சாயங்காலம் 4 மணிக்கு தில்லுமுல்லு செய்வேன்

அலைவரிசையின் ஆளுமைகள் - 5

0
1

தினமும் காலையில் ரேடியோல “குட் மானிக், குட் குட் குட் மானிக்… வணக்கம் திருச்சி’’ அப்படின்னு ஒரு இளமையான, துள்ளலான குரல் நமக்கு கேட்கும்… எங்க சிக்னல் பிரச்சனை, ரோடு பிரச்சனை, தண்ணி பிரச்சனைன்னு திருச்சில உள்ள பொதுமக்கள் கிட்ட கருத்துக்கேட்டு தாறு மாறா ஷோ பண்ற சூரியன் fm ஆர்.ஜே. சரவணனை நம்ம திருச்சிக்காக சந்தித்தோம்.

தங்கள் மற்றும் தங்கள் குடும்பம் பற்றி?
எனக்கு சொந்த ஊரு மதுரை. அப்பா அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். நான் ஸ்கூலிங் பண்ணதெல்லாம் தமிழ் மீடியம் தான். நமக்காக நாளு பேர் கைதட்ற சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும். புத்தகங்கள் நிறைய படிப்பேன். எனக்கு மீடியால விருப்பம் வர காரணம் எங்க அம்மா நிறைய படம் பார்ப்பாங்க. அதை பத்தி அதிகமா பேசுவாங்க. என்னுடைய தாய் மாமா பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் ஞானசம்பந்தன் அவரை தினமும் பாத்து வளர்ந்ததாலே நிறைய கத்துக்கமுடிச்சு.


கல்லூரி காலம் பற்றி?
நத்தம் என்.பீ.ஆர் காலேஜ்ல தான் பி.எஸ்.இ படிச்சேன். காலேஜ் என்.எஸ்.எஸ் மூலமா ஒரு சின்ன கிராமத்தில 7 நாள் அங்கேயே தங்கி தினமும் இரவு நேரங்கள்ல பல குரலில் மிமிக்ரி பண்றது, நிகழ்ச்சி தொகுத்து வழங்கறதுன்னு முதல்ல நான் என்னோட ஆர்வத்தினை நோக்கி பயணம் பண்ண ஆரம்பிச்சேன். கோபிநாத் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்ட நிகழ்ச்சில நான் சேர்மார்க்கெட் பத்தி ஒரு கேள்வி கேட்டேன், என்னைய கூப்பிட்டு மேடையிலே வச்சு பாராட்டினாரு. காலேஜ்ல வீரேந்திர சேவாக், பார்த்திபன் சார், என்னோட மாமா ஞானசபந்தம் இவங்களாம் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்ட நிகழ்ச்சியை நானே தொகுத்து வழங்கினேன். அந்த தருணங்கள் எல்லாம் என்னால மறக்கவே முடியாதது.

ஆர்.ஜே பணிக்கு வந்தது எப்படி?
நான் காலேஜ் சேர்றத்துக்கு முன்னாடியே சென்னைல பல ரேடியோ ஸ்டேசன்ல வேலைகேட்டு அலைஞ்சிருக்கேன், வீட்டில உடனே வேலைக்கெல்லாம் போகவேணான்னு சொன்னதால எம்.சி.ஏ சேர்ந்தேன். அப்போ திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பசுமை fm இயற்கை, விவசாயம் சார்ந்த ரேடியோ, அதில வார கடைசி நாட்கள்ல மட்டும் நான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். பெருசா சம்பளம் இல்லன்னாலும், நான் கத்துக்கறத்துக்கான ஒரு இடம் கிடைச்சது, கிட்டத்தட்ட 1 வருடம் வேலை பார்த்தேன். அங்க வேலை பார்த்துட்டு இருக்கும்போதே திருச்சி சூரியன் fmல இன்டர்வியூக்கு வந்தேன். அடுத்த வாரமே கூப்பிட்டு நீங்க வேலைக்கு சேந்துருங்கன்னு சொன்னாங்க.

ஆனா படிச்சிட்டு இருந்ததால என்னால உடனே வேலைக்கு சேர முடியல. சூரியன் fm அமர்நாத் சார், நீ படிச்சு முடிச்சிட்டு வா, உனக்கு கண்டிப்பா இந்த வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினாரு. நான் காலேஜ் முடிச்சேன், 2013 நவம்பர்ல வேலைக்கு சேர்ந்தேன். சாயங்காலம் 4 மணி தில்லுமுல்லு ஷோதான் என்னுடைய முதல் ஷோ சூரியன்fmல, அதுக்கபறம் வணக்கம் திருச்சி, வாட்ஸ் அப் சாய்ஸ் ஷோ ரெண்டும் சேர்த்து பண்ணிட்டு இருந்தேன். இப்போ பிரமோ பிரடியூசரா இருக்கேன்.

2

நிறைய ஷோக்கள் வெளியே தொகுத்து வழங்கிட்டு இருக்கீங்க, அதை பற்றி?
ஆமா, நான் தான் TNPL தமிழ் கமென்டரி பண்ண முதல் ஆர்.ஜே. அது மூலமா பெட்லி, சடகோபன் ரமேஷ், மைக்கேல் பவன்னு நிறையா பேர சந்திக்க முடிஞ்சிச்சு. IPL சென்னை சுப்பர்கிங்ஸ்ல தோனி உள்ள வரப்போ “மகேந்திர சிங் தோனி”னு பாகுபலி ஸ்டைல்ல வெல்கம் பண்ண, தோனி என் கையை தட்டிட்டு சிரிச்சிட்டே போனாரு.திருச்சில இருக்க கார்ப்பரேட் கம்பெனி நிகழ்ச்சிகள்லாம் தொகுத்து வழங்கிட்டிருக்கேன்.

எந்த மாதிரியான புத்தகங்கள் வாசிப்பீங்க?
நம்மை வேறொரு உலகத்துக்கு எடுத்துச்செல்லும் பயணங்கள் தொடர்பான புத்தகங்களை அதிகமா வாசிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனோட புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆர்.ஜேவிற்கான தகுதிகள் என்னென்ன?
லொட லொடன்னு பேசிட்டு இருந்தாலே ஆர்.ஜே ஆயிடலாம்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. அப்படில்லாம் ஒன்னுமே கிடையாது. நீங்க ஒரு ஆர்.ஜேவாக இருக்கனும்னா, எல்லாத்துறைகளை பத்தின அடிப்படை அறிவு இருக்கனும். யாரையும் பிரதிபலிக்காத நமக்கான ஒரு தனித்துவம் இருக்கனும்.

அடுத்தது என்ன?
எனக்கு எழுதுறது ரொம்ப பிடிக்கும். நான் மறைமுகமா சினிமாவில ஒரு அங்கமா இருப்பேன். பயணங்கள் பற்றிய விஷயங்களை நிறைய எழுதனும்னு ஆசைப்படுறேன்.

-சுபா ராஜேந்திரன்

3

Leave A Reply

Your email address will not be published.