உயிர் வளர்ப்போம் – தொடர் 9(கதைவழி மருத்துவம்)

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0
1

இந்த சமையல் வல்லுநர் மிக அற்புதமான முறையில் தன்னுடைய பெரும் முயற்சியால் இந்த உணவினை தயாரித்து நமக்கு வழங்கி உள்ளார். எனவே உணவினை உண்ணும் முன்னர் இவரை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கருங்கல்லினை பரிசாக அளிக்கிறேன்  என கூறியபடியே அந்த கருங்கல்லினை நீட்டினார்.

இதனைக் கண்ட இராஜ குரு யோகியாரை நோக்கி “அய்யா, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? சமையல் வல்லுனரை தாங்கள் பாராட்டுவதற்கு பதிலாக அவமரியாதை செய்கிறீர்கள். நன்றி தெரிவிக்கும் முறை இது தானா?” என்று தன் கேள்விகளை அடுக்கினார். இதனைக்கேட்ட யோகியார் “சமையல் வல்லுனரை நான் அவமரியாதை செய்வதாக கூறுகின்றீர்களே,  நீங்கள் அனைவரும் செய்யும் அவமரியாதையை விட நான் செய்வது மிகக்குறைவே” என்றார். இதனை கேட்ட அனைவரும் திகைத்தனர். “அய்யனே, என்ன அவமரியாதை நேர்ந்தது என்பதனை எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன்” என மன்னன் யோகியாரிடம் வேண்டினான்.

யோகியார் அனைவரையும் பார்த்து ஒரு கேள்வியை முன்வைத்தார். “அன்பானவர்களே, இந்த உணவு உங்களுக்கு கிடைக்க யார் காரணம்?” யோகியாரின் இக்கேள்விக்கு பதில்கள் பலவாறு வெளிவந்தன. ஒருவர் விவசாயியால், மற்றவர் வியாபாரிகளால், இன்னொருவர் பணத்தால் என பதிலளித்தனர். இப்பதில்களால் திருப்தி அடையாத மன்னன் “இவ்வுணவு நமக்கு கிடைக்க காரணமாய் விளங்கியது இயற்கையின் கருணையே” என்றான்.

இப்பதிலினை ஏற்றுக்கொண்ட யோகியார் “ஐம்பூதங்கள் வாயிலாக இயற்கையை படைத்த இறைவனின் கருணையாலேயே நமக்கு உணவு கிடைக்க பெறுகின்றது. அப்படி இறைவனின் கருணையால் கிடைத்த உணவினை இறைவனுக்கு நன்றி தெரிவிக்காமல் உண்பதோடு மட்டுமின்றி பேசிக்கொண்டே உண்பது நீங்கள் இறைவனுக்கு செய்கின்ற அவமரியாதை அல்லவா?  நீங்கள் இறைவனுக்கு செய்கின்ற அவமரியாதையை விடவா நான் செய்துவிட்டேன்?” என்று அனவைரையும் பார்த்து  கேட்டார்.

இதனை கேட்ட அனைவரும் தங்களின் தவறான போக்கை எண்ணி வருந்தினர். மன்னன் யோகியாரிடம் “அய்யனே, தாங்கள் தயை கூர்ந்து எங்களுக்கு எவ்வாறு இறைவனுக்கு நன்றி தெரிவித்து உணவு உண்பது என்பதையும், மேலும் உணவு உண்ணும் பொழுது கடைபிடிக்க வேண்டிய இயமங்களையும் தெளிவுபடுத்தி அருள வேண்டுகிறேன்” என்று பணிவுடன் வேண்டினான்.”

இதனை கேட்ட யோகியர் “மன்னா, பூமி என்கிற பூதமானது உடலில் முதலிடம் பெறுகின்ற பூதமாகும். இது பொறுமையின் அடையாளமாக சுட்டப்படுகின்றது. மண் பூதம் உடலில் குறைவுபடும் பொழுது உயிரானது பசி என்கிற உணர்வினை உடலில் ஏற்படுத்துகின்றது.

பசி உணர்வு வயிற்றை கிள்ளி நம்மை உணவு உண்ண அறிவுறுத்துகிறது. அவ்வாறு அறிவுறுத்தப்படும் பொழுது நாம் நம் உள்ளங்கை பள்ளம் நிறைய நீரினை மும்முறை பருகுதல் வேண்டும்.

அவ்வாறு பருகிய பின் பசி அதிகமானால் உணவு உண்ண தொடங்கிடலாம். அப்படி பசி உணர்வு அதிகரிக்கவில்லை எனில் உணவு உண்ணுவதை அடுத்த முறை பசிக்கும் வரை தள்ளிப்போடுதல் வேண்டும். உணவு உண்ணும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

இறையச்சம் & நன்றியுணர்வு: உணவினை இறையச்சம் மற்றும் இறைவனுக்கு நன்றி உணர்வுடன் உண்ண வேண்டும். உணவினை பெற நம்மால் உழைக்க மட்டுமே முடியும். ஆனால் அந்த உணவின் படைப்பு இறைவனின் அதிசயம் ஆகும். நீங்கள் உண்ணுகின்ற உணவு விளைய தேவையான காற்று, நீர், மண், வித்து, சூரிய ஒளி என யாவும் இறைவனின் கருணையால் நமக்கு கிடைக்க பெறுகின்ற. இதனை மனதில் கொண்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்து உண்ண தொடங்கிட வேண்டும்.

2

தூய்மை: உணவு உண்ணும் முன் கை, வாய், முகம், இருக்கால்கள் ஆகியவற்றை நீரினால் நன்கு தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். உணவுக்கு முன்னும் பின்னும்  45 நிமிடங்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுமை: உணவினை உண்ணும் பொழுது பொறுமையை கைக்கொள்ள வேண்டும். பொறுமையாக உணவினை சிறிது சிறிதாக உட்கொள்ள வேண்டும். உணவினை தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

கவனம்: உணவினை கவனமாக உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணும் பொழுது தங்களின் கவனம் முழுவதும் உணவின் மீது இருத்தல் வேண்டும். தங்கள் பார்வை உணவின் மீது மட்டுமே பதிந்திருக்க வேண்டும். பார்வை, எண்ணம், உணர்வு ஆகிய யாவும் உணவின் மீதே இருக்க வேண்டும்.

சுவைத்தல்: உணவினை நன்கு சுவைத்து உண்ணுதல் வேண்டும். நன்றாக உணவினை இரு உதடுகளையும் மூடியபடி மென்று நொறுங்க செய்து தீர்க்கமாக சுவைத்து உண்ண வேண்டும். உணவினை சுவைக்கும் பொழுது கட்டாயம் தலை குனிந்த நிலையில் இருத்தல் வேண்டும். விலங்குகள் யாவும் தலை குனிந்தே உண்ணுகின்றன. இவ்வாறு உண்ணும் பொழுது வாயில் உமிழ் நீர் சீராக சுரந்து சீரணத்தை முழுமைப் படுத்துகின்றது. உணவில் ஆறு சுவைகளும் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுவையும் திகட்டும் வரை உண்ண வேண்டும். சுவைகள் முறையே இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என சுவைகளை வரிசைப்படுத்தி உண்ண வேண்டும்.

அசை போடுதல்: உணவு உண்ட பின் அசை போடுதல் வேண்டும். மாடுகள் தான் அசைபோடுதல் வேண்டும். மாடுகள் தானே உணவினை ஆசை போடும் மனிதர்கள் எவ்வாறு ஆசை போட இயலும் என என்ன வேண்டாம். மனிதர்கள் உணவு உண்ட பின் ஓய்வாக அமர்ந்த படி என்னென்ன பதார்த்தங்கள் இன்று உணவில் இருந்தன என்பதனை மனதில் எண்ண வேண்டும். அவ்வாறு அசை போடும் பொழுது உமிழ் நீர் வாயில் சுரக்கும். அதனை விழுங்கும் பொழுது உணவு நன்கு சீரணமாகும்.

மதிய உணவுக்கு பின்அசை போடும் பொழுது தாம்பூலம் சுவைப்பது சிறப்பான ஆரோக்கியம் அளிக்கும். ஒரு முழு வெற்றிலை, இடித்த தெக்கம் பாக்கு, சிப்பிச் சுண்ணாம்பு என மருத்துவ குணம் வாய்ந்த இம்மூன்றையும் சரியான விகிதத்தில் தன் நாவின் சுவைக்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும். செயற்கை சுண்ணாம்பு, வாசனை மற்றும் சாயம் ஏற்றிய பாக்கு போன்றவற்றை தவிர்க்கவும்.

வெற்றிலையில் காம்பு பகுதி, நடு பகுதி, கீழ் பகுதி ஆகிய இம்மூன்று பகுதிகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குணங்கள் அடங்கி உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விடுதல் வேண்டும்.

இவ்வாறு சரியான முறையில் உண்ணுகின்ற உணவு நல்ல முறையில் ஜீரணித்து ஆரோக்கியமான வாழ்வினை தந்திடும். அனைவரும் நூறாண்டுகள் திடமான உடலோடு வாழ நல்ல ஆரோக்கியம் அவசியம் “ என்று விளக்கினார். இதனை கேட்ட அனைவருக்கும் உணவு உண்பதில் இத்தனை விஷயங்கள் உள்ளதை எண்ணி வியந்தனர். யோகியாரின் அறிவுரைப்படியே அனைவரும் உணவினை சிரத்தையுடன் உண்டு களித்தனர்.

தொடரும்…

3

Leave A Reply

Your email address will not be published.