உயிர் வளர்ப்போம் – தொடர் 8 (கதைவழி மருத்துவம்)

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0
1

யோகியார் பேசிக்கொண்டு இருக்கும் போதே தேர் நிறுத்தப்பட்டது. அனைவருக்கும் பசி ஏற்படவே வழியில் உணவு உண்பதற்காக ஒரு சத்திரத்தில் தேர்கள் நிறுத்தப்பட்டன. அனைவருக்கும் உணவு தயார் செய்யப்பட்டது. அப்போது உணவின் தரத்தினை மேற்பார்வையிட மன்னர் யோகியாரை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு சென்றார்.

அங்கு சமையல் சிப்பந்திகள், சமையல் வல்லுநர் தலைமையில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். மன்னர் உணவு பொருட்களின் தரத்தினை ஆராய்ந்தார். உணவு பொருட்கள் யாவும் தரமுடையதாக உள்ளன என்று உறுதிப்படுத்திக் கொண்டார். இதனைக்கண்ட யோகியர் மன்னரிடம் “மன்னா, உணவின் தரத்தை சோதித்தீர்களே, அவ்வுணவு தயாரிக்கும் முறை தரமானதா என சோதித்தீரா?” என வினவினார். இதனை கேட்ட மன்னன் “அய்யனே, இங்கு உணவு சுகாதாரமான முறையில் தான் தயாரிக்க படுகின்றது” என்று கூறினார்.

இதனை கேட்டு பலமாக சிரித்த யோகியார் “மன்னா, நான் உணவு தயாரிக்கப்படும் தரத்தை பற்றி தான் கேட்டேன். சுகாதாரத்தை பற்றி அல்ல. உணவு தயாரிக்கும் முறை சாத்வீகமாக இருக்க வேண்டும். சாத்வீகமாக சமைக்கப்படும் உணவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் ” என்றார். இதை கேட்ட மன்னர் சற்று திகைக்கவே செய்தார். செட்டிநாடு, கோவை, சீனா என பல்வேறு சமையல் முறைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதென்ன புதிய சமையல் முறை என குழம்பினான்.

மன்னரின் முகபாவத்தில் இதனை புரிந்து கொண்ட யோகியர்” மன்னா, சாத்வீகமான சமையல் என்பது ஐம்புலன்களுக்கு ஊறு செய்யாமல் சமைப்பதாகும். உணவு சமைக்கப்படும் பொழுது நம்முடைய கண்களுக்கு எரிச்சல் தராமலும், நாசியில் நெடி ஏறாமல் நல்ல மணத்தோடும், செவிகளுக்கு அதிகமான இரைச்சல் கேட்காத படி எண்ணெய் குறைவாகவும், உடலை உஷ்ணம் தாக்காத படி சிறு தீயிலும், சுவைகள் யாவும் நாவை உறுத்தாதபடி சரியான அளவிலும் சேர்க்கப்பட வேண்டும்.

இதுவே சாத்வீகமாக சமைக்கும் முறை ஆகும். இந்த ஐம்புலன்களுக்கு ஊறு செய்யும் வகையில் தயாரிக்கப்படும் உணவு உடலின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும்.” என விளக்கினார்.

இதனையடுத்து சாத்வீக சமையல் முறையில் உணவு தயாராகியது. உணவு அனைவருக்கும் பரிமாறப்பட மேஜையில்  தயாராக இருந்தது. எல்லோரும் இருக்கையில் அமர சென்றனர். யோகியாரோ தரையில் அமர்ந்தார். இதனைக்கண்ட மன்னன் பதறினான். “அய்யனே, இருக்கையில் அமராமல் தரையில் ஏன் அமர்கிறீர்கள்.

எங்கள் உபசரிப்பில் ஏதேனும் குற்றமா? என்று வினவினான். அதற்கு யோகியார் “மன்னா, தங்களின் உபசரிப்பு மிக அருமையாக உள்ளது. இருப்பினும் இருக்கையில் அமர்ந்து கால்களை  தொங்க விட்டபடி சாப்பிடுவது சீரணத்தை சீர்குலைக்கும். கால்களை மடித்து தரையில் அமரும் பொழுது தான் உடலுக்குள் புவியின் ஆற்றல் சீராக பாயும். ஜீரண உறுப்புகளும் இழுக்கப்படாமல் ஓய்வாக இருக்கும். கால்களை தொங்க விடுவதால் ஜீரண உறுப்புகள் இழுக்கப்பட்டு அழுத்தத்தில் இருக்கும்.” என விளக்கினார்.

2

இதனை கேட்ட மன்னன் தானும் தரையில் அமர்ந்தான். இதனை கண்ட அனைவரும் தரையில் அமர்ந்தனர். அப்பொழுது மந்திரியார் தாமதமாக வந்தார். மன்னர் அதற்கான காரணம் கேட்கவே குளித்து விட்டு வருவதாக பதிலுரைத்தார் மந்திரி. இதனைக்கேட்ட யோகியார் மன்னரிடம் “மன்னா, உம்முடைய மந்திரி தாமதமாக வந்து எம்மை அவமரியாதை செய்து விட்டார்.” என்று கோபமாக கூறினார். இதனை கேட்ட மன்னன் யோகியாரிடம் மன்னிப்பு வேண்டினான். அதற்கு யோகியர் சற்றும் செவி சாயக்கவில்லை மாறாக “இந்த மந்திரிக்கு நான் கூறும்  தண்டனையை வழங்கியாக வேண்டும்” என கூச்சலிட்டார்.

மன்னன் யோகியாரிடம் “அய்யனே, என்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதனை தாங்களே வழங்கி விடுங்கள்.” என்று பணிவுடன் வேண்டினான். இதனை கேட்ட யோகியர் “இந்த மந்திரிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக உணவினை வழங்கி விடுங்கள்.

இதுவே இவருக்கான சரியான தண்டனை” என்று கூறினார். “ அய்யனே, இதென்ன வினோதமான தண்டனை என மன்னன் கேட்டான்.

இதற்கு யோகியர் பலமாக சிரித்தபடி” மன்னா, உணவு உண்பதற்கு 45 நிமிடங்கள் முன்னும் பின்னும் குளிக்க கூடாது. அவ்வாறு குளித்தால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு உணவு சீரணிக்க தேவையான உடல் சூடு இல்லாமல் போகும். இதனால் உணவு சீரணிக்காது. அதனால் தான் மந்திரிக்கு இவ்வாறு தண்டனை விதித்தேன்” என்று கூறினார்.

இதனை கேட்ட அனைவரும் நிம்மதி அடைந்ததுடன் யோகியாரின் ஆழ்ந்த அறிவையும் நகைச்சுவை உணர்வையும் வியந்தனர். அதனை பற்றி தம்முள் பேசிக்கொண்டே உணவினை உண்ண முற்பட்டார்கள்.

அப்போது யோகியர் சமையல் செய்த வல்லுனரை அழைத்தார்.  பணிவுடன் வந்து நின்ற வல்லுனரை அருகே அழைத்த யோகியர் அவரது கையில் ஒரு பெரிய கருங்கல் ஒன்றை அருகிலிருந்து எடுத்து கொடுத்தார்.

இதனைக் கண்ட அனைவரும் ஏதும் புரியாமல் விழித்தனர். அப்போது யோகியர் பேச தொடங்கினார்…

3

Leave A Reply

Your email address will not be published.