கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா?

0
D1

கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா?

திரையுலக ஜாம்பவன் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அற்புதமான நடிகை’’ என்று பெருமையாக பேசப்பட்டவர்…. அபிநய சரஸ்வதி..

17 வயதில், கன்னட படம் மகாகவி காளிதாசில் நுழைந்து, மறு ஆண்டு தமிழில் சிவாஜியின் தங்கமலை ரகசியம் படத்தில் சின்ன வேடம்..

D2

கிளைமாக்சை நெருங்கும் தருவாயில் மோகினியாக வந்து யெவ்வனமே, யெவ்வனமே, அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசைகொள்வார் உலகினிலே என பாடுவார்.

அது அப்படியே பலித்தது அடுத்தடுத்த ஆண்டுகள் ரசிகர்கள் மத்தியில் சரோஜாதேவி புராணம்தான்..

முதல் இரண்டரை மணிநேரம் புரட்சிகரமாக ஓடும் எம்ஜிஆரின் கனவுப்படமான நாடோடி மன்னன், மூன்றாவது கதாநாயகி சரோஜாதேவி அறிமுகமாவதில் இருந்து கலர்ஃபுல் பார்ட் காதல் காட்சிகளாய் அதகளம் செய்ய ஆரம்பித்துவிடும்..

அப்புறம் திருடாதே, தாய்சொல்லைதட்டாதே, பெரிய இடத்துப்பெண் எங்கவீட்டுப்பிள்ளை அன்பே வா டாப்கியரில் பறந்தது அபிநய சரஸ்வதியின் மக்கள் திலகத்துடனான திரைப்பயணம்..

வசூல் சக்ரவர்த்தி எம்ஜிஆருடன் வருடத்திற்கு ஐந்து ஜோடியாக நடித்து தள்ளும் அளவுக்கு இருந்தது இரு ஜோடிகளுக்கும் திரையில் கிடைத்த வரவேற்பு.

எம்ஜிஆருடன் கிளாமர் என்றால், இன்னொரு புறம், பாவமன்னிப்பு கல்யாண பரிசு, விடிவெள்ளி பாலும் பழமும், ஆடிப்பெருக்கு, சாரதா என சிவாஜி, ஜெமினியுடன் நடிப்பாற்றலுக்கு தீனிபோட்ட பொக்கிஷம்போன்ற படங்கள்..

சிவாஜி பிலிம்சின் முதல் தயாரிப்பான அதுவும் ஈஸ்மென் கலரான புதிய பறவையில் சரோஜாதேவி கோபால் கோபால் என அவர் உருகி உருகி கலக்கிய விதம், காலம் கடந்து இன்றும் என்னமாய் பேசப்படுகிறது..,

அப்போதைய முன்னணி இயக்குநர்கள், அவரை ஒரு முறையாவது தங்களது படத்தில் இயக்கிவிட வேண்டும் என்று துடித்தார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கேட்டதை வாரிவாரி கொடுப்பார்.

N2

அவரின் கிளிப்பேச்சு எதிர்மறை விமர்சனம் பெற்றதை விட, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்றதால் தான் பத்தாண்டு காலம் அசைக்கமுடியாத முன்னணி கதாநாயகியாக தமிழில் வலம் வர முடிந்தது.

1960களில்,தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என நாட்டின் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு அசத்திய அசாதாரணமான நட்சத்திரம் சரோஜாதேவி..

தாய் சொல்லக்கு கட்டுப்பட்டவர். அன்பான ஹர்ஷாவுக்கு வாழ்க்கைப்பட்டு இரு வாரிசுகள் கண்டு இல்வாழ்க்கையையும் இனிமையாக்கிக்கொண்டவர்.

தூக்கத்தில் எழுப்பினாலும் என் தெய்வம் எம்ஜிஆர்தான் என்று சொல்லுபவர். நன்றிகடனாய், தன் பிள்ளைக்கு கௌத ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தவர். இந்திராகாந்தி மீது கொண்ட அன்பால் மகளுக்கு வைத்த பெயர், இந்திரா

பட்டுச்சேலை பிரியையான அவர், சாதத்துக்கு சாம்பார் என்றால் கலந்துகட்டி அடிப்பார். எங்குமே தன்னை பிரதானமாக வைத்துக்கொள்வதில் செம கில்லாடி.

மறைந்த முதலமைச்சர், ஜெயலலிதா, தன்னுடைய திரையுல தோழிகளுக்கும் சீனியர்களுக்கும் தன் கையாலாயே சமைத்து விருந்து வைத்தபோது, சரோஜாதேவி செய்த செல்லமான அக்கப்போர்கள் அந்த இடத்தையே அவ்வளவு ஜாலியாக மாற்றி அனைவரையும் குழந்தையாக்கிவிட்டன என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்..

பேசுவது கிளியா – இல்லை பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா?

கவியரசர் சும்மாவா வர்ணிச்சாரு..

குறிப்பு..இன்னைக்கும் நமக்கு டிவியை மாத்தும்போது, எம்ஜிஆர்- சரோ படம் ஏதாவது வந்துடிச்சின்னா, எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சிட்டு அங்கயே டிக்கானா போட்றுவோம்..

நீடூடி வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

#HBD_81
ஏழுமலை வெங்கடேசன்

N3

Leave A Reply

Your email address will not be published.