அஞ்சறை பெட்டி கிரிஜா…

0

அஞ்சறைப்பெட்டி கிரிஜா என்ற உடன் நாமெல்லாம் ஒரு 30 வயதை கடந்த பெண்ணாக இருப்பார் என்ற கற்பனையில் இருந்திருப்போம். நாங்களும் அதே கற்பனையில் தான் நம்மதிருச்சியின் அலைவரிசையின் ஆளுமைகள் தொடருக்காக ஹலோ எஃப்ம் ஆர்.ஜே கிரிஜாவை சந்தித்தோம், ஆனால் நமது கற்பனையில் முற்றிலும் வேறுபட்ட இளமையான சுட்டிதான் ஆர்.ஜே கிரிஜா…


உங்களைப்பற்றி?
கிரிஜா ஒரு சுதந்திரமான பெண். அவளுக்கு பிடிச்ச விஷயங்களை திமிர் கலந்த தைரியத்தோட செய்பவள், அதற்கு காரணம் அவள் பின்னாடி பெரிய பலமாக இருக்கும் அவளோட குடும்பம் தான்.

தங்களது குடும்பம் பற்றி?
அப்பா ஜெய்கண்ணன். அம்மா விஜயா. சொந்த ஊரு நெய்வேலி.அப்பா அங்கே சென்ரல் கவர்ன்மென்ட் வேலைல இருக்காங்க. தம்பிங்க ரெண்டுபேருமே காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க. அப்பா இப்பவரை என்னை நீ கவர்மென்ட் வேலைக்கு படிக்கலாமேன்னு சொல்லுவாரு, ஆனா என்னை அதுக்காக கட்டாயப்படுத்துனதில்ல. பணத்துக்காக நீ வேலைக்கு போக வேணாம். உனக்கு என்ன விருப்பமோ அத செய்னு தான் சொல்லுவாங்க.

ஆர்.ஜேவாவதற்கு முன்பு உங்களுடைய கனவு என்னவாக இருந்தது? நீங்கள் ஆர்.ஜேவாக ஆனது எப்படி?
நான் திருச்சி காவேரி காலேஜ்ல தான் பி.சி.ஏ படிச்சேன். நான் எப்போதுமே கிளாஸ்ல இருக்கமாட்டேன், எப்போதுமே கலை சம்பந்தமான துறையில்தான் ஒன்றி இருப்பேன். பேச்சுப்போட்டிகள்ல அதிகமாக கலந்துட்டு நிறைய பரிசுகள்லாம் வாங்கிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே மீடியாதான் ஆர்வம், ஆனா ஆர்.ஜேவாகனுன்றது என்னுடைய கனவு கிடையாது.

ஆர்.ஜேவானது எப்படி?
காவேரி காலேஜ்ல படிச்சுட்டு இருந்தப்போ, சும்மா ட்ரை பண்ணாலாமேன்னு ஹலோ எப்ஃம் ஆடிசன் வந்தேன், செலக்ட் ஆனேன். ஜில்லுனு ஒரு காலைதான் நான் முதல்ல பண்ண ஷோ. அப்பறம் பிஷப் ஹீபர் காலேஜ்ல எம்.எஸ்.சி படிச்சிட்டு இருக்கும் போதே முழுநேர ஆர்.ஜேவா வேலைக்கு சேர்ந்திட்டேன். கொஞ்ச நாள் புரோமோ புரடியூசிங் குரூப்பல இருந்தேன். கடைசி 2 வருசமாதான் “அஞ்சறைப்பெட்டி” ஷோ பண்ணிட்டு இருக்கேன்.
நான் ஆர்.ஜேவாக இருக்கேனு சொல்லறப்போ சுத்தி இருக்கவங்க

உங்கள எப்படி நடத்தறாங்க?
நான் பெரும்பாலான இடத்தில நான் ஆர்.ஜேவா இருக்கேன்னு சொல்லமாட்டேன். இங்கதான் பக்கத்தில ஒரு கம்பெனில வேலைபாக்கிறேன், இல்ல படிக்கறேனு சொல்லுவேன், ஏன்னா ஆர்.ஜேன்னு சொன்னாலே போதும் உடனே “எங்க நீங்க

ஆர்.ஜேன்னு சொல்றிங்க?! பேசிக்காட்டுங்க?! பேசிக்காட்டுங்க?!”னு எந்த இடத்தில வேணாலும் கேப்பாங்க. அதனாலேயே நான் ஆர்.ஜேன்னு என்னை அறிமுகப்படுத்திக்கறது இல்ல.

உங்களுக்கு அன்புத்தொல்லைகள் தரும் நேயர்கள் யாராவது இருக்காங்களா?
அன்புத்தொல்லைலாம் இல்ல. தஞ்சாவூர் மாவட்டத்தில இருந்து சுதான்னு ஒரு நேயர் பேசுவாங்க. ஒரு நாள் என்னோட ஷோவ மிஸ் பண்ணாலும் மறுநாள் போன் பண்ணி “ கிரிஜா நான் நேத்து உங்க ஷோ மிஸ் பண்ணிட்டேன், அந்த டிப்ஸ்ல சொல்லமுடியுமா” கேப்பாங்க. நான் மறந்துட்டாலும் தேடி பாத்துட்டு சொல்லுவேன். இப்படி எல்லாருடைய வீட்டுக்குள்ளயும் நுழையிறதுக்கான வாய்ப்பு அஞ்சறை பெட்டி ஷோ மூலமாதான் எனக்கு கிடைச்சது.
இந்த காலத்து பெண்கள் சமைப்பதில்லைன்னு சொல்றாங்க,

அதை எப்படி பாக்கறிங்க?
ஒட்டு மொத்தமா யாருமே சமைக்கறதில்லன்னு சொல்லிட முடியாது. சூப்பரா சமைக்ககூடிய பொண்ணுங்களும் இருக்காங்க, அதை அவங்களோட பேஸ்புக், இன்ஸ்டாகிராம்ன்னு எல்லாத்திலயும் போடறாங்க. சமையல்ங்கிறது ஒரு கலை விருப்பப்பட்டு பண்ணனும். அதை யாரு வேணாலும் பண்ணாலாம்.

நீங்க நல்ல சமைப்பீங்களா?
ஹா ஹா என சிரித்தபடி…எனக்கு சுடுதண்ணி கூட வைக்கத்தெரியாது. காலேஜ்ல இருந்து இப்போ வரை நான் ஹாஸ்டல்ல தான் இருக்கேன். சமைக்கறதுக்கான சூழ்நிலை வந்ததும் இல்ல, ஒருவேளை இனி நீ சமைச்சாதான் உனக்கு சாப்பாடுனு சொன்னா கண்டிப்ப சமைப்பேன்.ஆனா என் கூட வொர்க்பண்ற எல்லாருமே சொல்லுவாங்க, கிரிஜா சமைக்க ஆரமிச்சா சூப்பரான ஷெஃப்ஆ இருப்பான்னு. ஏன்னா நான் கத்துக்கிட்டது நிறைய இருக்கு. நான் வீட்டுக்கு போனாக் கூட அம்மாவுக்கு எதாவது சமையல்ல டவுட் வந்ததுனா, ஐடியா கொடுப்பேன். முன்னாடிமாதிரி சமைக்கிறது இப்போ பெரிய கஷ்டமே இல்ல. யூடியூப், கூகுள்னு எங்க வேணாலும், நம்மலால ஈசியா நிறைய விஷயங்கள் கத்துக்கமுடியும்.

அஞ்சறை பெட்டி ஷோவில் தரும் குறிப்புகள் உங்களுக்கு எங்க இருந்து கிடைக்கும்?
யாராவது சொல்றது, கேட்டது, படிக்கறதுதான் அஞ்சறை பெட்டி ஷோக்கான குறிப்புகள்.

ஆர்.ஜேக்கான தகுதிகள் என்ன?
“Radio is the medium to share the positivity”ன்னு சொல்லுவாங்க, ரேடியோனா நாம என்னவேனாலும் பேசனும்கிறது கிடையாது. ஆர்.ஜேக்களுக்கு வார்த்தைகளில் கட்டுப்பாடும் கவனமும் வேணும், வார்த்தைகள் கத்திமாதி அதை சரியாக பயன்படுத்தனும். நடுநிலைமை தன்மை மாறாமல் இருக்கனும்.

அடுத்தது என்ன?
அந்த தேடலை நோக்கிதான் நானும் இருக்கேன், தேடிக்கிட்டே இருக்கேன்.

-சுபா ராஜேந்திரன்

Leave A Reply

Your email address will not be published.