அன்னையாக எம்.ஜி.ஆர்

0
Full Page

அன்னம் வழங்குவதும், அன்பைப் பொழிவதும் அன்னை தானே! ஆறுதல் தந்து அரவணைப்பது தாய்தானே!
‘பசி’ என்று வந்தவர்களுக்குப் ‘புசி’ என்று அன்போடு வழங்கியவர்கள் எவரையும் உலகம் மறக்கவே இல்லை.

அதுபோல் பொங்கல் திருநாள் என்றவுடன் கலை உலகில் பலர் நெஞ்சம் நிறைந்து, மகிழ்ச்சியோடு, குறிப்பிடுவது பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத்தான்.
பொங்கல் அன்று நடிகர்களுக்கு மைசூர் சில்க் சட்டை, ஜரிகை போட்ட கைத்தறி வேட்டிகள் காத்திருக்கும். எம்.ஜி.ஆர் என்ன உடுத்துகின்றாரோ, அதே துணியில்தான் மற்ற அனைவருக்கும் சட்டைத்துணி இருக்கும். அதுபோலவே வேட்டியும் இருக்கும். சட்டை, வேட்டி மற்றும் பணமும் கிடைக்கும் வந்த அனைவருக்கும் பொங்கல், சிற்றுண்டி என அங்கு வந்த அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து எம்.ஜி.ஆர் உண்பார்.

காலையிலிருந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் எம்.ஜி.ஆரும் கலந்து கொள்வார். கலை உலகம் ஒரே குடும்பம் என்கின்ற உணர்வை பாதுகாத்து பட்டுப் போகாமல் உதவிகள் பல செய்து பேணிக் காத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர், நடிகைகள் குடும்பத்தோடு வந்து, காலை முதல் இரவு வரையில் தங்களோடு இருப்பதையும், அவர்கள் மனம் மகிழ்ந்திருப்பதையும் கண்டு மனம் பூரிப்பார் எம்.ஜி.ஆர்.

நடிகர் சங்கத்தின் தலைவரான பின்பும் சரி! ராமாவரம் சென்ற பின்பும் கலைஞர்களும், நண்பர்களும் பொதுமக்களும் பொங்கல் திருநாள் அன்று எம்.ஜி.ஆரை தோட்டத்தில் பார்ப்பது மிகவும் அதிகமானது. எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொங்கல் மற்றும் சிற்றுண்டியும் பரிமாறப்படும். யாரை முதலில் பாரத்தாலும் எம்.ஜி.ஆர் முதலில் கேட்கும் கேள்வி சாப்பிட்டீங்களா? என்பதுதான்.

Half page

கவிஞர் முத்துலிங்கம் பத்திரிக்கையாளராக இருந்து, திரைப்பட பாடலாசிரியராக முதலில் எழுதிய பாடல் ‘உழைக்கும் கரங்கள்’ என்று எம்.ஜி.ஆர் நடித்த படத்திற்கு முதன்முதலாக அவர் எழுதிய பாடல். கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுதியதைப் பாராட்டி சினிமா பாடல் என்றால் இப்படித்தான் எளிமையாக இருக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர்.

பொங்கலுக்கு முன்பு ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் சென்றிருந்தார். அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றார் எம்.ஜி.ஆர். நான் ஊருக்கு உழைப்பவன் என்ற ஒரு படத்தில் நடிக்கிறேன். அப்படத்திற்கு பாடல் எழுத உங்களை கூறியுள்ளேன். அப்படத்திற்கு நீங்கள் பாடல் எழுதுவதற்கு முன்பணமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கவிஞரிடம் கொடுத்தார் மக்கள் திலகம்.

கவிஞர் முத்துலிங்கம் திகைத்துப் போய் எல்லா பாடல்கள் எழுதினால் முன்பணம் கிடைக்கலாம். ஆனால் ஒரு பாட்டிற்கு முன்பணமா, என்று திகைத்துப் போனார். ஆயிரம் கேள்விகள் மனதில். மறுநாள் படக்கம்பெனிக்கு போய் விசாரித்தபோதுதான் உண்மை புரிந்தது.

எம்.ஜி.ஆர் தனது சொந்த பணத்தை கம்பெனியில் கொடுத்தார்கள் என்று கூறி கொடுத்தார் என்று. பொங்கல் சமயம் தன்னை சார்ந்தவர்கள் யாரும் சிரமப்படக் கூடாதென்று, ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்திடுவதில் கடவுளுக்கு நிகரானவர் எம்.ஜி.ஆர் என்று பலர் கூறியது வரலாறாக இன்றும் வாழ்கிறது.

ஆர்.பி.பூபேஷ்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.