தெருக்கூத்தில் திருவள்ளுவர்

0
full

தெருக்கூத்து நாட்டுப்புற மக்களால் நடத்தப்படும் நாட்டுப்புறக் கலையாகும். தெருக்கூத்து என்ற பெயர் நிகழ்த்தப்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றது.

தென்னிந்தி யாவில் ஆந்திர மாநிலத்தின் வீதி நாடகம், கேரள மாநிலத்தின் கதகளி, கர்நாடக மாநிலத்தின் யக்ஷகானம் போன்ற நிகழ்கலை வடிவங்களைப் போன்று தெருக்கூத்தானது தமிழகத்தின் கிராமப் புற மக்களின் பொழுது போக்காகவும், அறிவு கருவூலமாக விளங்குகிறது. இசை மற்றும் அசைவியக்க தாளக்கட்டுடன் நிகழ்த்தப்பட்டு வரும் இக்கலை இன்று வரை நிலைத்து தனித்தன்மையுடன் விளங்குகிறது.

தெருக்கூத்தானது மக்களின் வாழ்க்கை முறையோடு பிணைந்துள்ள பழக்க வழக்கம், நம்பிக்கைகள், விழாக்கள், நாட்டு நடப்பு, வரலாற்றுச் செய்திகளை பண்பாட்டு தன்மைகளை எடுத்து கூறும் விதமாக மக்களோடு துணை நிற்கின்றது. மேலும் சமூகவியல், வரலாற்றியல், மானுடவியல், மொழியியல் போன்றவற்றைச் சிந்திப்போருக்கு ஆய்வுக் களமாக அமைகிறது.

poster

தெருக்கூத்திற்கான கதை அமைப்பானது மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கம்பராமாயணம், மகாபாரதம், சிவபு ராணம், கந்தபுராணம், முதலிய இலக்கியங்களைத் பெரும்பாலும் தழுவி காலச்சூழலுக்கு ஏற்ப மனிதர் களின் வாழ்வியலை மையமிட்டு நடைபெறும். அதுமட்டுமின்றி, மாற்றாந்தாய்க் கொடுமை போன்ற வாழ்வியல் நாடகங்களும் மதுரை வீரன், பவளக்கொடி, நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, காத்தவராயன் போன்ற தெருக்கூத்துகளும் நிகழ்த்தப் படுகின்றன.

இந்நிலையில், தமிழர்களின் தனிப்பெரும் சொத்தாகவும், உலகப் பொதுமறையாக எந்நாட்டவர்க்கும், எக்காலத்திற்கும் ஏற்புடைய கருத்து களோடு விளங்கக் கூடிய திருக்குறளை மைய ப்பொருளாகக் கொண்டு தெருக்கூத்து வரலாற்றில் முதல் முறையாக ‘வள்ளுவமே வாழ்க்கை என்கின்ற ஏலேல சிங்கன்’ தெருக்கூத்தினை புதிய பரிணாமத்தில் எழுதி இயக்கியுள்ளார், பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பெ.வெங்கடேஷ்.
இந்த புதிய முயற்சி குறித்து அவரிடம் பேசுகையில், புராணக் கதைகள் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் தெருக் கூத்துகளில் உலகப்பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறளை புகுத்தி மக்களுக்கு கொண்டுசெல்லவேண்டும் என நினைத்தேன். என்னுடைய ஆய்வு தெருக்கூத்து சார்ந்தே இருப்பதால் எனக்கு அது இன்னும் எளிமையாக போனது.

half 2

கலை என்பது கண்டு களித்து துண்டு விரித்து தூங்குவதல்ல கண்டு விழிப்படைந்து விடுதலையை நோக்கி பயணிக்க செய்வது. அதனை அடிப்படையாக கொண்டு திருக்குறளில் உள்ள அதிகாரங்களான இறை வணக்கம், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, அழுக்காறாமை, புறங்கூறாமை, ஒப்புரவறிதல், ஈகை, புகழ், தவம், கூடா ஒழுக்கம், மெய்யுணர்தல், இறைமாட்சி செங்கோன்மை, கொடுங்கோன்மை, அமைச்சு, தூது, மன்னரை சேர்தொழுதல், நாட்டின் சிறப்பியல்பு, கூடா நட்பு, பகை மாட்சி, பெரியரைப் பிழையாமை, பண்புடைமை, குடிசெயல்வகை, நலம் புனைந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல், அறன் வலியுறுத்தல், இல்வாழ்க்கை, மக்கட்பேறு, ஒப்பற்ற நல்லியியல்புகளைக் கொண்டு வழி நடத்தல் போன்ற அதிகராங்களின் வழி கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளை பார்வையாளர்களுக்கு வலியுறுத்தும் வகையில் சமூக வாழ்வியல் விழிப்புணர்வாக கூத்தின் கதை வடிவமைத்திருந்தேன்.

இந்நிலையில் தான், கோயம்புத்தூர் கணபதி தமிழ்ச் சங்கம் மற்றும் பசுமை காப்பகத்தின் திருக்குறள் பயிற்சி வகுப்பின் 800வது வார நிறைவு விழா மற்றும் 16 ஆம் ஆண்டு திருக்குறள் பன்முகப் போட்டி விழா வந்தது. இந்த விழாக்களில் வள்ளுவமே வாழ்க்கை என்கின்ற ஏலேல சிங்கன் தெருக்கூத்துக் கதையினை நிகழ்த்தி தெருக்கூத்து வரலாற்றில் முதல் முறையாக திருக்குறளை மையப் பொருளாகக் கொண்டு தெருக்கூத்தை நிகழ்த்தினேன்.

இதில், வள்ளுவமே வாழ்க்கை என்னும் ஏலேல சிங்கன் தெருக்கூத்துக் கதையமைப்பானது இன்றைய ஒரிசாவாக இருக்கக்கூடிய அன்றைய மகத நாட்டின் வளம், மகத நாட்டு மன்னனான சிங்கபாகு – சிங்கசீவிலியின் ஆட்சி முறை, சிங்கபாகுவின் மகனான விஜயனின் கொடுங்கோள் தன்மை, விஜயன் இலங்கைக்கு வருகை, நாகார் இன இளவரசியை மணம் புரிதல், கடல் வாணிகனான ஏலேல சிங்கனின் நீதி பிறழாத வாழ்க்கை, வள்ளுவமே வாழ்க்கை எனும் கொள்கையை மக்களிடம் பரப்புதல், மக்கள் அக்கொள்கையை பின்பற்றுதல் போன்ற அம்சங்களை கொண்டு நடத்தப்பட்டது. இக்கூத்தினை நாமக்கல்,சேலம்,ஈரோடு மாவட்டங்களை சார்ந்த அ.காளிதாஸ், ரா.செந்தாமரை, ப.கோபி, ர.பொன்னுசாமி, செ.அஸ்வின்ராஜா, செ.அரவிந்தராஜா, செ.ஆகாஸ், கோ.அப்பு (எ) பாலகிருஷ்ணன், கு.ராம்குமார், கோ.சக்திபிரபு, ஆ.சின்னதுரை ஆகிய தெருக்கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்தினார்கள்.

தெருக்கூத்தினை சிரவையாதீனம் முனைவர் குமரகுருபர சுவாமிகள், கணபதி தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவார் ந.நித்தியானந்த பாரதி, ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். கூத்தின் முடிவில் நல்ல முயற்சி என அனைவரும் பாராட்டினார்கள். ஆனால், இவையனைத்தையும் தாண்டி பள்ளி மாணவர்களின் மனத்தில் நல்ல கருத்தினை விதைத்து விட்டோம் என்ற எண்ணம் என்னை பெருமையடைச்செய்தது என்றார்.

இந்த தெருக்கூத்தினை பல தளங்களுக்கு எடுத்து செல்ல நினைக்கும் வெங்கடேஷ் அவர்களுக்கு துணையாக நின்று வள்ளுவத்தை பரப்புவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.