இரகசியம் உணர்ந்திடு… வெற்றியை காத்திடு…

0
Full Page

சாக்ரடீஸிடம் ஓர் இளைஞன் வந்து “எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுகிறீர்களே! எப்படி?” என்று கேட்டான். அதற்கு அவர், “நாளை வா” என்றார்.

அடுத்த நாள் அந்த இளைஞன் வந்தபோது சாக்ரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அருகே அவனை வரச் சொன்னார். திடீரென அவன் தலையைப் பிடித்து தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார். மூச்சுத் திணறியதால் தத்தளித்த அவனைச் சிறிது நேரம் கழித்து எழச் செய்தார்.
”தண்ணீரில் மூழ்கியிருந்த நேரத்தில் நீ என்ன நினைத்தாய்?” என்றார் சாக்ரடீஸ்.
அதற்கு அவன் “நான் எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று முழுமூச்சுடன் முயன்றேன்” என்றான்.

இதே போலத்தான் நானும். எப்போதும் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடனேயே உழைத்துக் கொண்டிருப்பேன் என்றார் சாக்ரடீஸ்.
இதே போல் தான் மாணவ செல்வங்களே! எந்த ஒரு முழுநிறைவான காரியத்திற்கும் நல்லதொரு முயற்சி தேவைப்படுகிறது. கடுமையான முயற்சி இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் கிடைப்பதில்லை.
உழைப்பே உயர்வையும், மனநிறைவையும் தரும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுப்பது உழைப்பு மட்டுமே.

Half page

ஒரு பாடத்தில் சிறந்த மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றாலும், அல்லது நினைத்த செயலில் வெற்றிப்பெற வேண்டும் என்றாலும் அதற்கு மிக முக்கியம் உண்மையான, கடுமையான உழைப்பு மட்டுமே நல்ல பலன்களை தரும்.
’உழைப்பு’ என்றாலே அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி கேட்கின்றனர்.

உண்மையில் ‘உழைப்பின் உயர்வை’ அனைவரும் சரியாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். “செக்கு மாடு மாதிரி உழைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனால், வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை” என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். செக்கு மாடு எப்படி வேலை செய்யும் என்பது உலகுக்கே தெரியும். ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வரும். அதுமாதிரி நாமும் சுற்றிச் சுற்றி வந்தால், அப்புறம் எப்படி வாழ்வில் முன்னேற முடியும்? இலக்கு தீர்மானித்து இயங்கினால் மட்டுமே இன்றைய சூழலில் வெற்றிபெற முடியும்.
அதனால் தான் செல்வங்களே ஒரு இலக்கை முடிவு செய்து, அதற்கான செயலில் முழு ஈடுபாடுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

மாணவர்கள் கூறுவார்கள். நாங்களும் கடுமையாக தான் உழைக்கிறோம். இரவு பகல் பாராமல் படிக்கிறோம். ஆனால் மதிப்பெண் மட்டும் வரவில்லை என்று ….
ஆனால் உண்மையை உணர வேண்டும். இலக்கின்றி, சரியான திட்டமிடலின்றி உழைத்தால் அந்த உழைப்புக்கு பலன் இருக்காது. பாடங்களை அப்படியே படம்பிடிப்பது போல் மனப்பாடம் செய்வதால் கிடைக்கும் வெற்றி பயனுள்ளதாக இருக்காது. எதையும் புரிந்து படித்தால் மட்டுமே எப்போதும் நினைவில் நிறுத்த முடியும், என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மனனம் செய்வதால், தேர்வில் வெற்றி பெற முடியும். ஆனால் வாழ்க்கையில் தோற்கத்தான் அது பயன்படும் என்பதை உணர வேண்டும். எனவே கடுமையான உழைப்பு என்று மனனம் செய்யாமல், இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றிப்பெற என்ன வழி என்று சிந்தித்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் குருட்டு அதிர்ஷ்டம், ஏமாற்றுதல் இதன் மூலம் வெற்றி நிலையை அடையலாம் என்று கருதுகின்றனர். உண்மையில் உழைப்பு மட்டும்தான் நிரந்தரமானது. உழைப்பு மட்டுமே உயர்வு தரும். மற்ற அனைத்தும் தாழ்வு மட்டுமே தரும். உழைப்பில்லார்க்கு என்றுமே ஊதியம் இல்லை.
உழைப்பின் உயர்வை உணர்ந்திடுங்கள். உண்மையான வெற்றியை பெற்றிடுங்கள்!
வெற்றிப் பயணம் தொடரும்….

Quarter page

Leave A Reply

Your email address will not be published.