உயிர் வளர்ப்போம் – தொடர் 3 (கதைவழி மருத்துவம்)

நீங்கள் இதுவரை படித்திராத தொடர்

0

அரசனின் மனதில் ஒரு உன்னத யோசனை தோன்றியது. அற்புதமான இந்த உயிர் வளர்க்கும் உயிர் மருந்து கலையை அனைவரும் கற்றுக் கொண்டு பயன் பெற்றால் நன்றாக இருக்குமே என சிந்திக்கலானான்.

பணிவுடன் யோகியிடம் அய்யா மிக உயர்ந்த விளக்கங்களை அளித்து எங்கள் சிந்தை தெளிவுற செய்தீர்கள். தங்களை சில காலம் அரண்மனைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்து இன்னும் பல அரிய உண்மைகளை எங்களுக்கு தெளிவுபடுத்தி அருள வேண்டுகிறேன். மேலும் எமது இராஜ்ஜியத்தில் தங்களை போன்ற ஒருவர் இருப்பது இறைவன் எமக்கு அளித்த வரமாக கருதுகிறோம். தங்களை கவுரவப்படுத்துவது எனது பெருமை மட்டுமல்ல என் கடமையும் கூட தயவு செய்து தங்கள் பொற்பாதங்களை எமது அரண்மனையில் பதித்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டுகிறேன் என்றான்.

மன்னனின் அன்புக்கு கட்டுப்பட்டவராய் யோகியும் மன்னருடன் வர தம் இசைவை தெரிவித்தார்.

அரண்மனைக்கு கிளம்ப ஆயத்தமான யோகி நீராடிவிட்டு வருவதாக கூறினார். நீராட எங்கு செல்கிறீர்கள் என கேட்டான் மன்னன். மன்னா இங்கிருந்து சற்று தொலைவில் ஆகாய கங்கை உள்ளது. அங்கு செல்கிறேன் என்றார் யோகி. அப்படியா, இயற்கையான சூழலில் நீராடி வெகு நாட்கள் ஆகிவிட்டது, அய்யனே நானும் தங்களுடன் வருகிறேன் எனக் கூறி தானும் உடன் சென்றான் அரசன். கற்கள் நிறைந்த ஒரு காட்டுப்பாதையில் இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது யோகியார் பாதுகை ஏதும் அணியாமல் கற்களின் மேல் நடந்து வருவதை மன்னன் கவனித்தான். யோகியிடம் அய்யனே, தாங்கள் பாதுகை ஏதும் அணியாததன் காரணம் என்ன? என வினவினான். அதற்கு யோகியார் “மன்னா, நாம் வாழும் இந்த இயற்கையில் அனைத்தும் இரண்டாகவே உள்ளது. காண்கிற அனைத்தும் இரண்டின் கூட்டணிதான். வானம்-பூமி, இருள்-ஒளி, ஓசை-அமைதி, ஆண்-பெண் என யாவும் ஜோடியாகவே உள்ளன.

இந்த ஜோடிகள் அனைத்திற்கும் மூலமாக இறைவன் விளங்குகிறான். இதுவே முட்பொருள் உண்மை ஆகும். இரண்டு ஜோடிகளின் ஒன்று அசைவற்றும் மற்றது அசைவுடனும் விளங்குகிறது. இதில் இறை மறை பொருளாக உள்ளது. இதுவே தமிழின் ஆனிவேர்.

“அ” எனும் அகாரம் உதடு அசைவற்ற ஓசை
“உ” எனும் உகாரம் உதடு அசைவுள்ள ஓசை
“இ” எனும் இகாரம், ஆகாரத்துக்கும், உகாரத்துக்கும் இடையே மறை பொருளாக மறைந்து உள்ளது.
ஓம் – அ – உ – இம்
ஆமீன் – அ – உ – இ

இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் தமிழின் முதல் மூன்று உயிரெழுத்துக்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்த உடல் – உயிர் – ஆன்மா ஆகிய மூன்றும் முட்பொருளாய் விளங்குகின்றன. பூமியில் இருந்து வந்த உடலும், விண்ணில் இருந்து வந்த உயிரும், இறையிடமிருந்து பெற்ற ஆன்மாவும் இணைந்த முப்பொருளே மனிதன்.

எனவே பூமியிலிருந்து பெறப்பட்ட உடலுக்கு புவியின் தொடர்பு தேவை, இது இரு பாதங்கள் வழியாகவே நமக்கு கிடைக்க பெறுகிறது. பாதுகை அணியாமல் காலை மாலை வேளைகளில் காலாற இரு பாதங்களும் பூமியில் நன்கு பதியும்படி நடக்கும் பொழுது புவியின் ஆற்றல் பாதங்கள் வழியாக உடலுக்கு கிடைக்க பெறுகிறது. அவ்வாறே தலை மற்றும் இரு கைகள் வழியே விண் ஆற்றல் உடலுக்குள் பாய்ந்து உயிரை வலுப்படுத்துகிறது. இவ்விரு ஆற்றல்களும் ஒன்றிணையும் இடமே நமது நாபிகமலம்(தொப்புள்) ஆகும். ஆக நம் உடலில் உச்சி, இரு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், தொப்புள் மற்றும் தொப்புளின் பின் உள்ள முதுகு பகுதி ஆகிய இந்த இடங்கள் முக்கியத்துவம் உள்ளவை.

இரவு நேரங்களில் உறங்க செல்லும் முன் உடலின் இந்த 7 இடங்களில் சுந்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை சிறிதளவு எடுத்து நன்கு தடவி அழுத்தம் கொடுத்து வர உடலின் பெரும்பாலான பாதிப்புகள் சீரடையும், உடலும் குளிர்ச்சி பெறும். என விளக்கினார் யோகி.

யோகியின் ஆழ்ந்த விளக்கத்தையும் ஆரோக்கியம் குறித்த போதனைகளையும் செவிமடுத்தபடியே நடந்ததில் ஆகாய கங்கையை அடைந்தது. தூரம் பெரிதாக தெரியவில்லை மன்னனுக்கு. தான் செவியுற்றதை இன்று முதல் நடைமுறை படுத்துவது என முடிவெடுத்த மன்னன் தன் பாதுகைகளை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலுடன் நடந்து ஆகாய கங்கையை அடைந்தான்.

அங்கு யோகியார் தன் கச்சையில் இருந்து ஒரு குப்பியை எடுத்தார். அதனுள் இருந்த ஒரு பொடியை தானும் கைகளில் கொட்டிக் கொண்டு மன்னருக்கும் கொடுத்தார். அதனைக் கொண்டு தந்த சுத்தி செய்து கொள்ளுமாறு மன்னனை பணித்தார். மன்னன் ஒன்றும் புரியாதவனாய் அய்யனே அது என்ன தந்த சுத்தி மேலும் தாம் அளித்துள்ள இந்த பொடி எதற்கு என கேள்விகளை அடுக்கினான்.

புன்முறுவல் பூத்த யோகி மன்னரிடம், தந்தம் என்றால் பல் என அர்த்தப்படும். பற்களை சுத்தப்படுத்துவதே தந்த சுத்தியாகும். தம் கையில் உள்ள பொடி தந்தசுத்தி சூரணம் ஆகும். இதனைக் கொண்டு காலை மாலை இரு வேளையும் பல்துலக்கி வர பற்களும், ஈறுகளும் உறுதியுடன் விளங்கும். வளமுடன் காலமுழுவதும் பற்கள் நிலைத்திருக்கும். இதன் தயாரிப்பு முறையை உமக்கு விளக்குகிறேன். வேப்பம்பட்டை பொடி, கருவேலம்பட்டை பொடி, ஆலம்பட்டை பொடி, நாயுருவி வேர் பொடி, கடுக்காய் தோல் பொடி, ஆகிய ஐந்தையும் சமபங்கு எடுத்துக்கொள்ளவும்.
இந்த ஐந்தின் மொத்த அளவில் 4ல் 1 பங்கு இந்துப்பையும், 8ல் 1 பங்கு கிராம்பையும் பொடி செய்து கலக்கவும். இக் கலவையே தந்த சுத்தி சூரணம் ஆகும். இதனை பஞ்ச மூல லவன சூரணம் எனவும் அழைப்பர்.

இதனை உபயோகிக்கும் முறையாவது, முதலில் வாயை மூன்று முறை வெறும் விரல்களைக் கொண்டு சுத்தம் செய்து மூன்று முறை நன்கு கொப்பளிக்கவும்.

அதன்பின் இப்பொடியைக் கொண்டு ஈறுகள், பற்கள், கடைவாய் நாக்கு, மேல் அன்னம், வாயின் உட்புறம் வெளிப்புறம் என நன்கு தேய்த்தல் வேண்டும்.

தேய்க்கும் பொழுது ஊறி வரும் உமிழ் நீரை உமிழ்ந்து விடாமல் நன்கு தேய்த்து முடித்த பின்னர் உமிழ வேண்டும். இதனையும் மும்முறை செய்ய வேண்டும். இதன் பின்னர் வெதுவெதுப்பான் நீரினைக் கொண்டு வாயை நன்கு தேய்த்து கொப்பளித்தல் வேண்டும்.

தந்தசுத்தி முறையை போன்று இன்னும் 4 சுத்தி முறைகள் உள்ளன. இதனை பஞ்ச சுத்தி என அழைப்பர். ஒருவர் திடமான உடலுடன் ஆரோக்கியமாய் விளங்கிட அன்றாடம் இந்த பஞ்ச சுத்தி முறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என விளக்கினார் யோகி.
இதைக்கேட்ட மன்னன் அய்யனே நாங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வழி வகுக்கும் மீதமுள்ள நான்கு சுத்தி முறைகளை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் என வேண்டுகோள் விடுத்தான்.

அவசியம் கூறுகிறேன் மன்னா அதற்கு முன் நாம் தந்த சுத்தி செய்து கொள்வோம் வாருங்கள் என்றார் யோகி. மன்னனும் யோகியாரின் அறிவுறுத்தல்படி தந்த சுத்தி செய்ய தொடங்கினான். அவனது மனதில் மீதமுள்ள 4 சுத்தி முறைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியாய் இருந்தது.

வாசகர்களே, பஞ்ச மூல லவன சூரணம் தயாரிக்க தேவையான பொருட்களின் அளவு பின்வருமாறு:

பஞ்ச மூல லவன சூரணம்
வேப்பம்பட்டை பொடி 50 கிராம்
ஆலம்பட்டை பொடி 50 கிராம்
கருவேலம்பட்டை பொடி 50 கிராம்
நாயுருவி வேர்பட்டை பொடி 50 கிராம்
கடுக்காய் தோல் பொடி 50 கிராம்
இந்துப்பு பொடி 62.50 கிராம்
கிராம்பு பொடி 31.2 கிராம்

தொடரும்

Leave A Reply

Your email address will not be published.