கிட்டுமாமா ‘மணிகண்ட பிரபு’

அலைவரிசையின் ஆளுமைகள்-3

0
gif 1

தங்களது பேச்சாற்றாலால் மற்றவர்களை மகிழ்விக்க பிறவி எடுத்தவர்கள் ரேடியோ ஆர்.ஜே.க்கள் எனும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள். தான் என்ன மனநிலையில் இருந்தாலும் அதை பிரதிபலிக்காமல் தன்னைத்தானே தினமும் செதுக்கிக்கொண்டு மக்களை மகிழ்விக்கும் பிரம்மாக்கள். அதன்படி ‘நம்ம திருச்சி’ வாரஇதழ் நிருபர்கள் கூட்டத்துக்கு தெரிந்த ஒரு சில ஆர்.ஜே.க்களின் அனுபவங்களை வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் கிட்டுமாமா என்ற மணிகண்ட பிரபுவை நேரில் சந்தித்தோம். ‘பேச்சு ஒருத்தருக்கு கலைதான் ஆனா அதுவே வாழ்க்கை கிடையாதுனு’ எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு, அவரோட வார்த்தைகளை இப்போ நான் உணர்கிறேன், என்று பேச துவங்கினார்.
தெரிந்து கொள்ளுங்கள் ஆர்.ஜே.க்களை… வாழ்த்துங்கள் அவர்களை… வளருவோம் நாமெல்லாம்…

உங்களைப் பற்றி?
எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி. நான் படித்தது எல்லாம் ஆலங்குடிதான். அற்புதா கல்லூரியில் பி.பி.ஏ முடித்தேன், இப்போ எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.அப்பா,அம்மா இரண்டு பேருமே அரசு ஊழியர்கள் தான்.

பேச்சு திறமை நம்மிடம் இருக்குனு நீங்க உணர்ந்தது எப்போ?
எனக்கு சின்னவயசுல இருந்தே படிப்பவிட பேச்சுல தான் ஆர்வம் அதிகம். நான் இதுவரை பரிசு வாங்கின புத்தகங்களும் பதக்கங்களுமே என்னோட வீட்டுல 3 பெட்டியில இருக்கு. நான் தினமும் வீட்டுல பெரியவங்ககிட்ட தான் நிறைய கத்துக்கிட்டேன், அப்பாவோட கருத்துக்களும் எனக்கு பிடிக்கும். பள்ளி காலங்களிலிருந்தே அய்யா முத்துநிலவன், சாத்தோ அந்தோணிசாமி என பல தமிழ் ஆசிரியர்கள் தான் என்னை எப்போதுமே பேச்சு போட்டிகளுக்கு ஊக்கப்படுத்துவாங்க. நான் 9-வது படிக்கறப்போ வேறு ஒரு பள்ளிக்கு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டேன்,அங்கு நான் பேசின தலைப்பு வெடிகுண்டு கலாச்சாரத்தைப்பற்றி அதில் நான் பாரதிதாசனின் கவிதையை சற்று மாற்றி “எங்கெங்கும் காணினும் வெடிகுண்டடா, பல கட்டிடங்கள் அதன் கைக்குள்ளடா” என பேசி, முதல் பரிசாக ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை வாங்கினேன், அந்த ப்ளாஸ்டிக் டப்பால 8 வருசமா அதுல நான் உப்பு கொட்டிவச்சிருந்தேன், ஏன்னா நம்ம ஊர்ல ‘உப்பிட்டவரை உள்ள வரை நினை’னு சொல்வாங்க.

gif 3

ஆர்.ஜேவாக தேர்வானது எப்படி? ஆர்.ஜே பணிக்கு முன்னால் உங்களுடைய நாட்கள் எப்படிப்பட்டது?
எனக்கு பாட்டுக்கேட்கவே பிடிக்காது, ஆனா நான் பாட்டுப்போடறேன் நீங்க கேளுங்கனு என்னைய பேசவச்சது சூரியன் fm தான். கல்லூரி முடிச்ச உடனே சென்னையில ஒரு சின்ன பேட்டரி கடையில மேனேஜராக 2 மாதம் வேலை பார்த்தேன், எனக்கான முதல் மாச சம்பளம் 2700 ரூபா. ஜீ.ஆர்.டி ஷோ ரூம்ல ஒரு 28 நாள் சேல்ஸ் மேன் வேலை பார்த்திருக்கேன், அங்க அறிமுகமான கல் விளக்குக்கு ‘குபேர விளக்கு’னு பேர் வச்சது நான் தான். கோக்க-கோலா, ப்ரிட்டானியானு நிறைய கம்பெனில வேலை பாத்திருக்கேன்.

சென்னையில இருந்து சொந்த ஊருக்கு போறதுக்காக திருச்சி பஸ்ஸ்டாண்ட்ல என்னோட நண்பர்கள் விக்டர்,சிராசுதீனை பார்த்தேன்.அவங்கதான் சூரியன் fmக்கு ஆள் எடுக்கறாங்க, நீங்களும் வாங்க போகலாம்னு சொல்லி என்னை கூட்டி போனாங்க. நானும் ஊருக்கு போறதுக்காக எடுத்து வந்த பெட்டியோட ஆடிஷனுக்கு போனேன். என்னை கல்யாணம் பற்றி பேசுங்கனு சொன்னாங்க, நானும் கல்யாணம் பற்றி கொஞ்சம் ஜோக்ஸும் தகவலும் கலந்து வித்தியாசமா சில விஷயங்கள் சொன்னேன், உடனே நீங்க வெயிட் பண்ணுங்க உங்களுக்கு தகவல் வரும்னு சொன்னாங்க, ஒரு மாதம் கழிச்சு நீங்க தேர்வாகிட்டிங்கன்னு தகவல் வந்துச்சு.

பிறகுதான் மதுரையில பயிற்சி காலத்திலயே நானும் அபி மேடமும் சேர்ந்து ஒரு ஷோ பண்ணாலாம்னு முடிவாகி ” கிட்டு மாமா சுசி மாமி” திருச்சி சூரியன் fmல ஆரம்பிச்சோம். அந்த ஷோ மூலமாகத் தான், நாங்க நல்ல பிரபலமானோம். நிறைய நேயர்களும் எங்களுக்கு நண்பர்கள் ஆனாங்க.

gif 4

ஆர்.ஜேவாக இருக்கனும்னா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கனும்,அதுக்கு நீங்க என்னென்ன ஹோம் ஓர்க்கெல்லாம் பண்றீங்க?
ஹோம் ஓர்க்லாம் பெருசா ஒண்ணும் இல்ல. நாம எதையெல்லாம் பாக்கிறமோ, கேட்கிறமோ அதலாம் தான் தகவல், ஆனா நம்மலோட பார்வை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கனும், எந்த தகவலையுமே கிரியேட்டிவ்வாக சொல்றவங்கதான் ஆர்.ஜே.

ஆர்.ஜே ஆகனும்னு நிறைய பேர் கனவுகளோட இருக்காங்க , ஆர்.ஜேக்கான தகுதிகளா நீங்க நினைக்கிறது என்ன?
நாம சொல்ற தகவல் நிறைய பேர்க்கு உதவனும், புதுசு புதுசா நிறைய விஷயம் கிரியேட்டிவா பண்ணணும். ஆர்.ஜேவா இருக்கறதுல பெரிய சவால் என்னென்ன? கேட்கறவங்களுக்கு நாம பேசுறது பிடிக்குதா பிடிக்கலையான்னு தெரியாது, ஆனாலும் நாம பேசனும்.

நீங்க எப்பவாது ஏன் இந்த துறையை தேர்ந்தெடுத்தோம்னு வருத்தப்பட்டிருக்கீங்களா?
நான் இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்காக வருத்தபட்டதில்லை. ‘பேச்சு ஒருத்தருக்கு கலைதான் ஆனா அதுவே வாழ்க்கை கிடையாதுனு’ எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு, அவரோட வார்த்தைகளை இப்போ நான் உணர்கிறேன், பல நேரங்கள்ல நம்மளுடைய வருமான பிரச்சனைகளை சமாளிக்க நம்மளுடைய பேச்சு உதவாது.

உங்களது நண்பர்கள் உங்களை கேலி செய்வதுண்டா?
கேலி செய்யாத நண்பர்களே இல்லை, நான் ஏதாவது பேச ஆரம்பிச்சாலே ‘அய்யோ ஆரம்பிச்சுட்டான்யா ஆர்.ஜே எப்போ நிறுத்துவானு தெரியல’ அப்படியெல்லாம் நிறைய கிண்டல் வரும். எனது நெருங்கிய நண்பன் மாணிக்கம்தான் என்னுடைய எல்லா சுக, துக்கங்களுக்கும் கூட நின்னு, தோள் கொடுத்து பெரிய நம்பிக்கையாக இருப்பவன்.

உங்களோட அடுத்த இலக்கு என்ன?
இப்போ நான் ‘ஸ்பீச் அகாடமி’ ஆரம்பிச்சிருக்கேன்,அதுல பேச்சில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு நல்ல பயிற்சி அளித்து அவங்களை இந்த சமுதாயத்தின் அடுத்தக்கட்ட பேச்சாளர்களாக மாத்தணும்.

-சுபா ராஜேந்திரன்

gif 2

Leave A Reply

Your email address will not be published.