தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் வரலாறு

0
Full Page

ஆதிகாலத்தில் தொட்டியத்தை இசங்கராயன்,புசங்கராயன் என்கிற அண்ணன் தம்பிகள் ஆண்டு வந்தனர். அவர்களிடம் குதிரைகளை பாதுகாக்கும் வேலைகளை செல்லான் சாம்பான் என்பவன் செய்து வந்தான். ஒரு நாள் மதுரையிலிருந்து அவன் மைத்துனன் சின்னான் சாம்பானிடமிருந்து மதுரையில் உள்ள காளி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வருமாறு கடிதம் வந்தது.

செல்லான் சாம்பான் ராஜாவிடம் மதுரை செல்ல அனுமதி கேட்டான், அதற்கு ராஜா அவனிடம் மூன்று நாட்களுக்கு தேவையான 100 புல்கட்டுகளையும்,108 படி கொள்ளை வேக வைத்தும் கொடுத்துவிட்டு போகும்படி கூறினார். செல்லான் சாம்பான் ராஜா கூறியதை முடித்துவிட்டு புறப்பட்டு விட்டான். மதுரை செல்லும் போது தன்னுடன் மேளம், சால்ரா ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ஆற்றங்கரைக்கு சென்ற போது மழை அதிகமாகி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஒடக்காரன் அக்கரை அழைத்து போக இயலாது என கூற, தன்னிடம் இருந்த வெங்கலகட்டி என்னும் மேளத்தை தண்ணீரில் போட்டான். மேளம் ஓடமாக மாறியது, அதன் மேல் ஏறி அக்கரையை அடைந்தான்.

மதுரை மாநகர் சென்ற செல்லான் மாமனார் வீட்டில் தங்கி சின்னான் சாம்பானுடன் திருவிழாவில் மேளம் வாசித்தான். மதுரைகாளியும், மதுரை மக்களும் செல்லான் சாம்பான் மேளவாசிப்பை கேட்டு வியந்து, மகிழ்ந்து போனார்கள். செல்லான் சாம்பான் தொட்டியம் திரும்பி வரும்போது மதுரைகாளியும் வண்டு உருவிலே அவன் தோளிலே அமர்ந்து வந்தாள். பாதி தூரம் வந்ததும் கிழவியாக மாறி செல்லானுக்கு காட்சி தந்தாள்.

மேலும், ஜந்து வயது பெண்ணாகவும், ஏழு வயது பெண்ணாகவும்,மடிசார் உடுத்திய பெண்ணாகவும் செல்லானுக்கு காட்சி தந்தாள். செல்லான் நீங்கள் எல்லாம் யார்?எனக் கேட்க, காளியானவள் மதுரை மாநகர் காளி நான் தான், என் தங்கைகள் அழகுநாச்சி அம்மன், மாரியம்மன் இவர்கள் இருவரும் என்று கூறி, உன் மேள வாசிப்புக்கு மகிழ்ந்து உன்னோடு வந்தோம் என்றும் கூறி மறைந்தனர்.

செல்லான் சாம்பான் பிரமித்து போய் அவர்கள் நின்ற இடத்தை வணங்கி விட்டு ஊர் திரும்பினான். ஆனால் அவனை மூப்பெருந்தேவியரும் ஈர்ப்பு கொண்டு பின் தொடர்ந்து வந்தனர். வரும் வழியில் கெளத்தரசநல்லூர் எல்லையில் வன்னி மரம் நிழல் குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டதும் அங்குள்ள சங்கம்புதரில் தங்கினார்கள். அருகில் புற்றும் வளர்ந்து இருந்தது.
சிறிது காலத்திற்குபின் மதுரைகாளி கிழவி ரூபத்தில் தொட்டியம் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்க, இளநீர் பிடுங்கும் சாணர்கள் இளநீர் இல்லை என்று கூறினர். இதனால் மரத்திலிருக்கும்போதே அவருக்கு கண் தெரியாமல் போனது. வந்தது காளி என உணர்ந்து மன்னிப்பு கேட்டபின் கண்பார்வை பெற்று கீழே இறங்கி அம்மன் திருவிழாவிற்கு ஆயிரம் இளநீர் படைப்பதாக வாக்கு தந்து இன்றளவும் பங்குனி மாத தேர்த்திருவிழாவிற்கு இளநீர் கட்டப்படுகிறது.

இதேபோல வெற்றிலை கொடிங்கால் பயிர்களுக்கும் மதுரைகாளி கிழவி உருவத்தில் சென்று வெற்றிலை கேட்டு, அவர்கள் இல்லை என மறுக்க அவர்களுக்கும் கண் பார்வை பறிபோனது. பின் காளியிடம் மன்னிப்பு கேட்டபின் கண்பார்வையை பெற்றுள்ளனர். இவர்களும் திருவிழாவில் காளிக்கு வெற்றிலைகளை படைக்கின்றனர்.

கதம்பநார் செய்பவர்களும், கொசவம்பட்டி மற்றும் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் காளியின் விருப்பப்படி, திருவிழாவிற்கு ஆயிரம் மண்கலயங்களும், விளக்குகளும், தாழிகளும் பரம்பரைபரம்பரையாக கொடுத்து வருகின்றனர்.

Half page

வடக்கு பகுதியில் இருந்து கண்ணடியன் என்பவன் தொட்டியம் சங்கம் புதரருகே அமர்ந்திருந்தபோது காளி அவன் கனவில் தோன்றி தனக்கு நெய்வேத்தியம் படைக்குமாறு கூறியதால், அவன் தனக்கு கிடைத்த பொருள்களை வைத்து நைவேத்தியம் படைத்து வந்தான்.

ஒருநாள் அவ்வூர் ராசாவின் தம்பியான புசங்கராயன் குதிரையேறி வேகமாக வந்தபோது புற்று நிலைகுலைந்து போனது. புற்றிலுள்ள தெய்வங்கள் அவனையும் அவனது பரிவாரங்களையும் கல்லாக சபித்தது. ராசா இசங்கராயன் விவரமறிந்து அவ்விடம் வர சுவாமி கண்ணடியன் மீது இறங்கி அருள்வாக்கு கூறி இங்கு எனக்கு கோயில் கட்டி, முறைப்படி பூஜை செய்தால், என் புற்றை மிதிப்பதுபோல் வேகமாக வந்த உனது தம்பியையும் அவர்களின் பரிவாரங்களையும் மீட்டுத்தருவதாக கூறினாள்.

அவ்வாறே ராஜா செய்வதாக வாக்குக்கொடுக்க, அவர்கள் தம்பியர் மீது கண்ணடியன் விபூதியைத் தூவ அவர்கள் அனைவரும் உயிர்பிழைத்தனர்.
அரசன் கோவில் கட்டிக்கொடுத்தார். மதுரையில் இருந்து வந்த சிற்பிதான் கோயில் கட்டினார்.

அவரைத்தேடிவந்த அவரது மகன் கோயில் கர்ப்பகிரகத்தில் ஒரு குறை உள்ளதால் அதற்கு கர்ப்பகிரகத்தை வருடத்தில் எட்டுநாட்கள் காற்றுப்புகா வண்ணம், பூஜைகளை நிறுத்திவைத்துவிட்டு, அலங்காரம் இன்றி கதவு அடைக்கப்பட்டு, மறுநாள் ஆயிரம் பானை பொங்கல் வைத்து வழிபட வேண்டும் எனவும், எட்டுநாள் முடிவில் ஒரு சூல் கொண்ட ஆட்டை, கதவின் முன் நிறுத்தி கதவை திறந்தால் அந்த ஆடு தானாகவே காளிக்கு பலி ஆகிவிடும் என்றும், பின் திருவிழா முதலிய உற்சவங்களை செய்வதுதான் இந்த குறைக்கு பரிகாரம் என்றார். இன்றுவரை பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை கோவில் சாற்றுதல் நடைபெற்று வருகிறது.

கண்ணடியனுக்கு அருள்வந்து பங்குனி மாதம் திருவிழா நடத்தவும், 2 தேர்கள் கட்ட வேண்டும் எனவும், அதை தோளில்தான் எல்லோரும் தூக்க வேண்டும் என்றும் அம்மன் வாங்கு சொல்லியது.

அதன்படி பெரியதேரின் நீளம் 10 அடியும், அகலம் 6 அடியும் உயரம் 29 அடியுமாக நான்குவித அங்கனமாக அமைத்து அதில் பனைஓலையில் தனது உருவத்தை படைத்து இருபுறமும், மக்கள் காணுமாறு ஓலைப்பிடாரியாக வைக்குபடியும், சிறியதேரின் நீளம் 9 அடியும், அகலம் 7 அடியும் உயரம் 27 அடியாக இருக்கும்படி வைத்து அதில் செட்டி அம்மனை விக்கிரமாக அமைத்து வைக்கவும் அம்மன் அருள்வாக்கு கூறியது.

அதன்படி இன்று வரை இந்த தேர்கள் பதினெட்டுபட்டி கிராமமக்களாலும் ஒற்றுமையாக சேர்ந்து தூக்கி வலம் வருவது கண்கொள்ளாக்காட்சி.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக முதலில் பூச்சொரிதல் விழா மதுரைகாளியம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடுதல், கதவு அடைத்தல், அடைத்த கதவிற்கு ஆயிரம் பானை பொங்கல், கோவில் நடை திறத்தல், இரவு தலை அலங்காரம், தேர்கள் ஊர் சுற்றி வலம் வருதல், கிடா வெட்டுதல், வாணப்பட்டறைக்கு தேர் வந்து வாணவேடிக்கை, கோவிலுக்கு சென்றபின் எருமைக்கிடா வெட்டுதல், அம்மன் உதிரவாய்த்துடைப்பு, கோவில் உள்ளே குடிபுகுதல் என 15 நாட்களுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.