இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகும் இந்தியா: கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் கொதித்த ஸ்டாலின்…

0

பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி ஒருங்கிணைந்த இந்தியா என்ற பெயரில் கொல்கத்தாவில்  பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.’

தொடர்ந்து அவர் பேசுகையில், “வங்கப் புலிகளே உங்களுக்குத் தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள் பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்துள்ளேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர் கோட்டில்தான் நாம் இருக்கிறோம். கொல்கத்தா – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது. தமிழகத்துக்கு மிக நெருக்கமான மொழி மற்றும் தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு மொழி வங்க மொழி. 

அரசியல், இலக்கியம், ஆன்மிகம் போன்ற அனைத்திலும் தமிழர்களும் வங்கத்தைச் சேர்ந்தவர்களும் சகோதர சகோதரிகள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த மாநிலங்களில் தமிழகமும் வங்கமும் மிக முக்கியமானவை. இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கச் சகோதரி மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான், வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க-விடமிருந்து நாட்டை மீட்பதுதான் சுதந்திரப் போராட்டம் என நான் கூறுகிறேன். 

இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். பல்வேறு மொழி பின்புலம் கொண்டவர்களும், வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும்கூட இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், நம்முடைய சிந்தனை ஒன்றுதான். பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும்; நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாம் வேறாக இருந்தாலும் நமக்குள் இருக்கும் லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் எப்போதும் இருக்குமாயின் நமக்கு வெற்றிதான். தோல்வி நரேந்திர மோடிக்குத்தான்.

சில மாதங்களுக்கு முன்பு வரை தனக்கு எதிரியே இல்லை, எதிர்க்கட்சிகளே இல்லை என மோடி கூறினார். ஆனால், சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்கிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி, அவருக்கு பயமாக உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால், தான் தோற்றுப்போவோம் என்பது மோடிக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. அதனால்தான் தினமும் கோபத்தில் திட்டுகிறார்; நம்மைத் தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்.

மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும், இங்கு வர முடியாத தலைவர்களுக்கும், இந்த கூட்டணிக்குள் வரத் தயங்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான். நம் ஒற்றுமை நரேந்திர மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது.

food

நம் ஒற்றுமையைக் காப்போம். இந்தியாவைக் காப்போம் என்பதுதான். மோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என என்னிடம் சில கேட்கிறார்கள், எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா அல்லது இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல நாட்டு மக்களுக்கு அவர் உதவுகிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம்.

பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. அவர் நூறு கூட்டத்தில் பேசினால் அதில் ஆயிரம் பொய்களை சொல்லியிருப்பார். அவர் சொன்ன பொய்களில் மிகப் பெரிய பொய் ‘ நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்களின் பெயரில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் ’ என்பதுதான். மொத்தத்தில் அவர் நாட்டு மக்களைக் குழியில் தள்ளிவிட்டார்.

பெட்ரோல் விலை உயர்வு, டீசல், சிலிண்டர், காய்கறிகள் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை உயர்ந்தது, பசியால் துன்பப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள்.

இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, பெரு நிறுவனங்களான ஆட்சி. இது கண்டிப்பாக மக்களுக்கான ஆட்சி இல்லை. இன்னும் கூறவேண்டும் என்றால் இந்த அரசை ஒரு பிரைவேட் லிமிட்டெட் ஆக மாற்றி விட்டனர். இதற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

ரஃபேல், ரஃபேல் என நீண்ட காலமாக கூறிவருகிறோமே அது ஊழல் இல்லாமல் வேறு என்ன?. அரசாங்க நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது ஊழல் இல்லாமல் வேறு என்ன?. விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரைத் தப்பவிட்டது விட்டது ஊழல் இல்லையா?. யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதற்குப் பின்னால் யார் உள்ளனர் எனக் கூற வேண்டும். மோடி ஆட்சியில், அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப்போல ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னுக்கு போய்விடும் என்பதை அறிந்துதான், நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். இப்படி ஒரு உணர்ச்சிகரமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மம்தா பானர்ஜிக்கு நன்றி. மோடி ஒரு சிலரைப் பார்த்துப் பயப்படுவார், அப்படி அவர் பார்த்து பயப்படும் ஒருவர்தான் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும், அமித்ஷாவும் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தி வருகிறார்.

இன்னும் 5 மாதத்துக்கு நாம் அனைவரும் இணைந்து மோடிக்கு எதிரான மக்களைப் படை திரட்ட வேண்டும். அனைவரும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும், நமது ஒற்றுமை நம்மை வெற்றிபெறவைக்கும், நமது ஒற்றுமை இந்தியாவைப் பாதுகாக்கும்” எனப் பேசினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.