மும்பை தமிழ்ச் சங்கத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற திருச்சி சத்தியசீலன்

மும்பை தமிழ்ச்சங்கம் தமிழுக்கும் தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கும் கடந்த 78 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி வருகிறது.
அந்த வகையில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்தொண்டாற்றி வரும் “கலைமாமணி” “சொல்லின் செல்வர்” சோ.சத்தியசீலன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இருப்பது போற்றுதலுக்குரியது. எளிய தோற்றம், இனிய பண்பு, அனைவரையும் ஈர்க்கும் குணம், அனைவரையும் ஈர்க்கும் கருத்தாழமிக்க பேச்சு, ஆழ்ந்த இலக்கிய அறிவு இவற்றின் உருவமே சத்தியசீலன்.
“கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்”

என்ற குறளுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

சங்க, சமய, சமூக இலக்கியங்கள் ஆகிய அனைத்திலும் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து நயத்துடன் கூறும் இவரது ஆற்றல் கேட்போரை வியக்க வைக்கிறது.
இவரது தமிழ் இலக்கிய திறமைகளை இனங்கண்டு வழிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அளித்து அவரை உருவாக்கிய பெருமை தமிழ் பேராசிரியர் அமரர் இரா.ராதாகிருஷ்ணன் அவர்களையே சாரும். ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றி, அனைவரிடத்திலும் இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்தியவர்.

60 ஆண்டுகளுக்கு முன் இலக்கிய சொற்பொழிவுகள் மிகுந்து இருந்த காலத்தில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற புதிய உத்திகள் தோன்றியிருந்த நேரத்தில், அவற்றை முறைப்படுத்தி நிலைக்க வைத்த பெருமை சத்தியசீலன் அவர்களையே சாரும். சோ.சத்தியசீலன், அ.அறிவொளி, அ.வ.ராசகோபாலன் இவர்களின் வழக்காடு மன்றங்களில் சத்தியசீலன் வழங்கியது வெறும் தீர்ப்பல்ல அது ஒரு தீர்வு என்கின்றனர்
இலக்கிய வல்லுநர்கள். இவர் படைத்த திருக்குறள் சிந்தனை முழக்கம், தெய்வீக தேன்துளிகள், அவிழ்க்கப்படாத முடிச்சுகள், கனிகள் இங்கே! விதைகள் எங்கே! போன்ற நூல்கள் தமிழ் இலக்கியத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
வடலூர் வள்ளலார் சன்மார்க்க நெறியில் இவர் ஈடுபாடு கொண்டதன் விளைவாக வள்ளுவரும் வள்ளலாரும், வள்ளலார் வழியில் போன்ற ஒலிப்பேழைகள் நமக்கு கிடைத்தன.
இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் உள்ள அமைப்புகளில் உரையாற்றி அனைவராலும் பாராட்டப்பெற்றவர்.
மும்பை நகரில் 1940-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ரா.பி.சேதுப்பிள்ளை,
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் இராதாகிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பனார், சாலமன் பாப்பையா போன்ற இலக்கிய வல்லுநர்கள் சங்கத்தில் உரையாற்றியுள்ளனர்.
2014-ல் பவள விழா கண்ட இச்சங்கம் கம்பர், இளங்கோ, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன், திருவள்ளுவர் என ஆண்டுதோறும் ஆறு விழாக்களை நடத்தி வருகிறது. 20 ஆயிரம் தமிழ்புத்தகங்களை தன்னகத்தே கொண்டது. 7,8,9 தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை நம் திருச்சி மாவட்ட நலநிதிக் குழு உறுப்பினருமான சத்தியசீலன் அவர்களுக்கு வழங்க உள்ளது.
