்டின் மங்கல பரபரப்பு சற்று குறைந்து போனது. எப்படியாவது மகளின் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற அதிகப்படியான உணர்வு மோதல்களின் முடிவு இருவருக்கும் சோர்வைத் தந்தது. வீட்டினுள்ளே மூவரும் மௌனித்து தனித்தனியே ஆனார்கள். வீட்டின் அமைதியின் இறுக்கம் காயத்ரியை பாதிப்பதாக தெரியவில்லை. யாரோ ஒருவன் அவளுக்காக வந்து கொண்டிருக்கிறான். நான் அவனுக்காக காத்திருக்கிறேன் என்பதுபோல ரயில் நிலைய பயணியாய் காத்திருந்தாள். மற்ற யாருடனும் பேச ஏதும் இல்லாதது போன்ற ஓர் உணர்வில் நிலைத்தாள் காயத்ரி.

 

ஜாதகப் பரிகாரங்களும் பலனளிக்கவில்லை. கோவில் வேண்டுதல்களும் குறைந்தபாடில்லை. ஜானகி அம்மாளும் மனது வெக்கையும், வெறுமையுமாய், வெளிச்சமும், மங்கலுமாய் மாறி மாறி தடுமாறியது. ஒருவேளை தனது பெண் யாரையும் மனதில் வைத்து காத்திருக்கிறாளோ என சந்தேகப்பட்ட, சண்முகநாதன் ஒருநாள் காயத்ரியிடம் கேட்டே விட்டார். ஏம்மா! உனக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா? அத மனசில வைச்சிக்கிட்டுத்தான் வரும் மாப்பிள்ளைகளையெல்லாம் வேண்டாங்கிறியா? என்று கேட்டே விட்டார்.
சிறிது நேரம் அப்பாவையே உற்றுப் பார்த்தாள் காயத்ரி. அங்கு அம்மாவும் வந்து சேர்ந்து கொண்டாள். இவனை, இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறும் எனக்கு இவனை பிடிச்சிருக்கு, நான் இவனை காதலிக்கிறேன் என்று சொல்ல எனக்கு என்னப்பா தயக்கம் இருக்கப்போகிறது எனக் கூறி சிரித்தாள் காயத்ரி. அவளது சிரிப்பில் உண்மை கனத்தது. இந்த சிரிப்பின் தரமும் உயிர்ப்பும் குறைந்துவிடக் கூடாது இறைவா என ஜானகி அம்மாள் வேண்டிக்கொண்டாள்.

 

இந்த காலக்கட்டங்களில் காயத்ரி கரணை சந்தித்திருக்கவில்லை.
தனது அன்றாட வேலைகளில் சில தடுமாற்றங்கள் வருவதை சண்முகநாதன் உணரத் தொடங்கினார். சிறுவயது முதலே உழைத்தே உயர்ந்தவர். அநேக தொழில்கள் செய்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக கட்டிட ஒப்பந்ததாரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, தனது வசதி வாய்ப்பை பெருக்கிக் கொண்டார். வெள்ளை வேஷ்டி, முழுக்கை சட்டை, நெற்றியில் சந்தனப்பொட்டு என எந்நேரமும் சிரித்த முகத்துடனும் கண்களை அகல விரித்து சத்தம் குறைவாக பேசும் ஒரு நியாயமான மனிதராக இங்குள்ள ஏரியாவாசிகளால் அறியப்பட்டவர். சேலம் ஆத்தூரில் பிறந்து வளர்ந்து, சிறு வயதில் படிக்க வசதி இல்லாமல், அநேக வேலைகளுக்கு சென்று கடுமையாக உழைத்த மனிதர். திருமணத்திற்கு பிறகு தனது தாய், தந்தை இறந்த பின்பு தன்னுடைய மூத்த சகோதரனுடன் சிறு மனக்கசப்பு ஏற்பட, தனது மனைவி ஊரான திருச்சிக்கு வந்துவிட்டார் சண்முகநாதன்.

 

D2

இங்கு சிறிய அளவில் கட்டிட மேஸ்திரியாக இருந்த ஜானகி அப்பாவுடன் சேர்ந்து தானும் கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து நுட்பங்களையும் தெரிந்து கொண்டு, தனது உழைப்பாலும் நேர்மையாலும் கட்டிட ஒப்பந்ததாரராக தன்னை உயர்த்திக் கொண்டவர். திருமணத்திற்கு பிறகு ஜானகி அம்மாளும் தனக்கென எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சண்முகநாதன் காயத்ரியின் ஒரு பிரதிபலிப்பாக அவர்களுக்காகவே தனது ஒவ்வொரு நாட்களையும் அர்ப்பணித்தாள். அதுவே அவளுக்கு எல்லாவகையிலும் ;போதுமானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர்கள் இருவரது நிழலின் நிஜமானாள் ஜானகி அம்மாள்.

 

இதுபோல் கடந்து கொண்டிருந்த காலங்களில் ஒருநாள் தான் கட்டி முடித்த வீட்டின் சாவியை வீட்டின் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக கிளம்பிக்கொண்டிருந்தார் சண்முகநாதன். காயத்ரியும் தனது தோழி ஒருத்தியை பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தாள். வானம் இடியும் மின்னலுமாய் அந்த மாலை நேரத்தை வரவேற்றுக் கொண்டிருந்தது. இருக்கும் சூழலில் கண்டிப்பாக மழை வரும் என்று தோன்றியது. ஜானகி அம்மாள் அப்போது இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள். காயத்ரிக்கு அந்த நேரம் அம்மா காபி கொடுத்தது சந்தோஷமாகவே இருந்தது. காபியின் சூடு உதட்டில் படுவதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. வீட்டிற்கு வெளியே மழையில் நனையாதபடி வாசலின் ஒரு ஓரமாய் நின்று கொண்டு காயத்ரி காபியை குடித்தாள். மழையினால் வந்த மண் வாசனை காயத்ரியை கிறங்கடித்தது. வீதியில் நடுத்தர வயதான ஒருவர் தனது சிறுவயது மகளை மழையில் நனைந்தபடி கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

 

N2

அந்தக் குழந்தையோ தந்தையின் கைப்பிடியை உதறி மழையில் முன்னும் பின்னுமாய் ஆடியபடியே அவருக்கு சமமாக நடந்து சென்றது. அந்த குழந்தையின் அப்பாவும் ஒரு மழை ரசிகனாக இருக்க வேண்டும். அவளது ஆட்டத்தை ரசித்து சிரித்தபடியே அவளுடன் நடந்து சென்றான். காபி முடிந்து போனது. அப்போது காயத்ரியின் வீட்டின் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. காபி குடிக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில் போன் ஏதோ வர அவரும் அவசர அவசரமாக கிளம்பி ஆட்டோவை வர சொல்லி இருப்பார் போலிருக்கிறது. ஆட்டோ வந்து நின்றவுடன் சண்முகநாதன் அவரது கைப்பையுடன் ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ டிரைவர் ஆட்டோவை கிளப்புவதற்கு முன் ஓடிவந்து காயத்ரியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். சண்முகநாதனும் காயத்ரியிடம் நீ எங்கம்மா போகனும் என்று கேட்டுக்கொண்டே ஆட்டோ டிரைவரின் முதுகில் தட்டி கிளம்ப சொன்னார். நானும் உங்க கூட வர்றேம்பா. மழை விட்டால் எனது தோழி வீட்டுக்கு செல்கிறேன் என்றாள். என்னன்னு தெரியலைப்பா . மனசுக்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்லிவிட்டு காயத்ரி குழந்தையாய் சிரித்தாள். சண்முகநாதனுக்கும் மகளின் மகிழ்ச்சி சந்தோஷத்தை தந்தது.

 

மழை பெய்து கொண்டே இருந்தது. தேங்கி நின்ற மழைநீரில் ஆட்டோவின் பின்பக்க டயர் தண்ணீரை கிழித்துக்கொண்டு சென்றதையும், அந்த தண்ணீர் மேலெழும்பி தெறிப்பதையும் காயத்ரி பக்கவாட்டில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள். எதிரில் வந்த ஒரு கார் ஹாரன் சத்தம் சண்முகநாதனுக்கு எரிச்சலை தந்தது. ஆட்டோ டிரைவரிடம் கொஞ்சம் கவனமா சீக்கிரம் போப்பா. வீட்டு ஓனர் வீட்டுக்கு வெளியே நிற்கப்போறார் என வழக்கத்திற்கு மாறாக அவசரப்படுத்தினார். டிரைவரும் ஆட்டோவை வேகமாக ஓட்டினார். ஆட்டோ செல்லும் வேகத்தில் காயத்ரியின் முகத்தில் வீசி சென்ற குளிர்ந்த காற்றால் உடல் முழுக்க மலர்ந்து போனாள். காயத்ரி அன்று எப்போதையும் விட கூடுதல் அழகாகவே இருந்தாள். அவளது கைகளை மழைநீர் நனைத்திருந்தது. வலது காலில் மழைநீரும் சிறு சகதியும் ஒட்டி இருந்தது. சகதியை தனது கைகளால் துடைத்தவள். வெளியே மழையில் தனது கைகளை கழுவிக்கொண்டாள். பல சமயங்களில் மழைநீர் காலை செருப்புடன் நனைப்பதை ஒரு அசௌகரியத்துடன் உணரும் காயத்ரி இந்த முறை கால்களை வெளியே நீட்டி மழையில் நனைந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாள்.

 

சண்முகநாதன் தான் கான்ட்ராக்ட் எடுத்து கட்டி முடித்து சாவி கொடுக்கப் போகும் வீட்டின் கணக்கு வழக்குகளை அசை போட்டபடி தான் கொண்டு வந்திருக்கும் கைப்பையில் சில அச்சிடப்பட்ட காகிதங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டார். கைப்பையினுள் இன்னும் அதுபோல பல காகிதங்கள் இருந்தன. பையை மூடி பத்திரமாக்கிக்கொண்டார். ஆட்டோ தார் சாலையை விட்டு இறங்கி ஓர் அகலமான மண்சாலையில் சென்றது. மழை பெய்து கொண்டிருப்பதால் பாதை செம்மண் சகதியாக இருந்தது. காயத்ரி சற்று அப்பாவின் பக்கம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். ஆட்டோ மெதுவாக சென்றது. செம்மண் சகதி அங்கும் இங்குமாக சிதறியது. அதே வீதியில் அநேக வீடுகள் பூட்டிக் கிடந்தன. சண்முகநாதன் வலதுபுறம் கைநீட்டி தனது மகளிடம் ஒரு பெரிய வீட்டை காண்பித்து அது தான் கட்டிக் கொடுத்த வீடு என்றும் இந்த வீடு சிறப்பாக கட்டிக் கொடுத்ததால் அதன் மூலம் இப்போது சாவி கொடுக்கப்போகும் வீட்டின் கான்ட்ராக்ட்டும் தனக்கு கிடைத்ததாக சண்முகநாதன் பெருமையாக சொல்ல காயத்ரிக்கும் அதை கேட்க சந்தோஷமாக இருந்தது. அப்பா கட்டியதாக சொல்லிய அந்த வீடு மிக அழகான வெளித்தோற்றத்துடன் காட்சி அளித்தது. அந்த மழை நேரத்தில் அவளுக்கு அது அலாதியாக இருந்தது.

 

ஆட்டோ டிரைவர் சண்முகநாதனுக்கு வழக்கமாக வரும் நபர் என்பதால் விலாசம் ஏதும் கேட்காமல் அவன் சரியான இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். மழை மேலும் மேலும் கனத்து பெய்தது. காயத்ரிக்கு லேசாக குளிர்வது போல் தோன்றியது. கையை இறுக கட்டிக்கொண்டாள்.

இன்னமும் ரசிப்பாள்…

-அஸ்மின்

N3

Leave A Reply

Your email address will not be published.