திருச்சியில் தள்ளாத வயதிலும் தளிர்விடும் பசுமை

0
1 full

“செடியிலேந்து மொதல்லப் பூக்குறது வெத்துப்பூவாப் போவும். ஏன்னா நாம தொட்டியிலத்தானே செடிகளை வெச்சு வளக்கிறோம். ரெண்டாவது தடவைப் பூக்க ஆரம்பிச்சதுலேந்து காய்ங்க காய்க்க ஆரம்பிச்சுடும். எங்களோட மாடித் தோட்டத்துல செடிகள்ல விளையிற காய்கள் மட்டுமல்ல, பந்தல் அமைச்சு கொடிகள்ல விளையிற காய்களும் போட்டிருக்கோம். இதுக மட்டுமில்லாம பூச்செடிகள், மூலிகைச் செடிகள் எல்லாம் வெச்சு வளத்து வர்றோம்.” எனச் சொல்கிறார் ஜெயலெட்சுமி. அவருக்கு வயது தொண்ணூற்றி ஒன்று. “நான் பொறந்தது 1926ல தை மாசம் நாலாம் தேதி. சென்னை, மைலாப்பூர்ல நேசனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சி பாஸ் பண்ணினேன்.” என்கிறார் அவர். திருச்சி. எடமலைப்பட்டி புதூர், சர்மா காலனியில் தனது ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

“என் கணவர் நடராஜ சர்மா அவரோட எழுபத்தைஞ்சாவது வயசுலக் காலமாய்ட்டார். எங்களுக்கு அஞ்சு பெண் பிள்ளைங்க, ரெண்டு ஆண் பிள்ளைங்க. நாலாவது தலைமுறைய நான் பார்த்துட்டேன். பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தினு பெரியக் குடும்பம். ஆளாளுக்கு வெவ்வேற ஊர்ல இருக்காங்க. எந்த ஊர்ல இருந்தாலும் அப்பப்ப என்னைய வந்து பார்த்துட்டுப் போய்டுவாங்க. இந்த மாடித்தோட்டம் போட்டு நாலைஞ்சு வருஷம் ஆச்சு. இதுக்கு எந்த விதைங்க நான் கேட்டாலும் என்னையப் பார்க்க வர்றப்ப மறக்காம வாங்கிட்டு வந்து தந்துடுவாங்க.” என்கிறார்.

அந்த வீட்டின் கீழ் தளத்துக்கு மேலே முதல் மாடியே மொட்டை மாடி தான். அதில் நாநூறு சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது, ஜெயலெட்சுமி பாட்டியின் மொட்டை மாடித் தோட்டம். ஒருபுறம் தொட்டிகளில் வரிசைகட்டி நிற்கின்றன காய்கறிச்செடிகள். இன்னொருபுறம் மூலிகைச்செடிகள் பசுமையுடன் நம்மை வரவேற்கின்றன. மற்றொருபுறமோ ஆறடி உயரப் பந்தலிட்டு பந்தல் கொடி வகைக் காய்கறிச் செடிகளில் இருந்து காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இன்னொருபுறம் கீரை வகைகள்.

 

2 full

இவைகளுக்கு இடையே டேபிள் ரோசிலிருந்து நந்தியாவட்டை பூ வரைக்குமாக பூச்செடிகளிலிருந்து பூக்கள் பூத்து மணம் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. இத்தனை வகை வகையானப் பசுமை அடுக்குகளை இந்த ஜெயலெட்சுமி பாட்டியால் எவ்வாறு உருவாக்க முடிந்தது?
“சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்குக் கண்ணாலம் ஆகி வந்த புதுசுல எங்க வீட்டுல பசு மாடுங்க வாங்கி வளக்க ஆரம்பிச்சோம். ஒரு கட்டத்துல அஞ்சாறு கறவைப் பசு மாடுங்க. காலையிலயும் சாயந்திரத்துலயும் அந்தப் பசுக்கள்ட்டே இருந்து நான் ஒரு ஆளா பால் கறந்து சொசைட்டிக்கு தருவேன். வேற யார் போனாலும் அந்தப் பசுக்கள்ட்ட பால் கறக்க முடியாது. புள்ளைங்க எல்லாம் வளைந்து பெருசா ஆவும்போது அதுகளைப் பராமரிக்க முடியலை. அப்பயிலேந்து எனக்கு ஒரு நிமிஷம் கூட சும்மா உக்கந்திருக்கப் பிடிக்காது. அந்த உழைப்பு தான் இந்த வயசுலயும் என்னைய இந்த மாடித்தோட்டம் போட வெச்சிருக்கு.

 

ஜெயலட்சுமி பாட்டியின் நான்கு தலைமுறை

பெயின்ட் வாளிகள், பழைய பிளாஸ்டிக் வாளிகள் தான் எனக்கு காய்கறித் தொட்டி. அதனுள்ளே செம்மண்ணு, மணல், கோகோபிட் எனப்படும் தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போன்றவைகளைப் போட்டு இயற்கை உரக் காய்கறித் தொட்டிகளை ரெடி பண்ணிக்குவேன். அதுகள்ல காய்கறி விதைகள், பூச்செடி விதைகளைப் போட்டு நாத்து உருவாக்கிடுவேன். அப்புறமா அதுகளைப் பறிச்சு இயற்கை உரக் காய்கறித் தொட்டிகள்ல நட்டு வெச்சிடுவேன். காலம்பறவும் சாயந்திரமும் ரெண்டு வேளையும் மாடி ஏறி வந்து அதுகளுக்குத் தண்ணி ஊத்திட்டுப் போய்டுவேன். அப்பிடி வளந்து வரும் போது செடி ஏதும் பட்டுப் போச்சுன்னா, அதுகளப் பிடிங்கிட்டு வேற நல்ல செடிய நட்டுடுவேன். பெத்தப் புள்ளைங்களைப் போல அந்த செடிகளைப் பராமரிப்பேன்.

பந்தல்ல பாகற்காய், பீக்கங்காய், புடலங்காய், அவரைக்காய் போட்டிருக்கேன். தொட்டிகள்ல வெண்டை, தக்காளி, கத்தரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய் போன்றவைகளைப் போட்டிருக்கேன். எல்லாமே முப்பது – நாப்பது நாள்லேந்து காய்க்க ஆரம்பிச்சுடும். வெள்ளை முள்ளங்கி தொட்டி ஆழத்துக்குள்ளே முப்பது – நாப்பது நாளுக்குள்ளேயே முட்டிகிட்டு வந்துடும். அதை உடனே பறிச்சுடுவோம். முளைக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, கொடிப்பசலி, செடிப்பசலி போன்ற கீரைகளையும் போட்டு இருக்கேன். எங்க (நானும் என் மகளும்) ரெண்டு பேருக்குத் தேவை போக மீதி காய்கறி மற்றும் கீரைகளை அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்குத் தந்திடுவேன். சோற்றுக் கற்றாழையும் வெச்சு வளர்த்து வர்றேன். ரொம்ப பேரு மருத்துவத்துக்காக என்ட்ட வந்து அந்தக் கற்றாழையைப் பறிச்சு ஒடிச்சிட்டுப் போவாங்க.

 

மூலிகைகள்ல துளசி, தூதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீர்ற்றுப்பச்சிலை, ஓமவல்லி போன்றவைகளை வெச்சு வளர்த்து வர்றேன். துளசி, தூதுவளை இதெல்லாம் சளி பிடிச்சா அதுகளை விரட்டி விட்டும். சிறியாநங்கை இலைய தினசரி மென்று திண்ணு வந்தா சர்க்கரை நோய் வராது. சுகர் கட்டுக்குள்ளே இருக்கும். கீழாநெல்லி மஞ்சள்காமாலை நோய்க்கு கைகண்ட மருந்து. அது போல திருநீற்றுப்பச்சிலை, கொய்யா இல்லை, குப்பைமேனி இந்த மூன்றையும் அரைச்சு தோல் பிரச்னை சம்பந்தப்பட்ட இடங்கள்லத் தேச்சு விட்டா தோல் பிரச்னைகள் தீரும்.

பூக்கள்ல டேபிள் ரோஸ், சிவப்பு ரோஸ், வெள்ளை ரோஸ், மல்லிகை, முல்லை, செம்பருத்தி, அடுக்கு நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வெச்சு வளக்கிறேன். அடுக்கு நந்தியாவட்டைப் பூவை வெளக்கெண்ணெய்ல விட்டு வதக்கி வெள்ளைத் துணியிலக் கட்டிக்கிட்டு கண்ணுல ஒத்தி ஒத்தி வெச்சு எடுத்தோம்னா கண்களுக்கு அம்புட்டும் குளிர்ச்சி. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. வெத்தலையும் ஒரு கொடி வெச்சு வளக்கிறேன். வீட்டுக்கு யாராச்சும் சுமங்கலிகள் வந்துட்டா அதுல ரெண்டு வெத்தலைய பறிச்சு வெச்சு தாம்பூலம் தந்து அனுப்புவோம்.

ஓமவல்லி பஜ்ஜி, வெத்தலை பஜ்ஜி, கொடிப்பசலை பஜ்ஜி கேள்விப்பட்டு இருக்கீங்களா? விருந்தாளிங்க வந்துட்டா வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜினு இதுல ஏதாவது ஒண்ணு போடுவோம். அப்ப ஓமவல்லி, வெத்தலை, கொடிப்பசலை இதுல ஏதாவது ஒண்ணுல கொஞ்சம் பஜ்ஜி போட்டு வெச்சுக்குவோம். ஒவ்வொருத்தருக்கும் மத்ததுல நாலைஞ்சு பஜ்ஜி தர்றப்ப இந்த மூலிகை பஜ்ஜியில ஆளுக்கு ஒண்ணு கொடுத்துடுவோம். உடம்புக்கு அவ்வளவு நல்லது.” என்று நீண்ட விளக்கம் தந்து தொடர்ச்சியாகப் பேசுகிறார் ஜெயலெட்சுமி பாட்டி.

“இந்த வயதிலும் நீங்க ஆக்டிவா இருக்க என்ன காரணம்?” எனக் கேட்டோம். “தன்னம்பிக்கை, துணிச்சல், விடாமுயற்சி, உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு போன்றவைகள் தான் என்னை இன்னைய வரைக்கும் தொடர்ந்து செயல்பட வெச்சிட்டு இருக்கு. காலையில ஆறு மணிக்கு ஒரு காபி, காலை எட்டு மணிக்கு வாரத்துல ரெண்டு நாளைக்கு பழச்சாறு, ஒரு நாள் பயத்தம்பயறு கஞ்சி, ஒரு நாள் வெந்தயக் கஞ்சி, ரெண்டு நாள் ஏதேனும் மூலிகை சூப், ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கி நிலவேம்புக் கசாயம் இல்லாட்டி மிளகுக் கசாயம்.

 

காலையில பத்தரை மணிக்கு சாப்பாடு. மதியம் ரெண்டு மணிக்கு இரண்டு இட்லி அல்லது பழம், சாயந்திரம் அஞ்சரை மணிக்கு ஒரு தம்ளர் ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட். நைட்டு ஏழரை மணிக்கு மழை மற்றும் பனிக் காலங்கள்ல சூடான பால்சாதம். வெயில் காலங்கள்ல மோர் சாதம். இதான் என்னோட உணவுக் கட்டுப்பாடு.” எனக் கூறுகிறார் தொன்னூற்றி ஒரு வயது நிறைவு பெற இருக்கும் “ஓல்ட் யங் லேடி” ஜெயலெட்சுமி.

 

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

3 half

Leave A Reply

Your email address will not be published.