உயிர் வளர்ப்போம் – தொடர் 7 (கதைவழி மருத்துவம்)

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0
1

வாழைத்தண்டு இரசம் செய்முறை

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – அரைமுழம், பூண்டு -10,

கடுகு –½ தேக்கரண்டி, பெருங்காயம் (ஒரு சிட்டிகை(அ) தேவையான அளவு

சீரகம் –½ தேக்கரண்டி, சுக்கு/இஞ்சி – ½ தே.கரண்டி

மிளகு -1 தேக்கரண்டி, கொ.மல்லி – 4-5 கொத்து

வெந்தயம் -கால் தேக்கரண்டி, புதினா – 1 கொத்து

மஞ்சள் – ½ தேக்கரண்டி, எண்ணெய் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு,

பா.பருப்பு (வேகவைத்த்து) -1 குவளை

கறிவேப்பிலை – 2 கொத்து

தக்காளி(நறுக்கியது) – 3

சி.வெங்காயம் – 10

செய்முறை

  1. இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, ஆகியவற்றை உரலில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பாசி பருப்பை வேகவைத்து கடைந்து வைத்துக்கொள்ளவும்.
  3. சி.வெங்காயத்தை உரித்து, இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் வாழைத்தண்டினை சிறிய துண்டுகளாக அரிந்து தண்ணீரில் போடவும். பின்னர் ஒரு சிறிய மரக்குச்சியால் கிளறி அதிலுள்ள அதிக அளவிலான நார்களை நீக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகினை போடவும். கடுகு வெடித்தபின் வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் சற்று நிறம் மாறியபின் தட்டி வைத்த இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் மிளகினை சேர்க்கவும். பூண்டின் மணம் மாறிய பின் அதில் சி.வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. 650 மிலி தண்ணீர் ஊற்றி கொதி வரும் முன்னர் வாழைத்தண்டினை சேர்க்கவும்.
  7. சிறு அளவில் பாத்திரத்தை மூடி 2 நிமிடங்கள் வேகவிடவும்
  8. வேகவைத்த பா.பருப்பை அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  9. கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறவும்.

சுவையான, ஆரோக்கியமான வாழைத்தண்டு இரசம் தயார்.

 

“மன்னா வருடமிரண்டு என்பது, ஒரு மனிதன் ஒரு வருடத்தில் இருமுறை தன் குடலை சுத்திகரிப்பு  செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாம் காலை எழுந்தவுடன் பஞ்ச சுத்திகளை முடித்த பின்னர் உணவு  ஏதும் உட்கொள்ளாமல் ஒரு தே.கரண்டி (5 மிலி) விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய் உட்கொண்ட ஓரிரு மணி நேரத்திற்குள் குடலானது சுத்திகரிக்கப்பட ஆரம்பித்து விடும். வயிற்றுப்போக்கு ஒரு சில முறைகள் ஏற்படும். அன்றைய தினம் முழுவதும் வாழைத்தண்டு இரசமும், வடித்த அன்னமும் பசிக்கும் பொழுது மட்டும் உட்கொள்ள வேண்டும். இந்த சுத்திக்கு முதல்நாளும், அடுத்த நாளும் பழ உணவும், பச்சை காய்கறிகளும் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வாழைத்தண்டினை வருடம் இருமுறை தவிர வேறு எப்போதும் சாப்பிடக் கூடாது.” என விளக்கிச்சொன்னார் யோகியார். இதனைக் கேட்ட மன்னன், “அய்யனே வாழைத்தண்டினை ஏன் வருடம் இருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது” என வினவினார். இதற்கு யோகியார் பதிலளிக்கலானார்,  “மன்னா! வாழைத்தண்டு என்பது ஒரு நீர்மண்டல சுத்திகரிப்பு உணவாகும், இதனை சாப்பிடும் பொழுது உடலில் நீர்ச்சத்து குறைவு படுவதுடன் உடலின் முக்கிய தாதுக்களும் நீருடன் வெளியேற்றப்படும்.

இதனால் உடல் சோர்வுக்கும், அசதிக்கும் உள்ளாகும். மதம் கொண்ட யானையின் வேகத்தை குறைக்க அதற்கு வாழைத்தண்டினை கொடுப்பதை நீங்கள் கவனித்ததுண்டா? ஒரு யானையின் பலத்தையும், வேகத்தையுமே குறைக்கும் வலிமை வாழைத்தண்டிற்கு உண்டு. அதனால் தான் வாழைத்தண்டினை வருடம் இருமுறைக்கு மேல் உண்பதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் வெளியான தாதுக்கள் நம் உடலில் மீள் உருவாக்கம் அடையும். இவ்வாறாக நாளிரண்டு, வாரமிரண்டு, மாதமிரண்டு, வருடமிரண்டு ஆகியவற்றை சிறப்பாக கடைபிடித்து வருவோர்க்கு ஆரோக்கியமும், பொலிவும் மிக்க தேகத்துடன், தெளிவான புத்தியும் வாய்க்கும்” என தெளிவாக விளக்கினார் யோகியார்.

இதனைக் கேட்டு தெளிவு பெற்ற மன்னன் யோகியாருக்கு தன் நன்றியை உளமாற தெரிவித்தான். மேலும் மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு எளிய மருத்துவ முறையை உபதேசித்து அருளுமாறு யோகியாரை வேண்டினான். மன்னரின் வேண்டுடகோளை யோகியாரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அனைவரும் அரண்மனைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை யோகியின் சீடர்களும் மன்னரின் ஏவலாளிகளும் செய்து முடித்திருந்தனர். மன்னன் தன்னுடைய தேரில் ஏறிக்கொள்ளுமாறு யோகியாரிடம் பணிவுடன் வேண்டினான். 8 சக்கரங்களைக் கொண்ட அந்த அலங்காரம் மிக்க பொன்னொளி வீசும் தேரில் இரண்டு வெண்குதிரைகள் பூட்டப்பட்டு இருந்தன.

யோகியார் அத்தேரில் ஏறியவுடன் மன்னன் தன் சாரதியாய் விளங்கும் கண்ணனிடம் தேரினை தன் நாட்டின் மூலாதாரமாய் விளங்கும் தலைநகரின், அரண்மனைக்கு செலுத்துமாறு பணித்தான். சாரதி கண்ணன் தன் சாட்டையை சொடுக்கிய அடுத்த வினாடி சீறி வரும் புயலைப்போல் இரு வெண்புரவிகளும் புறப்பட்டன. அப்புரவிகள் தம் கால்களை பூமியில் அழுத்தி ஓட்டமெடுக்க குதிரையின் லாடங்கள் பூமிமேல் பட்டு தீப்பொறிகள் தெறித்தன. அரண்மனையை நோக்கிய பயணத்தில் முதலில் அவர்கள் கடந்து வந்தது ஒரு பெரிய விளைநிலப் பரப்பாகும். அந்நிலப்பரப்பை கண்ட மன்னன் யோகியாரிடம், “அய்யனே, எமது நாட்டின் விளை நிலங்களின் வளங்களை கண்டீர்களா? இந்நிலத்தை பராமரிக்க உரிய சட்டங்களை இயற்றி உரிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் எனக்கூறினார். இதனைக் கேட்ட யோகியார், ”மன்னா, உமது ஆட்சியின் திறத்தினையும் மக்கள் மீது கொண்டுள்ள அன்பையும் இவ்விளை நிலங்களின் வளத்திலும் செழுமையிலும் கண்டறிகிறேன்.!

மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இதேபோல் உமது உடலில் உள்ள நிலத்தை நீர் அறிவீரா? அதனை சரியான முறையில் பராமரித்து வருகிறீரா? என புதிரான கேள்வியினை முன் வைத்தார்.” இக்கேள்வியின் வாயிலாக யோகியார் தமக்கு எதையோ கற்றுத்தர விழைகிறார் என்பதை அறிந்து கொண்ட மன்னன், யோகியாரிடம் ”அய்யனே, நமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதனை அறிவேன். ஆயினும் இதில் நிலம் எங்குள்ளது என்பதனை அறியேன். நமது உடலில் நிலம் எங்குள்ளது? அதனை எவ்வாறு பராமரிப்பது என்பதனை தாங்களே விளக்கி அருள வேண்டுகிறேன்” எனப் பணித்தான். யோகியார் புன்முறுவல் பூத்த படியே விளக்கத் தொடங்கினார்.

2

“மன்னா, நமது உடலில் உள்ள உறுப்புகள் யாவிலும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் நிறைந்துள்ளன. ஆயினும் உறுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் ஒவ்வொரு பூதத்திற்கும் இரண்டு உறுப்புகள், நம் உடலில் அந்த பூதத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன. இவ்விரு உறுப்புகளின் இயக்கம் முன்னர் நீர் அறிந்து கொண்ட அகார, உகார, மகார தத்துவங்களின் அடிப்படையில் அமைகின்றது. இரு உறுப்புகளில் ஒன்று அகாரம் எனும் கரு உறுப்பாகவும், மற்றொன்று உகாரம் எனும் உரு உறுப்பாகவும் உள்ளது. இவற்றில் உயிராகிய மகாரம் திருவாக மறைந்து நின்று இயங்குகின்றது.

அகாரம் படைப்புக்கு ஆதாரமாய் திகழ்வதைப்போல கரு உறுப்பு அந்த பூதத்தின் செயல்பாட்டிற்கு ஆதாரமாய் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. உரு உறுப்பானது அந்த பூதத்தின் செயல்பாட்டில் அடுத்த கட்ட உப செயல்களை புரிகின்றது. இவை மட்டுமில்லாமல் ஒவ்வொரு பூதத்திற்கும் தனிப்பட்ட உப உறுப்புகள், உணர்வு உறுப்புகள், நிறம், சுவை, புலன் என தனித்தனியே அமைந்துள்ளது. நிலம் என்கிற பூதத்தின் குணாதிசயங்களை வகைப்படுத்தி கூறுகிறேன் நன்கு கவனியுங்கள்.

கரு உறுப்பு- மண்ணீரல், உறு உறுப்பு – வயிறு, உணர்வு உறுப்பு – உதடுகள், உப உறுப்புகள் எலும்பு மஜ்ஜை, பல்ஈறுகள், மேல் வயிறு, தசைகள், நடுமுதுகு, தசை நார்கள், நிறம்-மஞ்சள், சுவை – இனிப்பு, காலம் – முதுவேனில்காலம், உணர்ச்சி – கவலை, திசை – மையம், ஆதாரம் – சுவாதிஷ்டானம் என யோகியார் விளக்கினார். இவற்றை கேட்ட மன்னன் ஏதும் புரியாமல் திகைத்தான். “அய்யனே, தாங்கள் கூறும் இந்த தத்துவங்கள் மற்றும் பஞ்சபூத இயல்புகள் யாவும் எமக்கு புதியவை. இவை எந்த வகை மருத்துவம் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா என வினவினான்.

மன்னனின் திகைப்பை புரிந்து கொண்ட யோகியார் மன்னனுக்கு பின்வருமாறு விளக்கினார். “மன்னா, யாம் கூறும் இந்த தத்துவங்கள் படைப்பின் மூல தத்துவம் ஆகும். இத்தத்துவங்கள் தான் இப்பிரபஞ்சம், பூமி, உயிர்கள் யாவற்றிலும் நிறைந்துள்ளன. இத்தத்துவங்கள் சித்தர்களின் நுண்ணிய மெய் அறிவின் சாரமாகும். யோகக் கலையில் சிறந்து விளங்கிய சித்தர்கள் தம்முள் ஆராய்ந்து கண்ட உண்மைகள் இவை. மனிதர்கள் யாவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய உன்னத உண்மைகள். இப்பொழுது நான் உமக்கு உபதேசிக்கும் இம்மருத்துவக்கலை இரு பெரும் பழம் கலைகளின் சங்கமம் ஆகும். மக்கள் யாவருக்கும் உதவிடும் வகையில் மிகவும் எளிமையான, அதே சமயம் ஆழ்ந்த தத்துவமும், மெய்ஞானமும், விஞ்ஞானமும் நிறைந்த ஞான மருத்துவக்கலை ஆகும்.

இம் மருத்துவக்கலை இறைவன் எமக்கு அறிவுக்கண்ணில் அளித்த அருட்கொடை ஆகும். ஆழ்ந்த தவத்தில் எமக்கு கிட்டிய ஞானமுத்துக்கள் இவை. தாம் முன்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்குயோகா எனும் இப்புதிய கலையை உமக்கும் உலகுக்கும் அளிக்கின்றோம். குத்தூசி மருத்துவம் எனும் அக்குபஞ்சர் போகர் பெருமானின் அற்புத மருத்துவ கலை ஆகும். இது சீன தேசத்தில் நெடுங்காலமாய் விளங்கிவரும் அற்புதக்கலை.

யோகம் என்பது நமது தமிழ் மரபில் தொன்றுதொட்டு அகத்தியர் முதலாய் பல்வேறு சித்தர்கள் வளர்த்து வரும் அதி உன்னத கலை ஆகும். இவ்விரு கலைகளையும் ஒருங்கே அமைத்து இறைவன் எமக்கு வழங்கிய இக்கலையை உலக நன்மைக்காக தமக்கு அளிக்கின்றோம். இதனை புரிந்து கொள்வதும், பயன்படுத்துவதும் மிக எளிது ஒரே நாளில் எவர் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு வெற்றி பெரும் அளவுக்கு எளிமையான மருத்துவம். அதே சமயம் எவ்வித நோயையும் தீர்க்கும் ஆற்றலும், வல்லமையும் பெற்றுள்ளது. இக்கலையை படிப்படியாக உமக்கு விளக்குகிறேன் எனக்கூறி முடித்தார் யோகி.

இதனைக் கேட்டு மனம் நெகிழ்ந்த மன்னன் ஆனந்தத்தில் திளைத்தான். “அய்யனே, தாம் அளிக்க உள்ள இந்த ஞான மருத்துவக்கலையாகிய அக்குயோகாவினை ஆவணப்படுத்தி இந்த உலகுக்கு அர்ப்பணிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றுவேன்.

மேலும் அதனை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக்கும் அரசாணையும் பிறப்பிக்கிறேன்” என வாக்களித்தான். இதனால் மனம் நெகிழ்ந்த யோகியார் அக்குயோகாவின் விளக்கத்தை தொடர்ந்தார்…

3

Leave A Reply

Your email address will not be published.