`ஆம்பளைங்களுக்கு மட்டுமே வாய்ப்புத் தர்றீங்களே’ இளவட்டக் கல்லை அசால்டாகத் தூக்கி அசத்திய குடும்பத் தலைவி

0
Business trichy

போன வருடமும் எங்க தாம்பரம் ஏரியாவில் இளவட்டக்கல் தூக்குகிற போட்டி நடந்துச்சு. அப்ப நானும் அங்கே இருந்தேன். `ஆம்பளைங்களுக்கு மட்டுமே வாய்ப்புத் தர்றீங்களேன்னு கேட்டதுக்கு, `எங்க நீங்களும் தூக்குங்கப் பார்க்கலாம்னு எனக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. அப்ப புடவைதான் கட்டிக்கிட்டு இருந்தேன். இருந்தாலும் மன தைரியத்துல தூக்கிட்டேன்.”

பொங்கல் பண்டிகையையொட்டி கிராமங்களில்  நடைபெறுகிற இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு நம்முடைய பாரம்பர்யத்துக்குப் பழக்கமான ஒன்றுதான். ஆனால், இதுநாள் வரைக்கும் ஆண்களுக்கான விளையாட்டாகவே அறியப்பட்டு வந்த இளவட்டக்கல்லை, தாம்பரத்தைச் சேர்ந்த பிரதீபா தூக்கியதன் மூலம், மன தைரியம் இருந்தால் பெண்களாலும் இளவட்டக்கல்லைத் தூக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“காலையில் இருந்து போனை வைக்க முடியலைங்க. சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ்னு அத்தனை பேரும் வாழ்த்துச் சொல்லிக்கிட்டே இருக்காங்க” என்று சந்தோஷத்தில் திக்கு முக்காடியபடி பேச ஆரம்பித்த பிரதீபா யாரென்றால் பிளஸ் டூ மற்றும் ஆறாம் வகுப்புப் படிக்கிற இரண்டு பெண் குழந்தைகளின் அம்மா, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆசிரியர், மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை, சைக்கிளிஸ்ட் என்று நீள்கிறது லிஸ்ட்.

Kavi furniture

இளவட்டக் கல்லைத் தூக்கியதிலிருந்து பேச்சை ஆரம்பித்தோம். “எல்லாப் பெண்களையும் போலதாங்க. குழந்தைகள் பிறந்ததும் உடம்பு வெயிட் போட்டுடுச்சு. அதைக் குறைச்சாதான் ஆரோக்கியமா இருக்க முடியும்கிற நிலைமை. தவிர, கருப்பையில் ஒரு கட்டி வந்து, அது ஆபரேஷன் அளவுக்குப் போயிடுச்சு. எல்லாமும் சேர்ந்து ஆரோக்கியமா இருக்க வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு. ஒரு நாள் வாக்கிங் போயிட்டே இருக்கிறப்போதான் ஒரு ஃபிட்னஸ் சென்டரைப் பார்த்து ஜாயின் பண்ணினேன்” என்கிற பிரதீபா, அதன்பிறகுதான் சைக்கிளிங் மற்றும் மாரத்தான் போட்டிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

“நான் கடந்த ஒரு வருடமாகத்தான் ஜிம்முக்குப் போயிட்டு இருக்கேன். இது ஏதோ ஆர்ம்ஸ் பில்டப் பண்றதுக்காக இல்லைங்க. ஆரோக்கியமா இருக்கிறதுக்கு அவ்வளவுதான்” என்றவர் இளவட்டக்கல்லைத் தூக்கியதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

MDMK

“போன வருடமும் எங்க தாம்பரம் ஏரியாவில் இளவட்டக்கல் தூக்குகிற போட்டி நடந்துச்சு. அப்ப நானும் அங்கே இருந்தேன். `ஆம்பளைங்களுக்கு மட்டுமே வாய்ப்புத் தர்றீங்களே’ன்னு கேட்டதுக்கு, `எங்க நீங்களும் தூக்குங்கப் பார்க்கலாம்’னு எனக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. அப்ப புடவைதான் கட்டிக்கிட்டு இருந்தேன். இருந்தாலும் மன தைரியத்துல தூக்கிட்டேன். இந்தத் தடவை தயாராகச் சுடிதார் போட்டுக்கிட்டே போனேன். ஆனா, கடந்த 3 மாசமா ஸ்டூடன்ஸோட பேப்பர் கரெக்‌ஷன் வேலை இருந்ததால, எந்த ஃபிட்னஸ் பயிற்சிக்கும் போகவே இல்லை. இந்த நிலையில்தான் எங்க ஏரியாவில் (கிழக்கு தாம்பரம், வால்மீகி தெரு) இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தினாங்க. தி.மு.க.வின் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ். ஆர். ராஜா சார், `பெண்கள் உடல் வலுவிலும் ஆண்களுக்குக் குறைச்சலில்லை’ன்னு சொல்லி பெண்களும் இளவட்டக்கல்லைத் தூக்கலாம்னு அறிவிச்சார். நானும் போனேன். கல்லைத் தூக்கிட்டேன்” என்று தன்னம்பிக்கையாகச் சிரிப்பவர் மறக்காமல் தன்னுடைய ஃபிட்னஸ் குரு பிரேம்ஜிக்கு நன்றி சொல்கிறார்.

  “நேத்து நான் இளவட்டக்கல்லை தூக்கினதைப் பார்த்துட்டு இன்னும் சில பெண்களும் தூக்க முயற்சி செய்தாங்க. ஒரு பொண்ணு எனக்கு போன் செய்து, `அக்கா, கல்லு தூக்க டிப்ஸ் கொடுங்கக்கா’ன்னு கேட்டாங்க. `மனசுல தைரியத்தோட போ பாப்பா. கல்லைத் தூக்கிடலாம்’னு சொன்னேன்” என்றவரிடம், வேலை, குடும்பம்தாண்டி ஃபிட்னஸ் பயிற்சிக்கெல்லாம் நேரம் கிடைக்கிறதா என்றோம்.

“காலையில் எழுந்திரிச்சா சமைக்கிறதுக்கும், பிள்ளைகளை ஸ்கூல் கிளப்பறதுக்கும்தான் நேரம் சரியாக இருக்கு. இதுல வாக்கிங், ஜாகிங் போறதுக்கெல்லாம் எங்கே டைம் இருக்குன்னு லேடீஸ் சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேங்க. ஏன்னா, எவ்வளவோ சாதிச்ச தலைவர்களுக்கும் இதே 24 மணி நேரம்தானே இருந்துச்சு”என்று கேள்வியெழுப்புகிற பிரதீபா, குடும்பத் தலைவிகள் வாக்கிங் போவதற்கு சில வழிகாட்டுதல் டிப்ஸையும் தருகிறார்.

“வாரத்துக்கு 3 நாள் வாக்கிங் போனால்கூட போதும். அந்த 3 நாள்களும் லைட்டா சமைக்கலாம். அல்லது முந்தின நாள் இரவே புளிக்காய்ச்சல் மாதிரி ஏதாவது ரெடி பண்ணி வைச்சிக்கலாம். 10 நாள் காலையில் வாக்கிங் போக ஆரம்பிச்சிட்டீங்கன்னா அப்புறம் அதுவே பழகிடும். ஆரோக்கியமா இருக்கிறதோட அருமையை அனுபவிச்சிட்டீங்கன்னா, அப்புறம் அதைவிடவே மாட்டீங்க” என்கிற பிரதீபாவின் கணவர் ஶ்ரீதர் எக்ஸ் ஏர் மேன்.

தற்போது பாதுகாப்புத் துறையில் வேலை பார்க்கிறார். அதனால் அவரும்கூட ஃபிட்னஸ் மாதிரியான விஷயங்களில் ஆர்வமானவர். தன்னுடைய ஃபிட்னஸ் ஈடுபாட்டுக்கு அவரும் ஒரு முக்கியமான காரணம் என்கிறார் ஆசிரியர் பிரதீபா.

 

-விகடன்

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.