ஏழைகளின் பசியாற்றும் பாரதி

0
Full Page

“கல்யாணம் செய்துக்கிட்டா, மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை மாறினால், பசிக்கு ஏங்கி நிற்கும் இவர்களைக் கவனிப்பது ரொம்ப சிரமம். அதனால் கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்தேன்” என்கிறார் தினமும் ஆதரவற்ற நூறு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடும் திருச்சி பீமநகரைச் சேர்ந்த பாரதி.

மதியம் 12, பாரதியின் வீட்டுத் திண்ணையிலும் வீட்டு வாசலில், முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக வந்து அமர்கிறார்கள். சரியாக மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட அழைக்கிறார் பாரதி.

சின்னஞ்சிறு அறையில், வாழை இலை போட்டு இனிப்புடன் உயர்ரக அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை எனத் தினமும் விருந்து போல சாப்பாடு தருகிறார். அங்கு வரும் ஒருவரைப் பார்த்ததும், மொத்தக் கூட்டமும் பாசமாக நகர்கிறது. பார்வையற்றவர்களை பார்த்துப் பார்த்து கவனிக்கிறார்.

நம்மைப் பார்த்ததும் இதோ வருகிறேன் எனக் கூறிய பாரதி, படையலிட்டார். ஏன் மூன்று மணி வரைக்கும் சாப்பாட்டை பரிமாறினாலும் மனுசன் சளைக்கவே இல்லை.

“ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர் பலர் சந்தோசமாக சாப்பிட்டுவிட்டுச் சென்றதை காண முடிந்தது.
நம்மிடம் பேசிய பாரதி, “இப்போ இல்லைங்க. சின்ன வயசில் இருந்தே என்னால முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யனும்னு நினைப்பேன். அதன் தொடர்ச்சியாக ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன்.

குடும்பச் சூழல் காரணமாக, படிப்பை முடித்தவுடன், வீடுகளில் இன்னர் டெக்ரேட்டர் தொழில் செய்தேன். தொழிலில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில் அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க.பெற்றோரை இழந்த எனக்கு மனசெல்லாம் பாரமாக இருந்தது. நிறையப் பிள்ளைகள் இருந்தும், ஆதரவில்லாமல் பெற்றோர் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தது எனக்கு மிகப்பெரிய உறுத்தலை உண்டாக்கியது.

Half page

அடுத்து நான், சம்பாதிக்கும் பணத்தில் பார்க்கும் நபர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு கடந்த 2004ல் இருந்து முழுநேரமும் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தருகிறேன். வீடு எனக்குச் சொந்த வீடு என்பதால், சிக்கல் இல்லை.

என்னுடைய முயற்சி எனக்குத் தந்த மனநிறைவால் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்னு முடிவெடுத்தேன். கல்யாணம் செய்துக்கிட்டா, மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை மாறினால், இவர்களைக் கவனிப்பது ரொம்ப சிரமம். அதனால் கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்தேன்.

வீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் இரண்டு அறைகளை உணவு கொடுப்பதற்காகவே ஒதுக்கி விட்டேன். தற்போது, ஒரு அறையில் சமையல். இன்னொரு அறையில் சாப்பாடு பரிமாறப் பயன்படுத்தி வருகிறேன்.
நான் 2004ல் உணவு பரிமாற ஆரம்பித்ததில் இருந்து புஷ்பவள்ளி அம்மாதான் சமைக்கிறார். தினமும் நூறு பேருக்கு மேல் சாப்பிடுவார்கள்.. மதியம் மூன்று மணிக்கு உணவு தீர்ந்துவிடும்.

அதன் பிறகு யாராவது வந்தால்கூட உடனே அடுப்பைப் பற்றவைத்து சமைத்துக் கொடுப்போம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின்போது சாப்பிட வரும் முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புடன் உணவு வழங்குவோம். என்னோட சேவையைப் பார்த்த நண்பர்கள் பலர் உதவி செய்கின்றனர். சிலர் தங்களது பிறந்தநாள் வந்தால், இந்த மனிதர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

இங்கே வரும் எல்லோரும் என் பெற்றோர்களாகவே கருதுகிறேன். இந்த 13வருடங்களாக இந்தச் சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன். இனியும் செய்வேன் ” என்றார் பாசமாக.

பாரதி உண்மையிலேயே நாம் கண்ட நிஜ பாரதி.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.