திருச்சி நகருக்கு ஒளிதந்த சேஷசாயி இரட்டையர்கள்

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….
திருச்சிராப்பள்ளி நகருக்கு முதன்முதல் மின் ஒளியை வழங்கிய தென்னிந்திய மின்சார வழங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.சேஷசாயி அவர்கள் 1890 ஆம் ஆண்டு வாளாடி என்ற கிராமத்தில் பிறந்தவர். மெட்ரிகுலேஷன் வரை மட்டுமே பயின்றவர்.
தூயவளனார் உயர்நிலைப்பள்ளியில் பாதிரியார்களின் நன் மதிப்பாலும், உதவித் தொகையினாலும் படித்து முன்னேறியவர். வி.சேஷசாயினுடைய பள்ளித் தோழராகவும், குடும்ப நண்பராகவும் இருந்தவர் தான் ஆர்.சேஷசாயி. இருவரும் இணைந்து மின்சார இணைப்புப் பயிற்சியினையும், தானியங்கி பொறியியல் பயிற்சியினையும் எந்திரத் தொழில் நுட்பப் பயிற்சிகளையும் தமது சொந்த முயற்சியினால் கற்றுத் தேறினார்கள்.

சேஷசாயி சகோதரர்கள் பொறியியல் பணிமனை என்ற சிறிய தொழிற்கூடத்தில் தொழில் தொடங்கினார்கள். பேட்டரிகள் உற்பத்தி செய்து ஐஸ் தயாரிக்கும் ஆலை ஒன்றையும் இவர்கள் நடத்தி வந்தனர்.
இராமேசுவரம், மதுரை போன்ற பெரிய கோவில்களிலும், தேவகோட்டை, காரைக்குடி, கானாடு காத்தான் முதலிய நகரத்தார் மாளிகைகளிலும் மின் விளக்கு அமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ந்து கார் விற்பனை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர். 1927 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி, ரங்கம் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் உரிமத்தை அரசிடமிருந்து பெற்று S.M.E.S.C என்ற நிறுவனத்தை 1974 வரை திறம்பட நடத்தினார்கள். 1934ஆம் ஆண்டில் 100 கி.வாட் விசை கொண்டதாக இருந்த இவரது நிறுவனம் பின்னர் 1200 கி.வாட் விசைத் திறனாகக் கொண்டு தென்னிந்தியாவின் மிகப் பெரும் டீசல் நிலையமாக விளங்கியது.
பைக்காரா நீர் மின்திட்டத்தை வடிவமைத்த கனடா நாட்டு பொறியியல் நிபுணர் ஹென்றி கோவார்டு என்பவர் சேஷசாயி சகோதரர்களின் உதவியைப் பெரிதும் நாடியுள்ளார். 1941ஆம் ஆண்டில் சர்சி. பி. ராமசாமி அய்யரின் வேண்டுகோளை ஏற்றுச் சேஷசாயி சகோதரர்கள் 50,000 டன் உற்பத்தி செய்யும் சல்பெட் தொழிற்சாலையைத் தொடங்கினர்.
இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து சல்பேட் தொழிற்சாலைக்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுவந்தனர். அமெரிக்கா, கனடா, நாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் போது மின்சாரம் செலுத்தப் பயன்படும் அலுமினியக்கம்பித் தொழிற்சாலை பற்றிய தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் தொடங்க சேஷசாயி திட்டமிட்டனர்.
மாவட்டத்தில் ஜிப்சம் அகழ்ந்தெடுக்கும் தொழிலையும் நிறுவினர். இதனால் தான் பிற்காலத்தில் டால்மியாபுரத்தில் மிகப் பெரும் சிமிண்ட் ஆலை ஏற்பட்டது.
அதிராம்பட்டினம், வேதாரண்யம் இடங்களில் உப்புத் தயாரிக்கும் தொழிலையும் திருவாங்கூரில் மரவேலைக்குப் பயன்படும் மரங்களை பதப்படுத்தும் தொழிலையும், சங்ககிரியில் சுண்ணாம்பைப் பதப்படுத்தும் தொழிலையும், திறம்பட நடத்தி வந்தனர். 1959 ஆம் ஆண்டில் நெய்வேலியில் சக்தி வாய்ந்த இன்ஸ்லேட்டர் தொழிற்சாலையை நிறுவினர். ஈரோடு பள்ளிப் பாளையத்தில் சேஷாயி காகிதத் தொழிற்சாலையைத் தொடங்கினர். தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் சேஷசாயி இரட்டையர்களின் சாதனை போற்றத்தக்கதாகும்.
