அருகதையை இழந்துவிட்ட அரசு….…

0
full

காசு இருந்தால் மட்டுமே கல்வி, அதிகார வர்க்கத்தின் குரல் ஒடுங்கி மக்களின் குரல் ஓங்க வேண்டும் என தினமும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டு வெகுண்டெழுந்து அரசுக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுக்கும் மக்கள் கலை இலக்கிய கலை கழகத்தின் கலைக்குழுவை சேர்ந்த கோவன் தங்கை லதாவிடம் ஒரு நேர்காணல்…

என்னுடைய பூர்வீகம் கும்பகோணம் பக்கத்தில குடவாசல். நான் அண்ணன் கோவன் படிக்கறதுக்காக சின்ன வயசிலயே இங்க திருச்சி கூட்டிட்டு வந்துட்டாங்க. அண்ணன் திருச்சி பி.ஹச்.எல்ல வேலை பாக்கறப்போதான் மக்கள் கலை இலக்கிய கழக அமைப்புடைய தொடர்பு கிடைச்சது. சமூகத்தில் உள்ள ஒடுக்கு முறையையும், அதிகார வர்க்கதின் தீர்மானங்களின் வெறுப்பும் தான், நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த எங்களை சமூக அக்கறை கொண்டு மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என எங்களை புரிதலுக்கு தள்ளியது. தேர்தல்ல ஓட்டு போட மட்டும் தான், மக்களுக்கு அதிகாரம் இருக்கு, அந்த ஆட்சியாளர்கள் தவறு செய்தால் திருப்பி அழிக்கிற அதிகாரம் கிடையாது, இந்த சூழலை மாற்ற வேண்டும் என்ற கொள்கை தான் எங்களை போராட்ட வீதிக்கு வரவைத்தது. நான், அண்ணன், எனது கணவர் சத்யா எல்லாருமே மக்கள் கலை இலக்கிய கழகத்துடைய கலைக்குழுவைச் சேர்ந்தவங்க. மக்கள் அதிகாரம் எங்களுடைய தோழமை அமைப்பு. எவ்வளவோ கட்சிகள் இங்க இருக்கு, எல்லா கட்சிகளும் ஓட்டுக்காகவும் சுயநலத்துக்காகவும் அவங்களுடைய குடும்பங்கள் வசதியாக வாழனும்கிற நோக்கத்தில தான் பெரும்பாலான கட்சிகள் இருக்கு. ஆனால் ம.க.இ.க அமைப்பில மட்டும் தான் மக்கள் அதிகாரத்தை பெறனும், ஏழை பணக்காரர்கள் சரிசமமாக இருக்கனும் என்ற கொள்கை உடையது.

அமைப்புடைய முனைப்பு உங்களுக்குள் எப்படி வந்தது?

poster

எனக்கு விவரம் தெரியாத வயசிலே அண்ணன் என்னை போராட்டத்துக்கு அழைச்சுட்டு போவாங்க. போராட்டத்துக்காக ஒரு ஊருல இருந்து இன்னொரு ஊருக்கு போகும்போது அங்கேயே எங்கயாவது தங்கி விழிப்புணர்வு பாடல்களை இயக்குவோம். அந்த ஊருல மக்கள் எங்களுக்கு தருகிற உணவை தான் சாப்பிடுவோம். மக்களுடைய பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்கறப்போ மக்கள் நம்மை கவனிக்கிற விதம், பாடல் வரிகள், மக்களுடைய கஷ்டங்கள், சாப்பாடுக்கு கூட வழி இல்லாம கிழிந்த உடையோட இருக்க குழந்தைகள் என எல்லாத்தையும் பார்க்கும்போது நாம் போகும் வழி சரிதான் என்ற எண்ணம் வந்தது. படிச்சுக்கிட்டே அமைப்புடைய வேலைகளிலும் சார்ந்து இருந்தேன், அமைப்புடைய முதல் பாடல் “தேர்தல் வந்து தீர்ந்தது என்ன?” சீடியாக வெளியாட்டபோது, அப்போ நானும் 8வது படிக்கறப்போ பிரச்சாரத்தில ” அரிசி விலை ஆணை விலை, ஆக்கித்திண்ண குருணையில்லை, கத்தாலை சோறு திண்ணும் காலம் இன்னும் தூரமில்லை”, “தேர்தல் வருகுது திருநாள் வருகுது, திடுக்குனு தும்மலாட்டம் தேர்தல் வருகுது”னு பாடினேன். அதற்கடுத்தடுத்த பாடல்கள்ல எனக்கும் ரொம்பவே உடன்பாடு வந்து பாட ஆரம்பிச்சட்டேன். இன்னைக்கு இருக்க பெண்களை பொருத்தவரை ” நீ டாக்டர் ஆகனும், இன்சினியர் ஆகனும் சொல்றாங்க். ஆனா வீட்டுக்குள்ள நீ அடிமையாகதான் இருக்கனும், சமூக பிரச்சனைக்கு போகக்கூடாது”னு அவளை அடக்குதல் உண்மையான சுதந்திரம் இல்லை. அப்படியிருக்க என் அண்ணன், கணவர் இருவருமே, இந்த சமூக உரிமைகளை தட்டிக்கேக்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. இதற்கு வர்க்கமுரண்பாடு ஒழிக்கபடவேண்டும், அப்போது தான் பெண்களுக்கு சரிசமமான் உரிமை கிடைக்கும்.

பெண் அடிமைமுறை இந்த காலத்திலும் தலைத்தோங்குகிறதா?

ukr

ஒரு கம்பேனிக்கு நாம வேலைக்கு போனா அந்த முதலாளிக்கு அடிமையாக இருக்கிறோம். 8 மணி நேரம்கிறது கிடையாது 14 மணி நேரம் வேலை பார்க்க சொன்னாலும் நாம் பார்த்தாகனும். திருப்பூர், கோயமூத்தூர்லலாம் வேலை செய்கிற பெண்கள், குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியோ வாங்கினதுனால கொத்தடிமையாக அங்கேயே தங்கி சிறுநீர் கழிக்ககூட நேரமில்லாமல், மாதவிடாய் நாட்களில் கூட வேலை பாக்கறாங்க. அதே போலதான், ஒரு பெண் ரோட்டில போன சீண்டலும், தவறான பார்வையும் இருக்குது.

பார்பனியத்தை எதிர்ப்பதன் காரணம் என்ன?

பார்பனிய கலாச்சாரப்படி வேதங்களில் ஒரு பெண் மங்களகரமாக இருக்கனும், வீட்டுக்குள்ளே இருக்கனும் சொல்றது. குறிப்பாக பெண்ணுக்கு கல்யாணமாகிட்டா தாலி என்ற அடையாளம் தருவதும் ஆண்களுக்கு அப்படியான அடையாளங்களை உருவாக்காமல் இருப்பதும். அவங்களுடைய வேததின் படி அய்யர் வைத்து திருமணம் செய்யும் போது அவர்களின் மந்திரத்திற்கு அர்த்தம், முதலில் அவள் கடவுளுக்கு மனைவி, பிறகு அந்த எனக்கு(அய்யருக்கு)மனைவி, அதற்கு உனக்கு மனைவி என்ற நோக்கம் இருக்குது. இதனால் தான் எங்கள் அமைப்பில் சாதி மறுப்பு, தாலி மறுப்பு. இப்போவரை எங்களது பிள்ளைகளை சாதி சான்றிதழ் இல்லாமல் தான் பள்ளிகளில் சேர்த்திருக்கோம்.

இந்த பயணமும் போராட்டங்களும் எப்போது முற்று பெரும்?

அதிகார அரசு அருகதையை இழந்து, ஆளத்தகுதியற்றதாக மாறிடுச்சு. சட்ட ஒழுங்கை காக்கின்ற காவல்துறையே இன்னைக்கு கொலைக்கூடாறமாக மாறிவிட்டது. காசு இருந்த நீதியே மாறிப்போயிடுது. அரசினுடைய திட்டங்களும் மக்களுக்கு  பாதகமாக இருக்குது. அப்போ மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும். அதிகாரத்தின் கைகள் ஒடுங்கும் வரை எங்கள் கைகள் போராட்டங்களுக்காக ஓங்கியே இருக்கும்.

-சுபா ராஜேந்திரன்

half 1

Leave A Reply

Your email address will not be published.