முத்தமிழ் முன்னோடி… புலவர். கோ.சந்திரசேகர் ஐயா

அலைவரிசையின் ஆளுமைகள்

0
full

ஒரு நிமிடம் (மணித்துளி) முழுக்க பிறமொழிக் கலக்காத நல்ல தமிழில் பேசி முடிக்கவேண்டும். அதுவும் ஒரு திருக்குறளை கூறி பொருளையும் கூறிவிட்டு போட்டியில் உள் நுழையவேண்டும்.

பிறமொழிக் கலக்காமல் ஒரு மணித்துளி பேசினால் வெற்றி. வெற்றி பெற்றவர் பிடித்தபாடல் தான் அவருக்கு பரிசு.
வானொலி அலைவரிசை ஆளுமைகளின் மத்தியில் ‘வணக்கத்தை’ வழக்கமாகவும் ‘சார்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘ஐயா’ என்ற தமிழ்ச் சொல்லை அன்பாகவும் கூற வைத்த பெருமை அகில இந்திய வானொலி திருச்சி பண்பலை நிகழ்ச்சி அறிவிப்பாளர் பண்முக வித்தகர் புலவர் கோ.சந்திரசேகர் ஐயா அவர்களை சந்தித்தோம்.

பேச ஆரம்பித்தவுடனே என்ன – என்னை பற்றி, என் குடும்பம், எப்படி பணியில் சேர்ந்தேன் இதைத்தானே கேட்கபோறீங்க … ஒரு ஊர்ல ஒரு ராஜா, ராஜாவுக்கு ஒரு ராணி இந்த நடைமுறையே வழக்கமாக எழுதாமல் வித்தியாசமாக எழுதலாமே !!!

poster

நானே ஒரு சம்பவத்தை சொல்கிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பார்த்தசாரதி என்ற ஒரு பேராசிரியர். அகில இந்திய வானொலியில் வாழ்க்கை கல்விக்காக நிகழ்ச்சி அவரிடம் நான் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்டேன்.

“பல்கலைக்கழகங்கள் படித்தவருக்கு மட்டுமே வழிகாட்டுமா? பாமரர்கள் பக்கம் அவர்கள் திரும்பி பார்ப்பது குறைவாக இருக்கிறதே?’’ என்று கேட்டதும் அவருக்கு கொஞ்சம் சினம் வந்தது. பல்கலைக் கழகங்கள் ஏழைகளையும் படிக்க வைக்கிறது என்று நான் கேட்ட கேள்விக்கு ஒன்பது நிமிடங்கள் பதிலளித்தார்.
பேட்டியின் முடிவில் அவர் சொன்னாரு ‘ நீங்க என்ன கொஞ்சம்
சீண்டிட்டீங்களே’ என்றார். அதற்கு நான் கூறினேன் ‘ இல்லை ஐயா நான் சீண்டுவதற்காக கேட்கவில்லை,உங்களை தூண்டுவதற்காக மட்டுமே கேட்டேன்’ என்றேன்.

அதேபோல் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ (அ) பேட்டிகளின் போதோ குறுக்கே குறுக்கே கேள்வி கேட்ககூடாது.எங்கு வினா தேவையோ அங்கு கேட்கவேண்டும் என்றபடி தொடர்ந்தார்.

வானொலி மீது எப்படி ஆர்வம்? பொழுதுபோக்கு ஊடகத்தில் பணியாற்றிவரும் தங்களுக்கு என்ன தான் பொழுதுபோக்கு?
ஆறாம் வகுப்பு படிக்கும் போது வானொலி கேட்க ஆரம்பித்தேன்.அந்த காலத்தில் வானொலியும், மிதிவண்டியும் வைத்திருந்தாலே பணக்காரர்களாக பார்க்கப்பட்ட காலம். திருவாரூர்ல தேநீர்கடைல இலங்கை வானொலியில் K.S.ராஜா, B.H.அப்துல் ஹமீத் ஆகியோரின் குரலில் மயங்கியவன். ஆறாம் வகுப்பிலேயே நூலக உறுப்பினரானேன். என்னை பொறுத்தவரை பொழுதுபோக்கு என்பது பொழுதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது.

ஐயா என்ற சொல் மீது ஏன் அப்படி ஒரு ஈர்ப்பு ?
BBC லண்டன் “தமிழோசை” என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சங்கர் அண்ணா என்பவர் நேயர்களை, சக பணியாளர்களை ‘ஐயா’ என்று அழைப்பார். அதை கேட்கும் போதே அவ்வளவு இனிமையாக இருக்கும். மேலும் வானொலியில் அல்லது பிற ஊடகவாயிலாக நாம் எளிய மக்களிடம் தொடர்பு கொள்ளும் போது, உதாரணமா ஒரு விவசாயிக்கிட்ட போய் ‘சார்’ன்னு அழைத்தா அவரு என்னடா நம்மள ‘சார்’ன்னு கூப்பிடுறாங்களேன்னு அவருக்கு ஒருவித தயக்கம் வரும். ஒரு வயதான எளிமையான பாட்டிய போய் நீங்க ‘மேடம்’ன்னு அழைத்தா, அந்த அம்மா விழிப்பாங்க. அந்த சங்கடங்களை தவிர்க்கத்தான் நான் என் உடன் பணிபுரியும் எல்லாரையும் ‘ஐயா’ என்று அழைத்தேன்.

தமிழ் மொழி மீதான ஆர்வம் எப்படி ?
1969ல் வேலைக்கு வந்தேன். என் 19 வயதில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றினேன். 14 வருடங்கள் ஆசிரியராக திருவாரூரில் பணியாற்றினேன். என் முதல் மாத சம்பளத்தில் தவணை முறையில் வானொலி பெட்டி வாங்கினேன்.

புலவர் தேர்வுக்கு படிப்பேன், படித்துக்கொண்டு இருக்கும்போதே வானொலியில் என்ன பாடல் ஒலிக்கிறது என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும். சிறுவயதிலேயே தமிழ் மொழி மீதான ஆர்வமும் அதன் மீதான சுவையும் அதிகம் எனக்கு. தமிழில் தொல்காப்பியம் பழைய இலக்கண நூல், அதையடுத்து நன்னூல். அதற்கு அடுத்தபடியாக ‘தமிழ்நூல்’ என்னும் இலக்கண நூல். அதை எழுதிய சரவணத்தமிழன் (திருவாரூர்) ஐயா திருவாரூரில் இயற்றமிழ் பயின்றகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார். அவரிடம் கற்றுக்கொண்ட தமிழ், உலகநடப்புகள் போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். தமிழின் இனிமைக்காக படித்தேன். அவரிடம் படித்த தமிழ் படிப்பே என்னை வானொலி பணியில் அமர்த்தியது.

வானொலி அறிவிப்பாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? சுவையான (அ) சமாளித்த நிகழ்ச்சி நினைவுகள் ஏதாவது ?

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்.

துன்பத்தை வெல்ல நகைச்சுவையே சிறந்த வழி. வயதில் முதிர்ந்தவர்கள், வாழ்க்கையில் பக்குவப்பட்டவர்கள் துன்பத்தை நோக்கி உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்? என்ற வினாவை எழுப்புவார்கள். எனவே துன்பம் துன்பமாக அவர்களுக்கு இருக்காது. திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள். இவை மூன்றும் வாழ்க்கை என்னும் வட்டம் தாண்டிய சிந்தனைகளை நம்மில் உருவாக்கும்.
வானொலியில் நேரடி ஒளிபரப்பில் யார் எப்படி கேள்விகள் கேட்பாங்கன்னு தெரியாது.ஒரு நிகழ்ச்சியை கூறுகிறேன்,ஒருவர் என்னிடம் கேட்டார். திருக்குறளில் ஒரு குறளில் ,

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.

அது எப்படி ஐயா வாயில் ஊறி வரும் நீர் பாலும், தேனும் கலந்ததுபோல் இனிக்கும்? என்று கேட்டார்

திருக்குறளில் இன்பத்துப்பாலை குடும்பத்தோடு படிக்கலாம்.நான் அந்த நேயரிடம், ஐயா உங்களுக்கு திருமணம் ஆகிட்டதா என்று கேட்டேன்? அவரும் ம்ம் ஆகிட்டது என்றார். குழந்தைகள் உள்ளதா என்றேன்? இருக்கிறார்கள் என்றார்.

half 2

பிறகு நான் கூறினேன்,வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பல பக்கங்களை படிக்காமலே நீங்க தாண்டிட்டீங்க, நீங்க இன்னும் படிக்க வேண்டியிருக்கு. இந்த அளவுக்கு தான் நான் பதில்கூற முடியும் ஊடகத்தில், இந்த களத்தில் இதற்குமேல் நான் பதில் கூற முடியாது என்று கூறினேன்.

நிகழ்ச்சியில் அல்லது பொது வாழ்வில் இடையில் தவறுகள் வந்தால் ஒத்துக்கொள்ளுங்கள். நம் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்வதற்கு துணிவு வேண்டும்.

ஒரு தவறு நேரும் போது சாரி (sorry) என்று எளிதாக சொல்வோம். ஆனால் மன்னிப்பு என்ற சொல்லை சொல்ல மாட்டோம். ஆனால் பொது இடத்தில் மன்னிப்பு சொல்ல மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை இனித்திடும் தனித் தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பில் இருக்கும்போது என் மனைவி ICU வில் இருந்தாங்க, நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால் அதில் நகைச்சுவை கூறிவிட்டு நானும் சிரித்தேன்.அதற்கு உடன் பணிபுரிபவர்கள் கேட்டாங்க நகைச்சுவையை கேட்டு மத்தவங்கதானே சிரிக்கனும், கூறிவிட்டு நீங்களே சிரித்தா எப்படி! எப்படி துணைவியார் ICU ல இருக்கும்போது சிரிக்க முடியுது? என்று கேப்பாங்க. அதற்கு நான் கூறினேன் ,

பல நேரங்களில் ஊடங்களில் வேடமிடதான் வேண்டும். நான் வேடம் கட்டிட்டேன். என் சுகதுக்கத்தை மறந்து என் பணியை நான் சிறப்பாக செய்தாக வேண்டும் என்றேன்.

இவ்வளவு பக்குவம் எப்படி ?
எனக்கு தமிழ் படித்ததால் வந்த பக்குவம். இன்பத்தை இன்பமாக எடுத்துக்கொள்வதில்லை அதேபோல் துன்பம் துன்பமாக இருப்பதில்லை. நம் வாழ்வில் இன்பம் – துன்பம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வானொலி பணியில் சேர்ந்த அனுபவம் பற்றி ?
அன்னக்கி மாலை 6மணி இருக்கும். எப்பவும் மாலைல வேலைவாய்ப்பு செய்திகள் வாசிப்பாங்க. அதில் தொடர்ந்து வானொலி அறிவிப்பாளராக பணியில் சேர பட்டப்படிப்பு பெற்றிருக்கனும். தமிழ் ஆர்வம். நல்ல குரல். நாட்டுநடப்புகள் தெரியனும் என்ற அறிவிப்பு வந்துட்டே இருந்தது.

நான் என்னடா திருப்பி திருப்பி இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வருதே ஆளே கிடைக்கலபோல, சரி நாம ஒரு விண்ணப்பம் போடுவோம்ன்னு போட்டேன். நேர்முகத்தேர்வில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கூறுவது சிறந்தது. ஆனால் சரியான பதிலை காட்டிலும் அவர்கள் மகிழும் படியாக பதில் சொல்வதும் சிறந்தது. நான் இதில் இரண்டாவது வகையை தேர்ந்தேடுத்தேன்.

என் நேர்முகத்தேர்வில், உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேள்வி கேட்டார்கள். பொதுவாக இப்படி ஒரு கேள்வி நம்மை நோக்கிவந்தால் 1, 2 என்று பதில் கூறுவோம்.அதைதான் என்னிடம் வினா எழுப்பியவர்களும் எதிர்பார்த்திருப்பார்கள்.ஆனால் நான் கூறினேன் , எனக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் நாங்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று கூறினேன்.

பிறகு சில வாரம் (கிழமை-தமிழ்ச்சொல்) கழித்து நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி என்னை அழைத்தார்கள். வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டேன்.

ஆசிரியர் பணியை விட்டு வானொலி பணியை ஏற்றேன். ஆசிரியர் பணி என்பது ஒரு சிறுவட்டம் ஆனால் வானொலி பணி பெரிய வட்டம் அதனால் 14 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர் பணியை விட்டு சேர்ந்தேன். 27 ஆண்டுகள் வானொலியில் பணியாற்றினேன்.எல்லா பணிகளையும் செய்ய கற்றுக்கொண்டேன். நாம் தேர்ந்தெடுத்த துறையில் எந்த வேலைக்கொடுத்தாலும் நமக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவாக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

மிகுந்த ஆசை எதன் மீது ?
இனிய தமிழ் மீது ஆசை. “ சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும், எந்தன் சாம்பலிலும் தமிழ் மணத்து வேகவேண்டும்’’ என்ற ஈழத்து கவிஞனின் வார்த்தைகளை உதிர்த்தார்.

மறக்கமுடியாத பேட்டி ?
நான் வானொலியில் பலரை பேட்டி கண்டிருக்கிறேன்.மிகவும் மறக்கமுடியாத பேட்டி பின்னணி பாடகி பி.சுசீலா அம்மாவை பேட்டிக்கண்டது தான். அவர்களின் தெளிவான குரலுக்கு நான் அடிமை. இறுதியில் பேட்டியின் முடிவில் அவரிடமே நான் கூறினேன் எனக்கு ஒரு ஆசை உண்டு நான் மறையும் தருவாயில் தங்களின் பாடலைக்கேட்டுக்கொண்டே என் உயிர் பிரியவேண்டும் என்று பி.சுசீலா அம்மையாரிடமே கூறினேன். அதுவே என் மறக்கமுடியாத பேட்டி. அவரின் பாடல்களே என் விருப்ப பாடல்கள் என்றார்.

வானொலி வரலாற்றில் அனைவரையும் கவர்ந்த தங்கள் பணிநிறைவு விழா பற்றி?
வானொலி வரலாற்றில் பணிநிறைவிற்கான பாராட்டுவிழா கொண்டாடப்பட்டது எனக்கே என்று நினைக்கிறேன். 2009 ல், 9 மாவட்டங்கள் சேர்ந்த நேயர்கள் கூடி மதியம் 3 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. பரிசுப்பொருட்கள், பொன்னாடைகள், கலை நிகழ்ச்சி பலரின் உரையாடல்கள் என விழா சிறப்படைந்தது. பணிநிறைவுக்கு பிறகும் தற்போதும் வானொலி திருச்சி-1-ல் கிராம சமுதாய நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிக்கொண்டு வருகிறேன்.

மேலும் தமிழுக்கு சாதி கிடையாது. சாதியை ஒழித்தால் தமிழும் வளரும். தமிழனும் உயர்வான். சாதி மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் அவசியம். என் பிள்ளைகள் நால்வருக்கும் சாதி மறுப்பு மற்றும் பிற மதத்தாரை தான் திருமணம் செய்தேன். அதில் எனக்கு பெருமையே. சாதி என்ற சொல் திருக்குறளில் எங்குமே இல்லை. மேலும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை சூட்டுங்கள்.என் மகன்களுக்கு தமிழ்வளவன், தமிழ்ச்செழியன் என்றும் பெண்களுக்கு நிலவழகி, கயல்விழி என்றும் தமிழின் சிறப்பு எழுத்து “ழ “ வரும்படி பெயரிட்டேன். இயன்றவரை பிறருக்கு உதவுங்கள். புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படியுங்கள். அது அறிவின் முதலீடு. நான் வாழும் காலத்தில் பேசப்படுகிறேன். பின் என்னவோ பார்ப்போம் …

தங்களின் எதிர்காலத்திட்டம் ?
ஒரு கவிதை நூல் எழுதவேண்டும், நகைச்சுவை துணுக்குகள் கொண்ட நூல் எழுதனும் என்றார் தன் அறையை சுற்றிலும் அலங்கரித்திருந்த புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்து…

சந்திப்பு, படம்: ரா.நிருபன்.

half 1

Leave A Reply

Your email address will not be published.