உயிர் வளர்ப்போம் – தொடர் 4 (கதைவழி மருத்துவம்)

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0

குளிர்ச்சியான அந்த காலை வேளையில் யோகியும், மன்னரும் தந்தசுத்தி செய்து கொண்டிருந்தனர். இந்த அடர்ந்த வனத்தில் வாய் கொப்பளிக்க வெதுவெதுப்பான நீருக்கு எங்கே போவது என மனம் எண்ணியது. அவனது மனவோட்டத்தை புரிந்து கொண்ட யோகி, அவனிடம், “மன்னா, அந்த பாறையின் பின்புறம் ஒரு நீர் ஊற்று உள்ளது. அங்கு சென்று தந்த சுத்தியை நிறைவு செய்யலாம் வாருங்கள்” என அழைத்தார்.

அந்த பாறையின் பின்புறம் இருந்த அந்த சிறிய ஊற்றில் உள்ள நீரை கையால் அள்ளிய மன்னனுக்கு ஒரே ஆச்சரியம் அந்த நீர் வெது வெதுப்புடன் இருந்தது.

“அய்யனே, இது என்ன அதிசயம்? நீர் வெதுவெதுப்புடன் இருக்கிறதே” என்று வினவினான்.

அதற்கு யோகியார் “மன்னா இது வெந்நீர் ஊற்றாகும், பூமியின் சில பகுதிகளில் நெருப்பு ஆதிக்கம் அதிகம் இருக்கும், இம்மாதிரியான பகுதிகளில் அதிசயமான இம்மாதிரியான ஊற்றுகளின் நீர் வெதுவெதுப்புடன் திகழும். இந்த ஊற்றைக் கண்டு இவ்வளவு ஆச்சரியம் கொள்கிறீரே இதனை விட அதிசயிக்கத்தக்க ஒரு ஊற்றினை உமக்கு என்னால் காட்ட இயலும் என்றார்.

இதைக்கேட்ட மன்னனுக்கு மேலும் ஆச்சரியம், “இதனினும் அதிசயமான ஊற்றா? அதனை காண்பியுங்கள், அய்யனே” என வேண்டினான் மன்னன். ஒன்றென்ன பல ஊற்றுக்களை காட்டுகிறேன்” எனக் கூறிய யோகியார் சிரித்தபடியே மன்னரின் வயிற்றை நோக்கி தன் சுட்டு விரலை நீட்டிக் காண்பித்தார்.

இதனைக் கண்ட மன்னன், “ அய்யனே, தாம் அதிசய ஊற்றை காட்டுகிறேன் எனக் கூறினீர்களே?” என ஏதும் விளங்காதவரைப்போல் வினவினான்.

இதைக்கேட்டு கடகடவென சிரித்த யோகியார், “மன்னா, நான் உமது வயிற்றைத்தான் அதிசயமான ஊற்று எனக் கூறுகிறேன். இந்த வயிறானது உடலில் உணவின் தேவைக்கு ஏற்ப சீரான நீரை சுரக்கும் அற்புத ஊற்றாகும். நாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதனை கரைப்பதற்கு தக்கவாறு சீரான நீரின் தன்மையை மாற்றிக்கொள்கிறது. இது போன்று நம் உடலில் பல அதிசயங்கள் உள்ளன” என விவரித்தார்.

மன்னனும் உடலின் அற்புதங்களை எண்ணி வியந்தவாறே தந்த சுத்தி செய்து முடித்தான். அடுத்து யோகியார் என்ன செய்ய இருக்கிறார் என கவனிக்கலானான்.

மௌன யோகி அடுத்தபடியாக தனது கமண்டலத்தில் நீரை சிரத்தையுடன் பருகினார். தான் பருகியதோடு நில்லாமல் மன்னனுக்கும் கொடுத்து பருகப்பணித்தார்.

யோகியார் அறிவுறுத்தியபடி நீரை கையில் வாங்கிய மன்னன், “அய்யனே இது என்ன நீர், மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறதே” எனக் கேட்டான். யோகியார் புன்முறுவல் பூத்தபடியே, “மன்னா, இது குடல் சுத்தி செய்யப்படும் நீராகும். நான் கூறிய ஐந்து சுத்திமுறைகளில் இரண்டாவது குடல் சுத்தி. இதனை செய்வதற்கு முதல்நாள் இரவு இரண்டு குவளை (300 – 400ml) நீரை நன்கு கொதிக்க வைத்து, முழு கொதி நிலையில் நமது உள்ளங்கையினை நன்கு விரித்து, உள்ளங்கையில் பள்ளம் நிறையும் அளவு சீரகத்தினை கொதிக்கும் நீரில் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைத்துவிட வேண்டும்.

காலை எழுந்து தந்த சுத்தி செய்த உடன் இந்த நீரினை சிரத்தையுடன், குவளையில் இரு உதடுகளையும் பதித்து உறிஞ்சி பருக வேண்டும். அதன் பின்னர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து முதுகு தண்டினை நேராக வைத்துக் கொண்டு, வாயை நன்கு திறந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் வயிறுப்பகுதியை நன்கு உள்ளுக்கு இழுத்து வெளித்தள்ள வேண்டும். வயிறை உள்ளே இழுக்கும் பொழுது மூச்சுக்காற்று தானாக வாய் வழியே வெளியேறும். வயிறை வெளித்தள்ளும்பொழுது மூச்சுக்காற்று தானாக உள்வாங்கப்படும்.

இவ்வாறு வயிறை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதுமாக பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும். பத்து நிமிட நேரமும் மூச்சு தானாகவே உள்ளிழுக்கப்பட்டு வெளித்தள்ளப்பட வேண்டும். இந்த பத்து நிமிடங்களில் முதல் நான்கு நிமிடங்கள் வயிறை மிகமிக மெதுவாகவும், ஒரே சீராகவும் இயக்க வேண்டும். அடுத்த மூன்று நிமிடங்கள் மித வேகத்தில் இயக்க வேண்டும். கடைசி மூன்று நிமிடங்கள் அதிவேகமாக இயக்குதல் வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் ஐந்து நிமிடங்கள் அதே நிலையில் ஓய்வாக அமர்ந்து ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது உடலில் இருந்து மலம் வெளியேறி விடும். உடலில் தேவைற்ற கொழுப்பு நீங்கிவிடும். உடல் பருமன் உள்ளவர்கள் விரைவாக நல்ல அழகிய உடவாகினை பெறுவார்கள்” என்று விளக்கினார்.

நீரை பருகிவிட்டு யோகியார் கூறியது போல குடல் சுத்தி செய்ய தொடங்கிய மன்னனுக்கு ஒரே ஆச்சரியம். உடனடியாக மலம் கழிக்கும் உணர்வு மேலிட்டது. வெகு நாட்களாய் மலச்சிக்கலில் அவதியுற்று வந்த மன்னனுக்கு இப்பயிற்சி முறை பேருதவி புரிந்தது. குடல் சுத்தி முடித்துவிட்டு வந்த மன்னரின் முகத்தில் நிம்மதியும், சந்தோசமும் குடிகொண்டது.

மன்னனின் முகத்தை கண்ட யோகி, “மன்னா, மலச்சிக்கல் நீங்கினால் மனச்சிக்கலும் நீங்கிவிடும், மனதில் அமைதி நிலவும். உமக்கு மூன்றாவது சுத்தி முறையை விளக்குகிறேன். இதன் பெயர் கபசுத்தி என்பதாகும். இதனை செய்யும் முறையாவது, நன்கு குனிந்தபடி முகத்தை ஆகாயத்தை பார்த்தபடி உயர்த்திக் கொள்ள வேண்டும். வலக்கையில் சிறிதளவு நீரை எடுத்து, இரு நாசித்துவாரங்களிலும் நன்கு நாசிக்குள் புகும்படி வேகமாக நீரினை வீசியடித்து கழுவ வேண்டும். இரு நாசிகளின் உட்புறமும் நன்கு நனைத்த பின்னர் இடக்கையால் நாசியை சீறிவிட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மூன்றுமுறை செய்ய வேண்டும்.

இதன்பின்னர் வாயினுள் வலக்கை கட்டை விரலின் உட்பகுதியை செலுத்தி அன்னாக்கு பகுதியை நன்கு தேய்க்க வேண்டும். அப்படி தேய்கும்பொழுது மண்டை சளி, நெஞ்சு சளி, தொண்டை சளி இம்மூன்றும் வெளியேறும். கட்டைவிரலை அங்கு செலுத்துவது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால் சிறிது நெய் அல்லது எண்ணய் கட்டை விரலில் தடவி கொள்ளலாம்.

கட்டை விரலை வலப்புற சுழற்சியாக அன்னாக்கை சுற்றி ஆறுமுறை, இடப்புற சுழற்சியாக அன்னாக்கை சுற்றி ஆறுமுறையும் தடவ வேண்டும். ஆரம்பத்தில் சிரமம் இருக்கலாம். நாள் செல்ல செல்ல பழகிவிடும். தடவிய பின்னர் வெளியேறும் கபத்தை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஐந்து முறை செய்தால் கபசுத்தி பூர்த்தியாகிவிடும்.

இதனைக் கேட்ட மன்னன் யோகியார் கூறியது போலவே கபசுத்தி செய்தான். நிறைய சளி வெளியேறியதை கவனித்தான். அதன்பின் மூச்சு தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்தான்.

கபசுத்தி முடிந்த பின்னர் நேத்திர சுத்தி செய்ய யோகியார் மன்னனை அழைத்து சென்றார். அங்கு ஒரு மண்குவளை நிறைய நீரும் சில பூக்களும் இருந்தன. இது என்ன என வினவினான் மன்னன் அதற்கு யோகியார்.
“மன்னா, இது நேத்திர சுத்தி முறைக்கு பயன்படும் நீர் ஆகும். முதல்நாள் இரவு இயற்கையில் இருந்து பெறப்படும் நீரை ஒரு மண்பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நீரில் 4-5 நந்தியாவட்டை பூக்களையோ அல்லது பன்னீர் பூக்களையோ போட வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒரு பூவைத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்தல் கூடாது. பூக்களை போட்ட பின்னர் அப்பாத்திரத்தின் வாயை ஒரு வெள்ளை துணியால் தூசி விழாதபடி கட்டி வானம் பார்த்தபடி வைக்க வேண்டும்.

இரவு முழுவதும் பனி பொழிவு மற்றும் இரவின் குளிர்ச்சி அந்த நீரில் உள்வாங்கப்படும் அப்படி உள்வாங்கப்பட்ட அந்த நீரில் மூச்சினை நிறை இழுத்து பிடித்தபடி முகத்தினை அழுத்திக்கொண்டு கண்களை நன்கு அகல திறந்து கொள்ள வேண்டும்.

கருவிழியை வலப்புறமாக ஆறுமுறையும், இடப்புறமாக ஆறுமுறையும் நன்கு சுழற்ற வேண்டும். அதன்பின் கண்களை ஆறுமுறை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இது ஒரு சுற்று ஆகும். இவ்வாறாக ஐந்து சுற்றுக்கள் செய்ய வேண்டும். இதுவே நேத்திர சுத்தி முறை ஆகும்.
தாங்கள் இக்குவளையில் உள்ள நீரை பயன்படுத்தி நேத்திர சுத்தி செய்யுங்கள் என கூறியபடியே வேறொரு குவளையில் பாதிநீரை தனக்காக ஊற்றிக்கொண்டார் யோகியார். இருவரும் நேத்திரசுத்தி செய்து முடித்தனர்.

இதனை செய்து முடித்த பின்னர் கண்கள் தெளிவாக பிரகாசமுடன் பார்வை துல்லியம் அடைந்துள்ளதை கண்டு மன்னன் வியந்தான். மேலும் கண்கள் நல்ல குளிர்ச்சியுடன் விளங்கின. இதன்பின் யோகியார் மன்னனுக்கு ஐந்தாவது சுத்தி முறையை விளக்க தொடங்கினார்.

இன்னும் பயணிப்போம்…

Leave A Reply

Your email address will not be published.