மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் விஞ்ஞான பூர்வ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.

0
full

மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் விஞ்ஞான பூர்வ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.

புதுக்கோட்டை,ஜன.8: மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் விஞ்ஞானபூர்வ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் கண்காட்சியினை தொடங்கி வைத்துப் பேசினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..

poster

கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு வரவேற்றுப் பேசினார்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்துப் பேசினார்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி,குத்துவிளக்கேற்றி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களிடம் படைப்புகள் குறித்து கேட்டறிந்து அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் அந்நாடு அறிவியல் துறையில் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குறிப்பாக நமது நாடு விவசாய நாடு பல்வேறு மன்னர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள்.வியாபாரம் செய்ய தான் நம்நாட்டிற்கு ஐரோப்பியர்கள் வந்தார்கள்.அவர்கள் குறைந்த அளவில் தான் நம்நாட்டிற்கு வந்தார்கள்.இவர்கள் வந்து நம் நாட்டையே அவர்களின் கீழ் கொண்டுவந்தனர் என்றால் அவர்களது நாட்டின் அறிவியல் வளர்ச்சியே தான் காரணம்.மேலும் அவர்கள் கப்பல்,ஆயுதங்கள் பீரங்கி,துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அன்றைய தினம் நம் நாட்டில் அப்பொழுது அறிவியல் வளர்ச்சி பெறவில்லை.அதனால் தான் அவர்கள் நம் மேல் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

 

ரபேல் விமானத்தினை நாம் பிரான்ஸ் நாட்டில் வாங்குகிறோம்..நாம் ஏன் அது போல ஒரு விமானத்தை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.உலகத்திற்கே நாகரித்தை கற்றுக் கொடுத்தவர்கள் நம் நாட்டு மக்கள் தான்.ஆனால் நாம் மூடநம்பிக்கையின்பால் இருப்பதால் தான் மேலைநாட்டினர் உயர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்கள்..எனவே விஞ்ஞான அடிப்படையிலான அடிப்படை அறிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் விஞ்ஞான பூர்வமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் புத்தகம்,இண்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு அறிவியல் சார்ந்த அறிவு வளரும்.நாம் இன்று மருத்துவத்துறையில் உலகத்திலேயே முதல் இடத்தில் இருக்கிறோம்,அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் வாழும் மக்கள் இன்று சென்னை வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.அந்த அளவிற்கு நாம் தற்போது மருத்துவத்துறையில் முன்னேறியிருக்கிறோம்.இதுபோல அறிவியல் துறையில் பிற நாடுகள் நம்மை சார்ந்து இருக்கும் அளவிற்கு உன்னத வளர்ச்சி அடையவேண்டும். விஞ்ஞான பூர்வமான எனவே அறிவியல் சிந்தனை உள்ளவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.

 

இன்று நம்முடைய கல்வித்துறை மறுசீரமைக்கப்பட்டு உள்ளது..பெரும்பாலும் இன்றைய பாடப்புத்தகத்தில் கியூ. ஆர். கோட்டில் செயல்திறன்,செயல் விளக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளது…இது ஒரு கல்விப் புரட்சி தான்.நிச்சயமாக இது ஓர் மிகப்பெரிய மாற்றம் தான்.இது போன்ற மாற்றத்தால் இனி நம் மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வில் சாதிப்பார்கள் என்றார்..

half 2

கண்காட்சியில் உணவு,பொருட்கள்,நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் உலகம்,மக்களின் கருத்துக்கேற்ப நகரும் பொருட்கள்,எப்படி வேலை செய்கிறது,இயற்கை நிகழ்வுகள் ,இயற்கை வளங்கள்,கணிதம் ஆகிய அறிவியல் தலைப்புகளில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அறிவியல் படைப்புகளைக்கொண்ட காட்சிப் பொருள்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள 216 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்து அறிவியல் மாதிரி செய்யக் காரணம்,செய்த விதம்,அதன் நோக்கம்,பயன்கள் குறித்து தெளிவாக விளக்கி கூறினார்கள்.

கண்காட்சியில் நடத்தப்பட்ட ஒவ்வொரு தலைப்பிற்கும் சிறந்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ1500, இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ1000, மூன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு ரூ.500 பரிசுமற்றும் சான்றிதழை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.

கண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமரசிம்மேந்திரபுரம்,இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை,காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி,அரையப்பட்டி மேல்நிலைப்பள்ளி,வெண்ணாவல்குடி மேல்நிலைப்பள்ளி,பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை,சுப்பிரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,முள்ளூர் உயர்நிலைப்பள்ளி ஆகிய எட்டு பள்ளிகள் முதலிடத்தையும்,பாலன்நகர் உயர்நிலைப்பள்ளி,ஆலவயல் மேல்நிலைப்பள்ளி,எல்லைப்பட்டி உயர்நிலைப்பள்ளி,ஆதனக்கோட்டை மேல்நிலைப்பள்ளி,புலியூர் மேல்நிலைப்பள்ளி,திருவரங்குளம் மேல்நிலைப்பள்ளி,பெருமாநாடு உயர்நிலைப்பள்ளி,திருமணஞ்சேரி உயர்நிலைப்பள்ளி ஆகிய எட்டு பள்ளிகள் இரண்டாமிடத்தையும்,கறம்பக்குடி மகளிர் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,சடையம்பட்டி மேல்நிலைப்பள்ளி,திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி,அண்டக்குளம் மேல்நிலைப்பள்ளி,பூவைமாநகர் மேல்நிலைப்பள்ளி,பொன்புதுப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி,வாராப்பூர் உயர்நிலைப்பள்ளி ஆகிய எட்டுப் பள்ளிகள் மூன்றாமிடமும் பிடித்தன..

கண்காட்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் என்.செல்லத்துரை,வைரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் ரகுபதி சுப்ரமணியன்,பள்ளி முதல்வர் ரேவதி மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச்சேர்ந்த தலைமையாசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் நடுவர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள்,மன்னர் கல்லூரி வஒருங்கிணைப்பாளர் வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,தமிழ்நாடு அறிவியல் மன்றத்தினர்
செயல்பட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு தலைமையில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசி. பன்னீர்செல்வம் செய்திருந்தார். இக்கண்காட்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்ட குழுவினர் அறிவியல் கண்காட்சியினை வழிநடத்தினார்கள்..

half 1

Leave A Reply

Your email address will not be published.