ஆதி மகள் – 1

0
1

ஆமாம்! கரண் நீ தான் எனக்கு எல்லாமுமாய் ஆகி போனாய்! உன்னை பார்த்த நாள் முதலாய் எனது விடியல் தொடங்கி தூங்கும் வரை தூக்கமும் நீயாகிப்போனாய், என் முடிவில்லா தியானம் நீ, என் ஆத்மாவின் வடிவம் நீ, இத்தனைக்கும் நாம் பழகிய நாட்களில் இது நாள் வரை உன் விரல் கூட திசைமாறி என்னை உரசியதில்லை. உன்னால் தான் அமைதி வேர்கள் தீ பிடித்து சருகாயின. இரவினில் என் முழு தூக்கமும் உன் உயிராய் நீண்டு என் உடல் முழுக்க நீயாய் நீள்வாய். தினமும் உச்ச களிப்பில் உள்உயிர் நெகிழ்ந்து, விழித்ததும் தள்ளாடுகிறேன் நான்.

இப்போதெல்லாம் என் எண்ணங்கள் வேறு நான் வேறாக திரிகிறேன். இதையெல்லாம் எப்படி எப்போது உன்னிடம் சொல்லப்போகிறேன் கரண். சொன்னாலும் என்னவாகி விட போகிறது. என் வார்த்தைகளை கூர்மையா கேட்பாய். கேட்டபின் மௌனமா அல்லது புன்னகையா என அர்த்தம் விளங்காத வகையில் உன் முகத்தில் அலைகள் தோன்றி அகலும். நான் என்னவென்று புரிந்து கொள்வது கடலின் அலையாய் நானும் ஆழமாய் நீயும் இருப்பதாய் ஒர் உணர்வு தோன்றி மறையும்.

ஒரு சில நாட்களில் உன்னோடு நடந்து வரும் சில சந்தர்ப்பங்களில் நான் உன் கைகோர்த்து நடக்க ஆசைப்பட்டு என் அருகினில் நடந்து வரும் உன் கைகளை தேடி என் கைகளுக்கு கண் முளைக்கும். ஆனால் அதை லாவகமாக நடன அசைவுகளுடன் உன் கை மறுதலிக்கும் நான் இடதும் வலதுமாய் முன்னும் பின்னுமாய் தளிர்களின் தவிப்பாய் தவமாடுவேன். இடைவெளிகளில் காற்று குதுகலிக்கும் கனவும் முறிந்து விழும் இதோ இப்போது கூட பார் அம்மா மூன்று முறை டவாலியாய் கூப்பிட்டுவிட்டாள்.

2

செவிகளில் விழும் வார்த்தைகளுக்கு உடல் இசைய மறுக்கிறது. எல்லாம் உன்னால் தான் கரண் என காயத்திரி, உன் எண்ணங்களை உதறி முட்டை உடைத்து வரும் பிஞ்சு கோழியாய் தலையை உயர்த்தியபோது அம்மா அறையின் வாசலில் நின்று என்னடி ஆச்சு உனக்கு, கூப்பிட்டுகிட்டே இருக்கேன் செவிட்டு பிள்ளையார் மாதிரி சிவனேன்னு உட்கார்ந்திருக்க, ஆமாம் அம்மாவின் உதாரணம் கடவுள் தான். அம்மாவுக்கு கெட்டது எதுவும் பேசிவிட கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு, ரத்தத்தில் ஊறிபோன ஒன்று. சரி மாடியில துணி காய போட்டிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றாள் அம்மா. மொட்டை மாடி, துணி எடுக்க சென்றவளுக்கு வானம் மழை வர சமிக்கை காட்டியது ரம்மியமாக இருந்தது. துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து குழந்தையாய் தோள்களிலும் கைகளிலும் சாய்த்து கொண்டாள். மழையை எதிர்ப்பார்த்து நீண்ட நேரம் காத்திருந்தாள். மழை திசை மாறி போனது, காயத்ரிக்ற்கு ஏமாற்றமாக இருந்தது.

காயத்ரி நெருப்பு விதையாய் ஓங்கி நிற்பவள். இவள் ஒவ்வொரு செயல்களிலும் கவனத்தீவிரம் குவிந்து கிடைக்கும். இவள் வார்த்தைகளில் உயிர்ப்பு சம்மணமிட்டு வசீகரிக்கும். அவ்வளவு எளிதாக யாருடனும் பழகிவிட மாட்டாள். நாம் புன்னகைத்தால் கூட பதில் புன்னகை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும். தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே அந்த பதிலும் சாத்தியம். தாய் தந்தை தவமிருந்து ஆண் வேண்ட பெண்ணாய் பிறந்த ஒன்றை மகள். மிளிரும் பொக்கிஷம் காயத்ரி, தவத்தின் முடிச்சு, வெள்ளியாய் விளைந்து நிற்கும் வெளிச்ச குருத்து. +2 முடித்து கல்லூரிக்கு சென்றவள் இரண்டாம் ஆண்டு கல்லூரி முடியும் தருவாயில் படிக்க பிடிக்கவில்லை என சொல்லிவிட்டாள்.

4

அப்பா சண்முகநாதனோ பரவாயில்லை என விட்டுவிட்டார். அம்மா இரண்டு நாளாக காயத்திரியிடம் பேசவில்லை. காயத்ரி படிக்க அம்மா மிகவும் ஆசைப்பட்டாள். அவளது சொந்தபந்தங்களில் யாரும் கல்லூரி சென்று படித்தவர்களில்லை.
தனது மகள் கல்லூரி வரை சென்றது அவளது தாய் ஜானகிஅம்மாளுக்கு பெருமையாக இருந்தது. யார் வந்தாலும் பேசினாலும் காயத்ரி கல்லூரி செல்வதை பற்றி இடையில் ஒரு வரி பெருமை பேசி கொள்வாள். ஆனால் அந்த பெருமை அத்தனை சுலபமாய் நிலைக்கவில்லை. இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு ஏன் போகமாட்டேன் என்கிறாய் என அம்மா கோபமாய் கேட்டாள். பிடிக்கல எனக்கு அது சரிபட்டு வராது. அவ்வளவு தான் அவ்வளவே தான் இனி காயத்ரியிடம் இருந்து எந்த பதிலும் வராது என அம்மாவுக்கு தெரியும். இருந்தாலும் பேசிபார்ப்போம் என கெஞ்சிப்பார்த்தாள் ஜானகி அம்மாள்.

அம்மாவின் பேச்சை காயத்ரி காதில் போட்டு கொள்ளவே இல்லை. சாப்பாட்டை எடுத்துக்கொண்டு டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே கதை புத்தகத்தில் மூழ்கிப்போனாள். அம்மா கோபமாக அடுக்களை சென்று பாத்திரங்களை சத்தமாக உருட்டி ஒழுங்கு படுத்தினாள். அவளது உச்சபட்ச கோபம் கரைந்து நீர்த்து போகும் இடம் அடுக்களை தான்.

காயத்ரியின் கல்லூரி படிப்பு இரண்டு வருடத்திற்குள் நின்று போனது. ஏனோ அவள் படிக்க ஆசைப்படவில்லை. காரணம் அவளுக்கு இன்று வரை புலப்படாத ஒன்று. அம்மாவின் வற்புறுத்தலால் காயத்ரியிடம் அப்பா பேசினார். ‘ஏம்மா படிப்பு உனக்கு புரயோசனமா படலன்னாலும் உன்னோட குழந்தைகளுக்கு வழிகாட்ட உதவுமே. இதை கொஞ்சம் யோசித்து பாரேன் படிக்கிறது நல்லது தானே பையன் படிச்சா சம்பாத்தியத்துக்கு உதவும். பொன்னு படிச்சா சந்ததிக்கே உதவுமேம்மா’ என சொல்லி பார்த்தார். அவரை அமைதியாக பார்த்து சந்ததிய காப்பாத்த படிப்ப விட பணம் இருக்கிறது முக்கியம்பா என சாந்த காளியாய் சிரித்தாள் காயத்ரி.

விரியும்…

-அஸ்மின்

3

Leave A Reply

Your email address will not be published.