பெண்மை ஒரு தவம்…ஆணுக்கு கிடைத்த வரம்…

0
1 full

சிறந்த பள்ளி நிர்வாகி உஷா ராகவன்

உஷா ராகவன். திருச்சி வயலூர் செல்லும் பகுதியில் அமைந்துள்ள அமிர்த்தா வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியை. கடந்த 8 வருடங்களாக தனது சீரிய நிர்வாக திறமையால் பள்ளியை உயர்த்தியுள்ளார்.
20ஆண்டு ஆசிரியர் பணி. நமது கலாச்சாரம், பண்பாட்டின் மீதான ஆர்வம் பலதிறமைகள், வெற்றிகள் நோக்கி பயணிக்க தொடர்ந்து செயல்படத் தூண்டுகின்றது என்கிறார். தனது தந்தையின் பணிமாற்றங்கள் காரணமாக பயணித்த பயணங்கள் வாழ்வை வித்தியாச கோணத்தில் பார்க்க கற்றுக்கொடுத்தது என்றும் பெண்களின் நலனுக்காக யுகா அமைப்பிலும் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகிறார்உஷா ராகவன்.

சிறுகதை எழுத்தாளர் சீதா

2 full

சீதா. சிறுகதை எழுத்தாளர். பெண் கல்வி அவசியம், பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது என்கிறார். மேலும் ஆணுக்கு இணையாகவோ, ஆணை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கள் கல்வி கற்பது அவசியமாகிறது என்ற அவர், ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம். ஆனால், கல்வியோடு தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும், நம்மை பிறர் தாழ்வாக கருதவும், தாழ்வாக நடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்கிற மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

வீராங்கனை கிருத்திகா தேவி

கிருத்திகாதேவி திருச்சி கே.கே. நகரில் உள்ள எஸ்பிஐஓஏ பள்ளியில் படித்தேன். 11ஆம் வகுப்பின் போது பயிற்சியாளர் ராஜிவ்காந்தி கொடுத்த இறகு பந்து பயிற்சியால் வெல்கிறேன் என்கிறார். இன்று தேசிய அளவில் பதக்கம் வாங்கும் இவர் 2015ல் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார். 2016ல் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டியிலும் வெண்கலம் வென்றார். பெங்களுரில் நடைபெற்ற மூத்த வயதினருக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ரேங்க் பட்டியலில் இடம்பிடித்து உள்ளேன்.

நற்சிந்தனை ஆர்த்தி ஆனந்த்…

திருச்சி சண்முகா நகரில் ABC மாண்டசரி ப்ளே ஸ்கூல் 5வது ஆண்டில் வெற்றிகரமாக பயணிக்க காரணம் ஆர்த்தி ஆனந்த். தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அடிப்படைக்கல்வியின் மீதான அச்சாணி பிற குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிந்திக்க வைக்கிறது என்கிறார். எதிர்பார்த்து வரும் பெற்றோர்களின் எண்ண அலைகள் உள்வாங்காமல் உயரவே செய்வதாகவும், நல்ல திறமையான கல்வி செல்வங்களை உருவாக்கி அனைவரது ஆதரவையும் பெறச்செய்துள்ளார். பள்ளியில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்விதிறன் விளம்பரம் அல்லாமல் மற்றவர் செவிகளை சென்றடைய உதவியாய் உள்ளது என்கிறார் ஆர்த்திஆனந்த் .

முதுமைக்கு ஓய்வு கொடுக்கும் நீலாம்பாள் பாட்டி

திருச்சி உத்தமர் கோயில் ரயில்வே கேட் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரட்டியின் அருகே. உட்கார்ந்திருந்தார் 80வயதான நீலாம்பாள் பாட்டி. இவரது கணவர் ஆசிரியராக இருந்து சமீபத்தில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வரட்டி செய்து விற்று வாழுகிறார்.

தள்ளாத வயதில் உழைத்து வாழவேண்டும் என்று பேசிய அந்த பாட்டி நீலாம்பாள், “100 வரட்டி 150 ரூபாய்க்கு விற்கும் அதிலேயும் பேரம்பேசி குறைப்பாங்க. இந்த வரட்டியை வீடு குடி போக செய்யப்படும் யாகத்துக்கு. இறந்தவங்கள எரிக்கவும் வாங்கிட்டு போவாங்க. சமீபகாலமாக ரங்கத்து அய்யர்ங்க வாங்குவாங்க. மழை தண்ணி வந்தா வரட்டி விற்கும், மழை வர்றதே இல்லை எனக்கு பொழைப்பு குறைந்துபோச்சு. இதெல்லாம் விற்குதோ இல்லயோ வேலை வெட்டி செஞ்சாதான் உடம்பு நல்லாருக்கு சாமி. அதனால என்னால என்ன முடியுதோ அந்த வேலையை செய்து வருகிறேன் என்றார் தன்னம்பிக்கையோடு.

32 வருட பழமையான பலகாரக்கடை
“வெற்றிக் கதை சொல்லும்
வயதான தம்பதியினர்!”

உறையூர், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – பர்வதம் தம்பதியினர். இவர்களுக்கு மகேஸ்வரி, காயத்ரி, ஜெயம் என மூன்று பெண் பிள்ளைகள். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த கூடலூரை பூர்வீகமாக கொண்டவர்கள், திருமணமான பிறகு திருச்சியில் குடியேறியிருக்கின்றனர்.

“32 வருஷமா இந்த பலகாரக் கடையை நடத்திக்கிட்டு வர்றோம். இந்த கடையில நாங்க சம்பாதிச்ச பணத்தை வச்சி தான் என்னோட மூணு பெண்களையும் நல்லபடியா கல்யாணம் செய்து வைச்சோம்” என்ற பெருமித்தோடு பேச்சை ஆரம்பித்தார் பர்வதம்.

“இன்னைக்கு மிக்ஸி, கிரைண்டர்னு பல வசதிகள் இருந்தாலும், கையில தான் இன்னும் வடைக்கான மாவை ஆட்டுறோம். மாவு முடிஞ்சதுக்கு அப்புறம் கடையை காலி பண்ணிடுவோம். காசுக்காக மாவை போட்டு அங்க ஏனோ தானோன்னு ரெடி பண்றதுல்ல. அப்படி பண்ணுணா, பொருளோட தரம் சரியா இருக்காது. அடுத்த நாள் நம்மளை தேடி வரமாட்டாங்க” என செய்யும் தொழில் மீது தனக்குள்ள பக்தியையும், நேர்மையையும் சீனிவாசன் கூறினார்.

வரவு செலவுகளை நிர்வகிப்போம் மணிமேகலை

நாளிதழ் முகவராக இருக்கும் மணிமேகலை பேசுகையில், பகுதி நேரமாக தினசரி நாளிதழ்களை வீடு வீடாக சந்தாதாரர்களுக்கு விநியோகித்து வருகின்றேன். 25 வருடமாக இப்பணியினை மேற்கொண்டு வரும் நான் ஆயுள் காப்பீட்டு முகவராகவும் செயல்பட்டு வருகின்றேன். எனக்கு 2 மகள்கள், மூத்த மகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வருகிறார். இளைய மகள் மேல்நிலைக் கல்வியினை பயின்று வருகின்றார். விடுமுறை நாட்களில் வீடு வீடாக மகள்களும் நாளிதழ்களை விநியோகிக்கிறார்கள். பிரதி மாதம் சந்தா தொகையினை வசூல் செய்து எங்கள் வரவு செலவுகளை நிர்வகிப்போம் என்றார்.

பெண்களாலும் முன்மாதிரியாக வாழ முடியும் ராதாகணேஷ் புத்தக முகவர்

புத்தக முகவர் ராதாகணேஷ் பேசுகையில் பெண்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். நான் 2 மணிக்கு எழுந்து வீட்டு வேலை முடித்து காலை 4 மணிக்கு நாளிதழ், வார இதழ், புத்தகத்தினை விநியோகப்பத்திற்கு வந்து விடுவேன். இப்பணி எனது பிடித்திருக்கிறது. அதனால் பணியினை மேற்கொண்டு வருகின்றேன். குடும்ப பெண்களாலும் முன்மாதிரியாக வாழ முடியும் அதற்கு எனது கணவரும் / மகனும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

உப்பு வித்தாதான் உணவு; ஆராயி

கோவில்களில் வேண்டுதலுக்காக உப்பு, மிளகு, விற்கும் ஆராயி பேசுகையில் உப்பு வித்து தான் உணவு உண்ண வேண்டும். நம்ம உழைத்தால் நமக்கு காசு. அனைவரும் உழைத்து வாழனும், பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்றார்.

 

மலர் விற்றாவது மகளை ஆட்சியராக்குவேன்

விடியற்காலை எழுந்து வீட்டு பணிகளை முடித்து வீதியில் வந்து மலர் விற்கின்றோம்.கோவிலுக்கும் செல்வோர் வாங்கி செல்வார்கள் காலையிலிருந்து இரவு வரை விற்பனையில் ஈடுபட்டால் 500 ருபாய் கிடைக்கும் அதில் வீடு தேவைகளை பூத்திசெய்து பிள்ளைகளையும் படிக்க வைக்கின்றேன் .தற்போது தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் எனது மக்கள் படிக்கிறாள். மலர் விற்றாவது மாவட்ட ஆட்சியாளராக ஆக்குவேன். அதுவே எனது லட்சியம் என கூறினார்.

கூட்டுறவே நாட்டுயர்வு மாதவி

மூங்கில் கூடைபின்னும் மாதவி பேசுகையில் சாலையோரமே மூங்கில் கூடை பின்னி விற்பனை செய்கிறோம் .விற்பனை செய்கையில் நாங்கள் ஒரு விலையை நிர்ணயித்தால் வாங்கும் பயனாளிகள் பேரம் பேசி குறைந்த விலைக்கு தான் கேட்பார்கள்.அசல் தொகையை விட சற்றே லாபம் கிடைத்தால் விற்று விடுவோம் .நானும் எனது கணவரும் இணைந்தே செயல்படுகிறோம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ஆணும் பெண்ணும் சாதிக்கலாம் என்றார் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு லெட்சுமி

கம்பங்கூழ் விற்கும் லெட்சுமி பேசுகையில் , வறுமையில் வாழ்க்கை ஒரு போர்களம் தான். ஆனால் வாழ்ந்து தான் பார்க்கணும் எனது கணவர் தேனீர் விற்க நான் கூழ் விற்கின்றேன்.கஷ்டப்பட்டு காசு சம்பாரித்து எனது பிள்ளைகளை படிக்க வைக்கின்றேன் .தற்போழுது எனது மகன் தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற இருக்கின்றார் .வீட்டில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றார்.

முழு நாளும் இங்கயே நின்னாத எனக்கு சாப்பாடு …

“எனக்கு வயசாகிடுச்சுப்பா…ரொம்ப பசிக்குது…காலைல இருந்து சாப்படல”ன்னு தினமும் நாம சிக்னல்ல நிக்கும்போதோ, பஸ்ஸ்டாப்லயோ யாரோ ஒரு பாட்டியையோ, தாத்தாவையோ பாக்காத நாளே இல்ல… இந்த தள்ளாத வயசிலயும் கூட காலையில 7 மணிக்கு மலைக்கோட்டை வீதில நின்னு கர்சிஃப் விக்க ஆரமிச்சா வீதில எல்லாக்கடையும் மூடும்போதுதான் வீட்டுக்கு நடையகட்றங்க நம்ம சரோஜா பாட்டி…

என்னப்பாட்டி எவ்வளவு நேரம் நிக்கற வீட்டுக்குபோலயனு கேக்க “இல்ல தாயி காலைல இருந்து எந்த கடை முன்னாடியும் யாரும் நிக்கவிடல, நானும் 2 கர்சிஃப் வித்துடும்னு காலுகடுக்க காலையில இருந்து நிக்கிறன்ம்மா…இப்பதான் இந்த கடைக்கறாரு இங்க நிக்கவிட்ருக்காரு…வித்தவுடனே போயிடுவேன்…3 கர்சிஃப் 30 ரூவாதா வாங்கிறியாமா?! “சரி பாட்டி உங்களுக்கு வீடுல இல்லயா பிள்ளைங்கலா என்ன பண்ணறங்க?”,வீடு மலைக்கோட்டைக்கி பின்னாடி ஒரு குடிசைல இருக்கம்மா…1000ரூபா வாடகை முழு நாளும் இங்கயே நின்னாத எனக்கு சாப்பாடு, எனக்கு 9 பிள்ளைங்கமா, ரெண்டு பொண்ணு மத்ததலாம் பசங்க…எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு அதனால என்ன விட்டுட்டு போய்ட்டாங்க தாயி”னு சொல்லி முடிக்கறப்போ சரோஜா பாட்டியோட சேத்து நம்ம கண்ணுலயும் கண்ணீர்வருது…

90 வயதிலும் விடா முயற்சியில் தனது சொந்த உழைப்பில் பிழைத்து கொண்டிருக்கும் சரோஜா பாட்டிய பாக்க வியப்புடன் கூடிய பெருமிதம் கொள்கிற அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்…

 

.

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.