
நார்த்தாமலையில் 146 ஆண்டுகளுக்கு பிறகு காட்சியளிக்கும் சுனைலிங்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்று நார்த்தாமலை. இந்த பகுதியில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை எனப் பல மலைகள் உள்ளன. பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள இந்தப் பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரையிலான பழமையானது.


இங்குள்ள மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது. சுனைக்கு மேற்பகுதியில் தொண்டைமான் குறித்த இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தச் சுனையினுள் ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்குமுன் அந்த லிங்கத்தை 1872ம் வருடம், மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர், தற்போது ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ குழுவினர் தொல்லியல் துறை அனுமதியோடு சுனை நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 அடி ஆழத்துக்கு இருந்த சுனை நீர் தற்போது முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 146 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்படும் இந்த சிவ லிங்கத்தை பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
