திருச்சி ஆற்றில் மீண்டும் முதலை.. அலறி ஓடிய மக்கள்

திருச்சி ஆற்றில் மீண்டும் முதலை..
அலறி ஓடிய மக்கள்
திருச்சி மாவட்டம் இனியானுர் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் 2 முதலைகளை பார்த்ததாக சமீபத்தில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த முதலைகள் கரையோரம் உள்ள வயல் பகுதிகளில் வலம் வருவதாகவும் கூறி வந்தனர். இதனால் ஆற்றை சுற்றியுள்ள வயல் பகுதிக்கு மக்கள் செல்லவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போன்று முதலைகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யகொண்டான் ஆற்றில் 2 முதலை வலம் வந்தன. ஆற்றில் குளிக்க சென்ற பொதுமக்கள் முதலைகளை கண்டு அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் ஏற்கனவே முதலைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிய புகாரை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் முதலைகள் படையெடுத்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது அப்பகுதி கரையோரத்தில் வசிக்கும் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் முதலைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
