மக்கள் கூட்டத்தை இழந்த முக்கொம்பு !

0
Business trichy

பொங்கலை கொண்டாட முக்கொம்புக்கு  கூட்டம் குறைவு ஏன் ?

 

திருச்சி முக்கொம்பில்  காணும் பொங்கலையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பொங்கல் கொண்டாடப்பட்டது. முக்கொம்பில் குறைந்தளவே மக்கள் வருகை தந்தனர்.தமிழகத்தில் தைத்திங்கள் முதல்நாள்  பொங்கல் பண்டிகையும், மறுநாள் உழவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும்

loan point

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுபொங்கலும் கொண்டாடப்பட்டது. தைமாதம் 3ம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். அன்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  ஏதாவது சுற்றுலா தலங்களுக்கு சென்று குடும்பத்துடன் காணும் பொங்கலை  கொண்டாடுவது வழக்கம். நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் விழா முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நடந்தது.

nammalvar

web designer

டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாட்டில் கோயில்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புனித தலங்கள், கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், நினைவுச்சின்னங்கள், தொல்லியல் இடங்கள், கலை, கட்டிடக்கலை, இசை, நாட்டியம், கைவினைப் பொருட்கள் போன்ற பல பிரபலமான சுற்றுலா சிறப்புகள் உள்ளன.திருச்சிக்கு வருகைதரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில கிராமிய தப்பாட்டம் நிகழ்ச்சி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’ என்றார். முன்னதாக காணும் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பாட்ட கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.விழாவில் சுற்றுலா அலுவலர் (பொ) சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் புகழேந்தி, ராஜரத்தினம், உதவி சுற்றுலா அலுவலர் ஷகிலா நசூருதீன், ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வழக்கமாக மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் சுற்றுலாப் பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் அலங்கரிக்கப்பட்டு மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டு சிறப்பிக்கப்படுவர்.

 

இதன் மூலம் வெளிநாட்டவர்கள் நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், பரப்பும் வகையிலும் விழா இருக்கும். கடந்த ஆண்டும் சுற்றுலாப்பொங்கல் விழாவுக்கு வெளிநாட்டவர் அழைத்துவரப்படவில்லை. இந்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சென்னை சென்றதாலும், கலெக்டர் ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதாலும், மிகவும் எளிதாகவே சுற்றுலா பொங்கல் விழா நடந்தது.

 

முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் பஸ்களிலும், வேன்களிலும் வந்தனர். ஒரே பள்ளியில் படித்து முடித்து தற்போது வேறு வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று காணும்பொங்கலை யொட்டி முக்கொம்பில் அனைவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

சுற்றுலா பயணிகள் முக்கொம்பில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு, சீசாவில் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர்களைப்போல் முதியவர்களும் ஊஞ்சல் ஆடினர். சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஆற்றில் உற்சாக குளியல் போட்டனர். குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். ஆனாலும் குறைந்தளவே மக்கள் வருகை தந்ததால் விவசாயிகள், சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.