உயிர் வளர்ப்போம்!-கதை வழி மருத்துவம்-11

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0
1

யோகியார் தன் கரங்களை பற்றியது கண்டு மன்னன் காரணம் புரியாது திகைத்தான். மன்னனின் திகைப்பை புரிந்து கொண்ட யோகியார் மன்னனின் கரங்களை பற்றியதான் காரணத்தை கூறலானார். “மன்னா, நாம் எப்பொழுது நீரினை பருகினாலும் இரண்டு உதடுகளையும் நீரில் பதித்து உறிஞ்சி பருகிட வேண்டும்.

அப்பொழுது தான் தாகத்தின் தேவைக்கு ஏற்ற சரியான அளவு நீரினை நாம் பருக இயலும். அவ்வாறு இன்றி உதடுகளை நீரில் பதிக்காமல் அன்னர்ந்து பருகும் பொழுது தேவைக்கு அதிகமான நீரினை நாம் பருகி வயிற்றையும் உள்ளுறுப்புகளை பழுவுக்கு உள்ளாக்கி விடுகின்றோம். நமக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை அளவிடும் அளவு கோள் நம் உதடுகளே ஆகும்.

உதட்டில் படாமல் நாம் பருகும் நீர் நம் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்து விடும். தண்ணீரை நன்கு இரசித்து உற்சாகத்துடன் உறிஞ்சி பருக்கிடுங்கள்.” இதனை கேட்ட மன்னன் உட்பட அனைவரும் யோகியாரின் சொற்படி உற்சாகத்துடன் பருகினர். அப்போது அங்கு ஒரு கூக்குரல் கேட்டது. குரல் வந்த திசையில் தளபதி தன் பாதங்களை பற்றியபடி தரையில் அமர்ந்து அரற்றியபடி இருந்தார். இது அவருக்கு வழக்கமாக ஏற்படும் பாத எரிச்சல் மற்றும் குதி கால் வலி தான் என விளக்கினார் உப தளபதி உக்கிரபுத்திரன். இதனை கேட்ட யோகியார் தன் சீடர் ஒருவரை அழைத்து அவரது கைப்பையில் வைத்திருந்த ஒரு பொடியை எடுத்து ஒரு வெள்ளை துணியில் கொட்டி பரப்பினார்.

2

பின்னர் அந்த வெள்ளை துணியை தளபதியாரின் இரு பாதங்களில் வைத்து கட்டினார். அவ்வாறு கட்டிய பின்னர் தளபதியாரின் வலி சற்று குறைந்து அமைதி அடைந்தார். அப்போது யோகியார் தளபதியை பார்த்து “தளபதியாரே, நீர் மறைந்திருந்த கள்வர்களை தம் திறமையால் அடையாளம் கண்டு பிடித்தீர்கள். ஆனால் உம்முள் மறைந்துள்ள கள்வர்களை அடையாளம் காண தவறி விட்டீர்கள். இதன் விளைவாகவே தாம் இந்த வலியால் அவதியுற்று வருகிறீர்கள்.” என கூறினார்.
தளபதியார் உடனே யோகியாரை பார்த்து பணிவுடன் “அய்யா, எம்முள் கள்வர்களா? தாம் கூறும் ஞான மொழி இந்த எளியவனுக்கு விளங்கவில்லை. எமக்கு புரியும்படி விளக்கி அருளுங்கள். மேலும் இந்த வலி இனிமேல் எமக்கு தோன்றாமல் இருக்க ஒரு நல் உபாயம் ஒன்றினையும் கூறி அருளுங்கள்.” என வேண்டினார்.

யோகியாரும் அன்போடு தளபதியை நோக்கி “மாவீரரே, நமது உடலில் அன்றாடம் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றின் வாயிலாக சில கழிவுகள் நம் உடலில் தோன்றுகின்றன. இந்த கழிவுகள் தான் நம் உடலில் மறைந்திருக்கும் கள்வர்கள். இவர்களை இனம் கண்டு வெளியேற்றிட உடலில் நீர் மண்டலம் நல்ல முறையில் இயங்கிட வேண்டும். உடலில் நீர் மண்டலத்தின் ஆற்றல் குன்றும் பொழுது இயல்பாகவே நம் உடலில் வெப்பம் அதிகரித்து கழிவுகள் உடலில் தேக்கம் அடைகின்றன.

இந்நிலையில் வெப்பம் சார்ந்த பாதிப்புகளாகிய கண் எரிச்சல், உடல் எரிச்சல், நீர் குத்தல், வேனல் கட்டிகள், எரிச்சலுடன் கூடிய சரும பாதிப்புகள், பாத வலி மற்றும் எரிச்சல், முட்டி மற்றும் இடுப்பி வலி, முடி உதிர்தல் போன்றவை உடலில் தோன்ற ஆரம்பிக்கின்றன. தமக்கு ஏற்பட்டுள்ள பாத எரிச்சல் மற்றும் குதி கால் வலி ஆகியவையும் நீர் மண்டல பாதிப்பின் விளைவுகளே ஆகும். இது முற்றிலும் குணமடைய தமக்கு இரண்டு உபாயங்கள் கூறுகிறேன்.

4

முதலாவதாக, வாரம் ஒரு முறை இரவு வேளையில் ஒரு இளநீரினை சீவி திறந்து அதனுள் 1 கைப்பிடி பனங்கற்கண்டு மற்றும் 3 சிட்டிகை சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். இதன் பின்னர் ஒரு வெள்ளை துணியால் இளநீரினை திறக்கப்பட்ட பகுதியை மூடி இரவு முழுவதும் வானம் பார்த்தபடி வெளியே வைத்து விட வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது இரவு முழுவதும் பனி அந்த இளநீருக்குள் இறங்கும். காலையில் எழுந்த உடன் அந்த இளநீரை பருகிட வேண்டும். இது இயற்கையாகவே உடலினை குளிர்ச்சி படுத்தும் சிறந்த பானமாகும்.

இரண்டாவதாக, வாரம் இருமுறை எண்ணெய் குளியலின் பொழுது பாதங்களை நன்கு தம் கைகளால் எண்ணெய் தேய்த்து தூண்டி விடுதல் வேண்டும்.

நம் இரு பாதங்களிலும் உடல் முழுவது உள்ள உறுப்புகள் யாவற்றுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள் அடங்கியுள்ளன. அந்த உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை எண்ணெய் தேய்த்து துண்டுவதான் மூலம் அந்த உறுப்புகள் யாவும் நன்கு தூண்டப்பட்டு சீரான ஆற்றல் மற்றும் இயக்கத்தை பெறுகின்றன. இவ்வாறாக பிரதிபலிப்பு புள்ளிகளை தூண்டிடும் மருத்துவ முறை பாத நரம்பியல் சிகிச்சை (reflexology) என்று அழைக்கப்படும். இது எகிப்து நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பழம்பெரும் மருத்துவம் ஆகும்.

பொதுவாக நமது உடலானது தன்னில் செலுத்தப்படும் விசை எதுவாயினும் அதற்கு ஏற்றார் போல் ஒரு எதிர்விசையை தோற்றுவிக்கின்றது. காலில் முள் குத்தினாலோ அல்லது நெருப்பு சுட்டாலோ தானாக கால்களை நாம் பின் எடுத்து கொள்கின்றோம். முள் அல்லது நெருப்பின் விசைக்கு எதிர் விசையாக நாம் காலை பின் எடுப்பது நிகழ்கின்றது. இதனால் மேலும் பாதிப்பு இன்றி உடல் தன்னை பாதுகாத்து கொள்கின்றது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பாதத்தில் உள்ள ஒரு உறுப்பின் பிரதிபலிப்பு புள்ளியை ஒரு விசையால் தூண்டும் பொழுது அதற்கு ஏற்ற எதிர்விசை சம்பந்தப்பட்ட அந்த உறுப்பில் தோன்றி கழிவுகளை அங்கிருந்து வெளியேற்றுகிறது.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் பாதங்களில் உள்ள அனைத்து உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை எண்ணெய் தேய்த்து கைகளால் அழுத்தம் கொடுத்து நன்கு தூண்டி விடுதல் வேண்டும். விரல்கள் உட்பட பாதத்தின் எல்லா இடங்களையும் கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்து நீவுதல் வேண்டும். இவ்வாறு செய்த பின் வெதுவெதுப்பான நீரினை கொண்டு பாதங்களை கழுவ வேண்டும். இவ்விரண்டு உபாயங்கள் உம்மை இவ்வலியில் இருந்து பாதுகாத்து சுகம் அளித்திடும்” எனக்கூறி முடித்தார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த தளபதி “அய்யா, நம் பாதங்களில் உள்ள உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை நாம் எவ்வாறு இனம் கண்டு கொள்வது?” என வினவினார். அதற்கு யோகியார் “அன்பரே, பாத நரம்பியல் சிகிச்சை முறையில் நம் வலது பாதத்தினை உடலின் வலப்புறமாகவும் இடது பாதத்தை உடலின் இடப்புறமாகவும் கொள்ள வேண்டும். இவ்வாறு பார்க்கும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் பிரதிபலிப்பு புள்ளிக்களையும் நம் பாதங்களில் இனம் காணலாம்.” என விளக்கினார்.

மேலும், அனைவருக்கும் புரியும் படியாக பிரதிபலிப்பு புள்ளிகள் பாதங்களில் இடம் பெற்றுள்ள பாங்கினை விளக்கும் சித்திரம் ஒன்றையும் தமது பையில் இருந்து எடுத்து காட்டினார். அந்த சித்திரத்தை கண்ட அனைவரும் இந்த சீரிய மருத்துவ முறையை விளங்கிக்கொண்டனர். இந்த அற்புத மருத்துவ முறையினை வழங்கிய யோகியாருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். ஆனால் மன்னன் மனதில் மட்டும் ஒரு சந்தேகம் தோன்றியது.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.